பர்கர் கடையில் பணிபுரிந்த அனுபவத்தில் கபீர் ஜித் இந்தியாவில் துவங்கிய ’பர்கர் சிங்’ 6.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது! 

2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட பர்கர் சிங் 2016-17 நிதியாண்டில் 6.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. ‘சப்வே ஆஃப் பர்கர்ஸ்’ இந்த வருடம் 16 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது

0

பர்கர் ஷாப்பில் கபீர் ஜீத் சிங்கின் ஷிப்ட் நேரம் முடியும் சமயம். வழக்கமான மாலை நேரத்தைப் போலவே அவருக்கு இலவசமாக பர்கர் வழங்கப்பட்டது. வழக்கமாக சாப்பிடும் அதே சுவை அவருக்கு சலிப்பை அளித்தது. புதிதாக ஏதேனும் முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தார்.

கபீர் பர்மின்கம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். அப்போது வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களைப் போலவே இவரும் மாலை ஷிப்டில் பர்கர் ஷாப்பிலும் இரவு ஷிப்டில் ஒரு பாரிலும் பணியாற்றி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார். பர்கர் தயாரிப்பில் சுவையைக் கூட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார். ஒரு சில மசாலாக்களை முயற்சிக்கத் தீர்மானித்தார். பர்கர் பேட்டியை (burger patty) சமைப்பதற்கு முன் இறைச்சியில் மசாலாக் கலவையை சேர்த்தார்.

”அருகிலிருந்த கடையிலிருந்து ஷான் மசாலா பேக்குகளை வாங்கி பர்கரில் அவற்றை சேர்த்தேன். என்னுடன் பணியாற்றியவர்களுக்கு இது மிகவும் பிடித்தது. அவர்களுக்காக அதை தயாரிக்கத் துவங்கினேன்,” என்றார் கபீர்.

மந்தநிலை இல்லாத சந்தையை புரிந்துகொள்ளுதல்

விரைவில் இவ்வாறு கூடுதல் சுவைகள் இணைக்கப்பட்ட பர்கர் பிரசித்தி பெற்றது. பர்கர் ஷாப்பின் வார இறுதி மெனுவில் இந்த வகை இடம்பெற்றது. அதன் பிறகு பல்கலைக்கழகத்தில் உணவு சமைத்து பரிமாறும் பகுதியில் தனது பர்கரை விற்கத் துவங்கினார். இங்குதான் இவருக்கு ’பர்கர் சிங்’ என்கிற பெயர் கிடைத்தது. அடுத்த சில வருடங்களில் இந்தப் பெயரிலேயே இந்தியா முழுவதும் ரெஸ்டாரண்ட் நடத்தப்போகிறார் என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

பட்டப்படிப்பை முடித்ததும் கபீர் லண்டனில் பணிபுரிந்தார். ஆக்ஸ்ஃபோர்ட்டில் டிகிரி பெற்றார். 2008-ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

”எம்பிஏ படிப்பிற்கான சந்தை வாய்ப்புகள் மோசமாகவே இருந்தது.” என்றார் கபீர். 

அப்போது டெல்லியில் பீர் கஃபேயில் பணிபுரியத் துவங்கியிருந்தார். ஃபார்மா துறைக்கு பிறகு மந்தநிலை இல்லாத துறைகளில் ஒன்று என்பதால் இந்தத் துறை அவரை மிகவும் ஈர்த்தது. உணவு மற்றும் குளிபானங்கள் சந்தையின் வணிகம் குறித்த புரிதல் பீர் கஃபேயில்தான் கிடைத்தது. ரியல் எஸ்டேட் தேவைகள், ப்ராண்டிங் மற்றும் வணிகம் குறித்தும் தெரிந்துகொண்டார்.

பர்கர் தயாரித்த பழையநாட்களை நினைவுக்கூறும் வகையில் இரண்டாண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு குர்கானில் பர்கர் சிங்கை அறிமுகப்படுத்தினார்.

’பர்கர் சிங்’ அமைக்கையில் சந்தித்த சவால்கள்

பர்கர் சிங் அமைப்பது எளிதான விஷயமாக இருக்கவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்ட பர்கர் ஸ்டோரின் வளங்கள் எதுவும் கபீரிடம் இல்லை. ஷான் மசாக்களை சேர்த்து சுவையைக் கூட்டியது போல சாதாரண விஷயமில்லை இது. பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. செஃப் சார்ந்த அணுகுமுறையாக இல்லாமல் மாதிரியை நிலைப்படுத்த விரும்பினார் கபீர்.

”பர்கர்கள் மிகப்பெரிய அளவில் ஃப்ரான்சைஸ் செய்யக்கூடிய ப்ராடக்ட். அதற்கு முறையாக நிலைப்படுத்துவதும் சரியான மாதிரியும் அவசியம். உணவைப் பதப்படுத்துவோர், மற்றும் மசாலக்களை கலப்பவர்கள் ஆகியோருடன் அமர்ந்து பதப்படுத்தும் மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்துகொண்டேன்,” என்று விவரித்தார் கபீர்.

வணிகப் பணிகளில் முதலாவது பொருட்களை வாங்குவது. சைவப் பொருட்களுக்கு மும்பையின் பன்வேலில் உள்ள ஒரு விற்பனையாளருடன் இணைந்துகொண்டார் கபீர். அசைவ பொருட்களுக்கு ஹைதராபத்தில் உள்ள ஒரு விற்பனையாளருடன் இணைந்தார்.

இந்த விற்பனையாளர்களின் பெயர்களை கபீர் வெளியிட விரும்பவில்லை. சைவப் பொருட்களை வழங்குபவர் அமெரிக்காவிலுள்ள காஸ்மோவிற்கு விநியோகம் செய்பவர் என்றும் அசைவ பொருட்களை வழங்குபவர் யூகேவின் டெஸ்கோவிற்கு வழங்குபவர் என்றும் தெரிவித்தார். இவர்களுடன் இணைவதால் அதிகம் செலவிட நேரிடும் என்றாலும் நீண்ட நாள் பலனை நோக்கியே இந்த முதலீட்டை மேற்கொள்ள முடிவெடுத்தார்.

”மசாலாக்களை கலப்பவர்களுள் மிகச்சிறந்தவர்களுடன் ஒன்றிணைவதற்காக பஞ்சாப், பிஹார் போன்ற பகுதிகளுக்கு பயணித்துள்ளேன். வெவ்வேறு கலவைகளை உருவாக்கவே இந்த பயணங்களை மேற்கொண்டேன்.” என்றார்.

எனினும் விற்பனை செய்பவர்களையும் மசாலா கலப்பவர்களையும் தீர்மானிப்பதற்கு பல்வேறு சோதனை முயற்சிகளை கடந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. விற்பனை செய்பவர்களில் தவறானவர்களை முதலில் தேர்வு செய்து அவை சரியில்லை என்பதை அறிந்து சரியானர்வகளை தேர்வு செய்தார்.

”ராஜ்மா பர்கரை மெனுவில் இணைப்பதற்கு முன்பு 172 சோதனைகளை மேற்கொண்டேன். அதாவது இரண்டு வருடம் தினமும் ராஜ்மா சாப்பிட நேர்ந்தது,” என்றார் கபீர்.

சிறிய அளவிலான ஸ்டோர்களை துவங்குதல்

முறையான விநியோக சங்கிலியும் வலுவான லாஜிஸ்டிக்ஸ் அமைப்புமே உணவுத் துறையில் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் தரத்தில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தினார் கபீர்.

கபீரின் சுய சேமிப்பிலிருந்தும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து கடனாக பெறப்பட்ட பணத்தைக் கொண்டும் ’பர்கர் சிங்’ துவங்கப்பட்டது. குர்கானில் சன் சிட்டி பகுதியில் 500 சதுர அடியில் முதல் ஸ்டோர் அமைக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் வரவு மற்றும் செலவில் சமநிலை எட்டப்பட்டதால் அவர்கள் மற்ற ஸ்டோர்களை திறக்க இது உதவியது என்றார் கபீர்.

”ஒரு அவுட்லெட்டின் விலை 30 லட்ச ரூபாய். நாங்கள் இரண்டு அவுட்லெட்டுடன் துவங்கினோம். சிறிய பகுதியைக் கொண்ட ஸ்டோர்களை தேர்ந்தெடுத்ததே சரியான முடிவாக இருந்தது. ஏனெனில் வாடகைத் தொகையாக 60,000 ரூபாய் செலுத்தப்பட்டதுடன் அவுட்லெட்கள் கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டத் துவங்கியது என்றார் அவர்.

தற்போது பெரியளவு ஸ்டோர்களைத் திறக்க இவர்களது குழு திட்டமிட்டு வருகிறது. 3,000 சதுர அடி கொண்ட இந்த ரெஸ்டாரண்டுகளில் பர்கருடன் மதுவும் விற்பனை செய்யப்படும்.

க்ளாஸி (Glassy) என்றழைக்கப்படும் இந்த ஸ்டோர்கள் பர்கர் சிங்கிற்கான ஆய்வுக்கூடமாக செயல்படும். இங்கு புதிய ரெசிபிக்கள் பரிசோதிக்கப்பட்டு சந்தை முழுவதும் விநியோகம் செய்யப்படும்.

நிதி மற்றும் வருவாய்

அக்டோபர் 2015 முதல் தற்போது வரை பர்கர் சிங் வெளி மூலதனமாக 1 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது. அஷ்வின் சட்டா, ராகுல் சிங் (பீர் கஃபே), தீரஜ் ஜெயின் (ரெட்க்ளிஃப் கேப்பிடல்), ரான்விஜய் சிங் (எம்டிவி ரோடிஸ்), கேப்டன் சலீம் ஷேக் (எக்ஸ் சயஜி ஹோட்டல்ஸ்), அவதார் மோங்கா (ஐடிஎஃப்சி வங்கி சிஓஓ) உள்ளிட்ட முதலீட்டாளர்கள் நிதி அளித்துள்ளனர்.

உயர்த்தப்பட்ட நிதியிலிருந்து 20 சதவீதத் தொகையானது தொழில்நுட்பம் மற்றும் விநியோக சங்கிலியை உருவாக்குவதிலும், 40 சதவீதத் தொகை அவுட்லெட்களை உருவாக்குவதிலும் எஞ்சிய தொகை முக்கியக் குழுவிற்கான சம்பளத்திற்கும் செலவிடப்பட்டதாக தெரிவித்தார் கபீர். 

2016-17 நிதியாண்டில் 6.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 37 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக குழு தெரிவிக்கிறது.

Assocham அறிக்கையின்படி இந்தியாவின் QSR (Quick Service Restaurants) சந்தை 2020-ம் ஆண்டிற்குள் 25,000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டின் QSR சந்தை மதிப்பு 8,500 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு CAGR 25 சதவீதமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

நகரமயமாக்கல், இளைஞர்கள் அதிகளவு செலவிடுதல், தனிக்குடும்ப அமைப்புகள், சிறப்பான லாஜிஸ்டிக்ஸ் ஆகிய காரணங்களால் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் QSR பகுதியில் கால் பதித்து வருகிறது.

இந்தியாவின் ஃபாஸ்ட் ஃபுட் சந்தையில் தாமதமாக நுழைந்த (நவம்பர் 2014) பர்கர் கிங் இந்த வருடம் நாடு முழுவதும் 35-40 அவுட்லெட்களை திறக்கப்போவதாக ஏப்ரல் மாதம் அறிவித்தது. பர்கர் கிங் தற்போது இந்தியாவில் 48 ஸ்டோர்களைக் கொண்டுள்ளது. கடந்த வருடம் பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், பூனே உள்ளிட்ட 13 நகரங்களில் அவுட்லெட்டைத் துவங்கியது. எனினும் மெக்டொனல்ட்ஸ் டெல்லியில் பல்வேறு அவுட்லெட்களை மூடி வருகிறது.

மிகப்பெரிய அளவில் செயல்படும் நிறுவனங்களைப் போன்ற நிதியுடன் பர்கர் சிங் செயல்படவில்லை என்றாலும் இந்திய சந்தை குறித்த சிறப்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார் கபீர்.

”இந்த வருடம் 16 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளோம். இந்தியா முழுவதும் விரிவடைய விரும்புகிறோம். பர்கர் சிங்; பர்கர்களின் சப்வே என நம்புகிறேன். இந்தியாவை இலக்காகக் கொண்டு செயல்படுவதற்கான மிகச் சிறக்க மாதிரிகளில் இதுவும் ஒன்று.” என்றார் கபீர்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்