உள்ளூர் முதல் உலக சினிமா வரை: ரசனையை மேம்படுத்தும் ஃபேஸ்புக் குழு

தமிழ்ச் சூழலில் திரைப்படத் திறனாய்விலும், ரசனை மேம்படுத்துதலிலும் பங்கு வகிக்கும் 'வேர்ல்டு மூவீஸ் மியூஸியம்' ஃபேஸ்புக் குழு!

2

புதுப் படங்கள் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் கருத்துப் பகிர்வுகளும், விமர்சனங்களும் குவிய, இன்னொரு பக்கம் சினிமா ஆர்வலர்களால் தினமும் இந்திய சினிமா தொடங்கி உலக சினிமா வரையிலான வெவ்வேறு வகையிலான திரைப்படங்கள் குறித்த அறிமுகங்கள் காணக் கிடைக்கின்றன. இதில், சில ஃபேஸ்புக் குழுமங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தமிழில் பகிரப்படும் ஃபேஸ்புக் குழுமங்களில் நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது 'வேர்ல்டு மூவீஸ் மியூஸியம்' (World Movies Museum).

சிவஷங்கர்
சிவஷங்கர்

ஃபேஸ்புக் குழு தொடங்கி ஒரே ஆண்டில் 27,000 உறுப்பினர்களை வசப்படுத்தியிருப்பதே உலகத் திரைப்பட அருங்காட்சியகத்தின் தீவிர செயல்பாடுகளைக் காட்டுகிறது. இக்குழுவைத் தொடங்கிய சிவஷங்கர் ஒரு குழுவின் ஒருங்கிணைப்பு - நிர்வாகப் பணிக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

உலக திரைப்பட அருங்காட்சியகம் குழுவின் பயணம் குறித்து நம்மிடம் அவர் பகிரும்போது, 

"நம்மை மகிழ்விப்பதில் சினிமாவுக்கு சினிமாவின் பங்கு மிகுதியாகிவிட்டது. 'ஒருவர் பணம் சம்பாதிக்க படம் எடுக்கிறார். நாம் சந்தோஷத்துக்காக படம் பார்க்கிறோம்' என்று ஒரு காலத்தில் தட்டையாக சிந்தித்ததுண்டு. நான் பார்த்த படம் குறித்து நண்பர்களிடம் பேசும்போதுதான் சினிமாவின் அசல் முகத்தைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படித் தொடங்கியதுதான் இந்தப் பயணம்." 

ஒரு பார்வையாளரின் கஷ்டம், கோபம், வெறுப்பு, துன்பம் எல்லாம் இரண்டு மணி நேர படத்தில் முற்றிலும் மறக்கப்படுகிறது; மறைக்கப்படுகிறது. நாம் பார்க்கும் சினிமாவோடும், திரைக் கதாபாத்திரங்களுடனும் பயணிக்கத் தொடங்குவோம். நமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தால் அந்தக் கதாபாத்திரமாகவே நம்மை நிலைநிறுத்திப் பார்ப்போம். நானும் இப்படித்தான்.

தமிழ்ப் படங்களைத் தாண்டி, இந்தியத் திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன். நாளடைவில் அதுவே என்னுடைய ரசனையை மேம்படுத்தி ஒரு சிறப்பான தேடலை உருவாக்கிவிட்டது. நல்ல திரைப்படங்களைத் தேட ஆரம்பித்தேன். அதற்கு மொழி தடையில்லை. இணையமும் ஃபேஸ்புக்கும் பெருமளவில் உதவின. பல தளங்களில் தேடித்தேடி எனக்கு பிடித்த வகையில் படங்களைத் தேர்வு செய்து ரசிக்கத் தொடங்கினேன். நான் மட்டும்தான் இப்படிச் செய்கிறேன் என்று சில நேரங்களில் எண்ணியதும் உண்டு. பிறகுதான் தெரிந்தது, திரைப்பட ரசனை சார்ந்த தேடலில் ஒரு பெரும் படையே ஈடுபட்டு வருகிறது என்று.

ஒத்த ரசனையுள்ள நண்பர்கள் கிடைப்பது வரம். அதைக் காட்டிலும் உயரிய வரமாக, உலகில் வெளிவரும் பல நல்ல படங்களைத் தேடித்தேடி பார்க்கும் நண்பர்கள் நிறையவே அறிமுகம் ஆனார்கள். ஒவ்வொருவரின் ரசனை அடிப்படையில் எழுதப்படும் கட்டுரைகளை படிக்கும்பொழுது நம் மனதிலும் அந்தத் திரைப்படத்தின் தாக்கம் நீங்காது. பல நாடுகளிலும், வெவ்வேறு மொழிகளிலும் நாம் கேட்டிராத எண்ணற்றக் கதைகளைச் சுமந்துகொண்டு ஆண்டுதோறும் திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறந்த படைப்புகளைக் கண்டுகொள்ள முடிகிறது. இதையொட்டிய நம் மக்களின் பதிவைத் தொகுக்கும் எண்ணம் உதித்தது.

நான் ரசித்த திரைப்படங்கள் குறித்து நிறைய எழுதுவேன். சினிமா சார்ந்த நண்பர்களின் எழுத்துக்களை வாசிப்பேன். ஒரு கட்டத்தில் எனது முகநூல் பக்கத்தில் சினிமா குறித்தும், தகவல் தொழிநுட்பம் குறித்து நிறையவே பகிர ஆரம்பித்தேன். நான் எழுதிப் பதிவிட்ட கட்டுரைகளுக்கு நண்பர்களின் கருத்துக்களை படிக்கும்போது எனக்கு பல தகவல்கள் தெரிந்ததுண்டு. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை அம்சங்களையும், நாம் கவனிக்காத பல விஷயங்களையும் அறிந்துகொண்டேன். அவர்களின் கருத்துகளை என்னால் முடிந்த அளவுக்குப் பரவலாக்குவதற்கு ஃபேஸ்புக் குழு ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டேன். 

”அந்த வகையில், திரைப்படக் காதலர்களை இணைத்து நாமும் பயனடைந்து, பலரையும் பயன்பெற செய்ய தொடங்கப்பட்டதே 'உலக திரைப்பட அருங்காட்சியகம்," என்றார்.

குழுவின் சிறப்பு அம்சங்கள்:

* உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த படங்களை அறிமுகப்படுத்துகின்றனர்.
* சினிமா ஆர்வலர்கள் திறனாய்வு சார்ந்த கட்டுரைகளைப் பகிர்கின்றனர்.
* தமிழில் பெரும்பாலான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

* தினமும் 30-க்கும் மேற்பட்ட பதிவுகள் வெளியிடப்படுகின்றன.
* வாரம்தோறும் புதுப் படங்கள் குறித்த தகவல்களும் விவாதமும் தீவிரமாக இடம்பெற்றுள்ளன.
*'Handpicked movies' என்ற பெயரில் குழுவிலேயே சிறப்பு விவாதங்கள் நடக்கின்றன.

* சிறந்தப் பதிவுகளைத் தேர்வுசெய்து பிடிஎஃப் வடிவில் பகிரப்படுகிறது.
* பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் திரையிடல்கள் குறித்த தகவல்கள் பகிரப்படுகிறது.
* சினிமா ஆர்வலர்கள் நேரடியாக தங்கள் பதிவுகளைப் பகிர்கின்றனர்.

* திரைப்பட தகவல்கள், கட்டுரைகளின் இணைப்புகளும் அனுமதிக்கப்படுகின்றன.

இந்த ஃபேஸ்புக் குழுவை சிவஷங்கருடன் இணைந்து ரமேஷ் ராம், மோகன் பிரபு, அகிலாஷ், ஆஷிக் மற்றும் ரம்யா முரளி ஆகியோரும் நிர்வகிக்கும் பொறுப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

குழுவை நிர்வகிக்கும் நண்பர்கள்
குழுவை நிர்வகிக்கும் நண்பர்கள்

நூறு நண்பர்களுடன் தொடங்கப்பட்ட குழு, ஒரே ஆண்டில் 26 ஆயிரம் உறுப்பினர்களை எட்டியதன் பின்னணியை ஆர்வத்துடன் விவரித்தார் சிவஷங்கர்.

"சினிமா மீது தீராக் காதல் கொண்ட 100 நண்பர்களை வைத்தே குழுவைத் தொடங்கினேன். பிறகு பல நண்பர்களின் நட்புப் பட்டியலில் உள்ள நண்பர்களும் நம் குழுவில் இணைந்தனர். முதல் 1,000 நண்பர்களை இணைத்த உடனே குழு வேகம் பிடித்தது. தினமும் சினிமா தொடர்பான கட்டுரைகள் வந்துகொண்டே இருந்தன. திரைப்படங்கள் மட்டுமின்றி சினிமா தொடர்பான புத்தகங்களும், திரைமொழி சார்ந்த உத்திகளும் தொழில்நுட்பங்களும் இடம்பெறத் தொடங்கின. 

தாகம் தீர்க்க ஒரு டம்ளர் தண்ணீர் கிடைத்தால் போதும் என்று நினைத்து இணைந்த நண்பர்களுக்கு, ஆனந்தமாக நீந்தி மகிழும் அளவுக்கு பல தகவல்களைக் கொட்டினர்.
குழுவை நிர்வகிக்கும் நண்பர்கள்
குழுவை நிர்வகிக்கும் நண்பர்கள்

நம்மூர் சினிமாவில் இருந்து பிற நாட்டு சினிமா வரை எல்லா மொழி திரைப்படங்கள் குறித்து பேசவும், அவ்வப்போது விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இது, பலரை ஆக்கபூர்வமான சிந்தனைக்கு அழைத்துச் சென்றதுடன், சினிமா ஆர்வலர்கள் பலரையும் இணைய வழிவகுத்தது. இங்கு புதிதாக இணையும் பல நண்பர்கள், 

'இதுபோல ஒரு குழுமத்தைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். இறுதியாக கிடைத்துவிட்டது' என மகிழ்ச்சியாக சொல்லும்போது பெருமிதமான சாதனையைச் செய்த உணர்வு கிடைத்தது," என்றார் உத்வேகம் குறையாமல்.

இந்தக் குழுவில் மிகுதியாக தமிழில் பதிவுகள் இடம்பெறுவதைத் தனித்துவமாகச் சொல்லும் அவர், "இந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களுக்கு என்றே வாரம் தவறாமல் தகவல்கள் பதிவேற்றப்படுவதும் முக்கிய அம்சமாக இருக்கிறது. 'ஏன் உலக சினிமா குழுமத்தில் இதுபோன்ற மசாலா படங்களை பற்றியும் எழுதுபவர்களின் பதிவை அனுமதித்து, என் நேரத்தையும் வீணடிக்கீறீர்கள்?" என்று சில நண்பர்கள் கேட்டதும் உண்டு. "சினிமா பார்வையாளர்களின் ரசனையும் எதிர்பார்ப்பும் மாறுபட்டவை. எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்போது நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாமே. நமக்குப் பிடித்ததை விரும்பி எடுத்துக்கொள்வதே சிறப்பான ஒன்றும் கூட' என்பதே என் பதிலாக இருக்கும்.

இந்தக் குழுவைத் தொடங்கியபோது நிபந்தனைகள் ஏதும் விதிக்கவில்லை. மாறாக, வேண்டுகோளாக சிலவற்றை முன்வைத்தோம். அன்றிலிருந்து இன்று வரை சிறு சிறு கருத்து ரீதியிலான பிரச்சினைகள் தவிர, நண்பர்கள் அனைவரின் ஆதரவுடன் குழு பயணிக்கிறது.

சட்டம் போட்டு வழிநடத்த நாம் என்ன அலுவலகமா வைத்திருக்கிறோம். சினிமா என்ற உறவினால் பிணைக்கப்பட்ட நாம், இந்தக் குழுவிற்கு தகுந்தாற் போல நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. இந்தக் குழுவில் பயணிக்கும் நண்பர்களின் கட்டுரைகளை வாசித்த பிறகே குழுவில் வெளியிட அனுமதிப்போம். இதில் கருத்து ரீதியில் சில பிரச்சினைகள் வரக்கூடும் என்பதால், குழுவை நிர்வகிக்கும் பொறுப்பை சக நண்பர்களாக ஆறு பேருடன் பகிர்ந்துகொண்டோம். இதில் என்ன சுவாரசியம் என்றால், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்தான் நாங்கள் அனைவரும். இலங்கை, பெங்களூரு, சென்னை, சேலம், திருச்செங்கோடு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் இருக்கிறோம். சென்ற மாதம்தான் எங்களுக்குள் ஒரு சிறு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு முதல்முறை சந்தித்தோம்.

குழு தொடங்கி இன்று வரை 27,000 நண்பர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 9-ல் தொடங்கப்பட்ட எங்கள் குழு ஓர் ஆண்டிலேயே 26 ஆயிரம் நண்பர்களை எட்டி, அதே தீவிரத்துடன் வெற்றிகரமாக இயங்குகிற்து என்றால். இதற்கு எங்கள் குழுவின் சக நிர்வாகிகள், பகிர்வாளர்கள், பார்வையாளர்களால்தான் இது சாத்தியமானது," என்றார்.

இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து புத்தக வாசிப்புக்கும், தொழில்நுட்பம் சார்ந்த தேடலுக்கும் வழிவகுக்கும் வகையில் புதிய இரண்டு குழுக்களுக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார் சிவஷங்கர்.

"இப்போது அடுத்த கட்ட நகர்வாக, 'உலக புத்தகங்கள் அருங்காட்சியகம்' (World Books Museum) தொடங்கிவிட்டேன். 'உலக தொழில்நுட்ப அருங்காட்சியகம்' (World Technology Museum) கூடிய விரைவில் தொடங்கப்படும். அதன் தொடர்ச்சியாக, குறுந்திரைப்பட விழா ஒன்றை நம் குழு சார்பாக நடத்தவேண்டும் என்ற திட்டம் உள்ளது. அடுத்த ஆண்டு இதுவும் சாத்தியம் ஆகும் என்று நம்புகிறேன். அதேபோல், நம் குழு நண்பர்களின் திரைப்படக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் திட்டமும் உள்ளது," என்றார் உத்வேகத்துடன்.

சினிமா சார்ந்த தமிழ்ச் சூழலில் திரைப்படத் திறனாய்வும், ரசனை மேம்படுத்துதலும் குறிப்பிடத்தக்க அளவில் நடக்கவில்லை என்பது தெளிவு. திரைப் படைப்புகளுக்கும், பார்வையாளர்களுக்கு மிக முக்கியமான இந்தப் பொறுப்புகளை சமூக வலைதளங்கள் மூலம் சினிமா ஆர்வலர்கள் கையிலெடுத்திருப்பது மெச்சத்தக்கது. இதில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் உலகத் திரைப்பட அருங்காட்சியகம் - ஃபேஸ்புக் குழுவின் பக்கம் > https://www.facebook.com/groups/WorldMoviesMuseum/

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்