வீர தீர செயல் விருது பெற்ற நசியா கான் சிறப்பு காவல் அதிகாரியாக நியமனம்!

0

18 வயதான நசியா கான் தனது வீரதீர செயல்களுக்காகவும் சமூகப் பணிக்காகவும் பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகள் பெற்றவர். இவர் ஆக்ரா போலீஸின் சிறப்புக் காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச காவல்துறை தலைமை இயக்குனர் ஓ பி சிங் இந்த நியமனத்திற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நசியா ஆக்ராவில் நடந்து வந்த பல்வேறு குற்றச்செயல்களைக் கண்டு வருந்தினார். காவல்துறையில் எண்ணற்ற புகார்களைப் பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக பல்வேறு மிரட்டல்கள் அவருக்கு விடப்பட்டாலும் அவர் தனது தைரியத்தை இழக்கவில்லை. சூதாட்டம் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

ஆக்ராவின் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நசியா அச்சுறுத்தல்களைக் கண்டு கலங்கவில்லை. போதைப்பொருட்கள் குறித்தும் சூதாட்டம் குறித்தும் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு ட்விட்டர் வாயிலாக தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக காவல்துறை விசாரணையில் ஈடுபட்டது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் நசியா ஒரு சிறுமியை கடத்தல்காரர்களிடமிருந்து காப்பாற்றினார். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஒன்பது வயது சிறுமியை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றதை கவனித்தார். அப்போது நசியா தனது பள்ளிப் பேருந்தில் அமர்ந்திருந்தார். அந்த இடத்தை கடந்து சென்றவர் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டார்.

நசியா உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி மோட்டார் சைக்கிளை நெருங்கினார். அந்த இடத்தை அடைந்ததும் அந்தச் சிறுமியின் உடையை கைகளால் பற்றிக் கொண்டு தன் பக்கமாக இழுத்தார். கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த நபர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் நசியாவை தாக்க முற்பட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து போராடி வெற்றிகரமாக அந்தச் சிறுமியை மீட்டார்.

நசியாவின் வீர தீர செயலுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அவருக்கு தேசிய வீரதீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவரது மாநிலத்தில் இருந்து இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே பெண் இவர்தான். அவருக்கு பிரதமர் மோடியுடன் ஒரு மணி நேரம் உரையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. 2016-ம் ஆண்டு உத்திரப்பிரதேச அரசாங்கத்தால் ராணி லஷ்மிபாய் விருதும் வழங்கப்பட்டது.

கட்டுரை : THINK CHANGE INDIA