தொடர்ந்து ஈவ் டீசிங் செய்தவர்களை ஒன்று சேர்ந்து உதைத்து போலீஸிடம் ஒப்படைத்த துணிச்சல் பெண்கள்!

0

பெண்கள் பாதுகாப்பு இந்திய நாட்டில் அண்மை காலங்களில் கேள்விக்குறியாகி உள்ளது. நிலைமை கட்டுபாடில்லாமல் மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இது முடிவில்லாமல் போவது கவலை தரக்கூடியதாக உள்ளது. அரசு மற்றும் அதிகாரிகளிடமிருந்த எந்த ஒரு உதவிகளும் கிடைக்காமல் போவதனால் பெண்கள் தங்களை தாங்களே குற்றவாளிகளிடம் இருந்து காத்துக் கொள்ளவேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் அப்படி எத்தனை பெண்களுக்கு தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் அளவிற்கு தைரியம் உள்ளது? உடல் வலிமை உள்ளது? பிரச்சனை நேரங்களில் வழிப்போக்கர்கள் எந்த அளவு உதவிக்கு வருகின்றனர்? என்பன பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. 

பல மாதங்களாக கேலி செய்யப்பட்ட பள்ளி மாணவிகள் சிலர் தங்கள் பிரச்சனைக்கு தாங்களே வழி தேடியுள்ளனர். தங்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்துவந்த நான்கு பேரை, கொல்கத்தா ஜகத்தால் காவல் நிலையத்திற்கு அடித்து இழுத்து சென்றுள்ளனர், குற்றம் புரிந்தவர்களும் அங்குள்ள தனியார் ஆயுர்வேதா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்று இந்தியா டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. காகினாரா ரத்தாலா என்ற இடத்தில் வாடகைக்கு இடத்தை எடுத்து தங்கி வந்த அந்த மாணவர்கள், அங்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். குறிப்பாக பள்ளி மாணவிகளை குறிவைத்து தகாத வார்த்தைகளை உபயோகித்தும், கைகளால் செய்கைகள் செய்தும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.  

கடந்த செவ்வாய் அன்று மூன்று மாணவிகளை நோக்கி கேவலமான செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர் அந்த மாணவர்கள். இதை எதிர்த்து போராட முடிவு செய்தனர் அம்மாணவிகள், மாணவிகள் எதிர்ப்பதை கண்டு ஆத்திரத்தில் ஆழ்ந்த மாணவர்கள், அவர்களை மிறட்டியுள்ளனர். ஆனால் அங்குள்ள பெண்கள் சேர்ந்து அந்த மாணவிகளுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். 

அங்கிருந்த வீடுகளில் இருந்த பெண்கள் வெளியில் வந்து மாணவிகளுக்கு ஆதரவாக அந்த மாணவர்களை அடித்துள்ளனர். நால்வரையும் அருகாமை காவல் துறை அலுவலகத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர் அந்த பெண்கள். அந்த நால்வர் மீதும் அத்துமீறல், மானபங்கம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு புதன்கிழமை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். 

அண்மையில் மற்றொரு சம்பவத்தில், தன்னிடம் தவறாக நடந்துகொண்ட உபெர் ஓட்டுனரை கராத்தே மூலம் பெண் ஒருவர் தடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுரை: Think Change India Stories by YS TEAM TAMIL