பெண் சக்தி - 2015-ம் ஆண்டு மாபெரும் சிகரங்களைத் தொட்ட பெண்கள்!

0

பெண் சக்தி - 2015-ம் ஆண்டு மாபெரும் சிகரங்களைத் தொட்ட பெண்கள்

சாதனைப் பெண்கள்
சாதனைப் பெண்கள்

கடந்து போகும் ஒவ்வொரு ஆண்டும், தமது தனித்திறமையாலும், கூட்டு முயற்சியாலும் பல்வேறு தரப்பிலுள்ள பெண்களும், சிறப்பான சாதனையாற்றி வருகின்றனர். விளையாட்டு வீராங்கணையான சானியா மிர்சா போன்ற பிரபலங்கள் ஒருபுறம் மாபெரும் உலக சாதனையைப் படைத்த அதே வேளையில், நவீன மாதர்கள் பலர் மாதவிடாய் பற்றிய பழங்கருத்துக்களை தகர்த்தெரிந்துள்ளனர். கடந்த ஆண்டு சாதனைப் படைத்த பெண்களில் சிலர்:

1. பக்தி ஷ்ரமா: இந்திய நீச்சல் அமைப்பு புதிய கரையை எட்டியது. ஜனவரியின் கடும் குளிரில், அண்டார்டிக் பெருங்கடலில், 2.25 கிலோ மீட்டர்களை வெறும் ஐம்பத்து இரண்டு நிமிடங்களில் கடந்த பக்தி ஷ்ரமா, உலகின் முதல் இளம் நீச்சல் வீராங்கணையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இவர் உலகின் ஐந்து பெருங்கடல்களில் ஏற்கனவே நீச்சலடித்துள்ளார். இது மட்டுமின்றி, எட்டு கடல்களிலும், கால்வாய்களிலும் நீச்சல் செய்து மாபெரும் சாதனைகள் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. பிரியங்கா சோப்ரா: நம் பாலிவுட் தேவதையான பிரியங்கா சோப்ரா, கடந்த ஆண்டில் ஒரு பாடகியாக உலகை கலக்கியதுடன், அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான ‘ஏபிசி’-யின் தயாரிப்பில் வெளியான அதிரடி திகில் தொடர் ‘குவாண்டிக்கோ’-வில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து அமெரிக்க ரசிகர்களின் பெருமதிப்பையும் பெற்றுள்ளார்.

3. இந்தியாவின் பெண்கள் ஹாக்கி குழு: இந்தியாவின் பெண்கள் ஹாக்கி குழு 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்காக தேர்வாகியுள்ளனர். நமது நாட்டின் பெண்கள் ஹாக்கி அணி இரண்டாவது முறையாக ஒலிப்பிக் போட்டியில் பங்கு பெற உள்ளனர். இதற்கு முன்பு, கடந்த 1980-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்குபெற்ற நமது பெண்கள் அணி நான்காவது இடத்தைப் பெற்றிருந்தது.

4. பினோ ஸேஃபின்: முதன்முறையாக முழுமையாக பார்க்கும் திறனை இழந்த பினோ, இந்திய வெளியுறவுத் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இருபத்தைந்தே வயதான பினோ இதற்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் தகுதிகாண் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

5. சாய்னா நெய்வால்: இந்திய பேட்மிட்டன் துறையின் பொன் ஏடுகளில் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக 2015-ம் ஆண்டு திகழ்ந்தது. அனைத்து இங்கிலாந்து போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக சாய்னா நெய்வால் உலகின் முதன்மையான போட்டியாளராக உயர்ந்தார். இதுவரை இந்தியர் எவரும் எட்டாத உயரத்தை இதன் மூலமாக சாய்னா எட்டினார்.

6. பூஜா தாக்குர்: முதல் பெண் தளபதியாக குடியரசு தினத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட மூவண்ண கெளரவ பாதுகாப்புப் படையின் கமாண்டராக ராஷ்ட்ரபதி பவனில் அணிவகுத்துச் சென்றார்.

7. ஜே. மஞ்சுளா: மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) மின்னியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் முதல் பெண் இயக்குனராக 2015-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் மஞ்சுளா நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே, கடந்த 2011-ம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ.-வின் சிறப்பான பணி மற்றும் அறிவியலளாருக்கான விருதை மஞ்சுளா வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. மனபி பண்டோபாத்யாய்: மேற்கு வங்காளத்தின் கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரியின் தலைவராக முதன்முறையாக திருநங்கையான மனபி பதவியேற்றுள்ளார். பேராசிரியர் மனபி இந்தியாவின் முதல் திருநங்கையாக தத்துவப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. சானியா மிர்சா: இந்த ஆண்டு இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டுத் துறைக்கும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஸ்விச்சர்லாந்து நாட்டின் மார்ட்டினா ஹின்கிசுடன், சானியாவின் கூட்டணி செல்லுமிடாமெல்லாம் வெற்றி யை பெற்றுத்தந்தது. இந்த இருவர் கூட்டணி தொடர்ந்து இருபத்து இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்று முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது. இரண்டு கிராண்ட்ஸ்லாம் உட்பட உலக மகளிர் டென்னிஸ் போட்டியில் பத்து பட்டங்கள் போன்றவற்றையும் இவர்கள் குவித்துள்ளனர்.

10. மாதவிடாயைப் பற்றிய பழங்கருத்துக்களை உடைத்தெறிதல்: இவ்வாண்டு பல்வேறு தரப்பிலிருந்து ஆண்களும், பெண்களும் பல்லாண்டு காலமாய் நிலவிவரும் மாதவிடாயைச் சுற்றி நிலவிவரும் பழங்கருத்துக்களை தகர்க்க புறப்பட்டனர். இதில் கிரண் காந்தி தனது மாதவிடாய்க் காலத்தில் ‘டாம்பூன்’ அணியாமல் மாராத்தன் ஒன்றை முன்னெடுத்தது முக்கியமானதாக அமைந்தது.

அடுக்களையில் அடைக்கப்பட்டுக் கிடந்த பெண்களை முன்னேற்றப்பாதைக்கு செல்ல ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்ட இந்தப் பெண்களுக்கு நம் வணக்கம்! 2016-ம் ஆண்டு இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்! பெண் சக்திக்கு வணக்கம்!

ஆக்கம்: டோலா சமந்தா  | தமிழில்: மூகாம்பிகை தேவி