மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வுகளை ’பைக் ஆம்புலன்ஸ்’ கொண்டு காப்பாற்றும் இளைஞர்!

1

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் நிலை இன்னமும் மோசமாகவும், போதிய கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உதவிகள் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக கர்பிணிப்பெண்கள் அவசர காலத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் அங்குள்ள நாராயண்பூர் என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகிறது. 

தொழில்நுட்பத்தின் உதவியோடு, அஜய் ட்ராகெரோ என்ற அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர், புதுவகை மோட்டார்பைக் ஆம்பூலன்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த பைக்கில் அவர் மேடு, பள்ளம் நிறைந்த கிராமங்களுக்கு சென்று அவசரநிலையில் உதவி தேவைப்படுவோருக்கு குறிப்பாக பெண்களை ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து செல்கிறார். 

“யுனிசெப் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் இந்த பைக் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளேன். இதை வைத்துக்கொண்டு பிற வண்டிகள் செல்லமுடியாத கிராமங்களுக்கும், காட்டிற்குள் உள்ள வீடுகள் வரை சென்று உதவி தேவைப்படுவோருக்கு உதவுகிறேன், என்று அஜய் இந்தியா டுடே பேட்டியில் கூறியுள்ளார். 

இந்த மினி ஆம்புலன்சின் பக்கவாட்டில் உள்ள இடத்தில் ஒருவர் படுக்கும் அளவு வசதி இருக்கிறது. இது துணியால் மூடப்பட்டிருக்கும். சாதரண ஆம்புலசில் இருப்பது போல் இதிலும் சைரன் பொறுத்தப்பட்டு, முதல் உதவி பெட்டியும் இருக்கும். இதைக்கொண்டு உடனடி சிகிச்சைஅளித்து நோயாளியை பத்திரமாக மருத்துவமனையில் கொண்டு சேர்க்கமுடியும். சாலைவசதி இல்லாத அந்த கிராமங்களை நன்கு அறிந்த அஜய், மேடு-பள்ளங்களில் வளைந்து, நெளிந்து பைக்கில் சென்று தனி ஒருவனாக இதுவரை 200 கர்பிணி பெண்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். 

இந்த ஆம்புலன்ஸ் முறை ஆப்ரிக்க நாடுகளில் பெரும் வெற்றியை கண்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்டிஸ்கர் மாநில காடுகளில் இது அறிமுகப்படுத்தியதாக அஜய் கூறியுள்ளார். 

“உயிர் போகும் அதிக சாத்தியமுள்ள கர்பிணி பெண்களின் நலனில் முக்கியக் கவனம் கொண்டுள்ளோம். போராட்டக்களமான சட்டிஸ்கரில் இவர்களது நிலை மோசமாக இருந்தது. இந்த பைக் ஆம்புலன்ஸ் முயற்சியின் மூலம், போதிய மருத்துவ உதவிகளை அவர்கள் பெற உதவுகிறோம். மாவோயிஸ்ட் தாக்குதல் அதிகமுள்ள இந்த மலைவாழ் பகுதிகளில் பல காட்டுப் பகுதிகளை அடைவது இன்னமும் கடினமாக இருக்கிறது,” என்று தெரிவிக்கிறார் அஜய். 

கட்டுரை: Think Change India