செந்தமிழ் பேசும் சீனப் பெண் 'ஷௌ ஷின்' எனும் ஈஸ்வரி!

0

‘தமிழ் என் மூச்சு, தமிழே என் பேச்சு,’ என ஸ்டேட்டஸ் மட்டும் போட்டு பினாத்தும் பிறவிகளும், ஆங்கில ஆல்பப்பாடல்களை மனப்பாடம் செய்து தத்தக்கா பித்தக்கா என உளறிக் கொண்டிருக்க, யூடியூப்பில் அவ்வப்போது உலாவரும் 'தமிழ் பேசும் சீனப் பெண்', 'தமிழ் பேசும் இத்தாலி பெண்', போன்ற வீடியோக்களில் திக்கி திணறி அவர்கள் பேசும் பேச்சை கேட்கையில், அப்படியே காதில் தேன் வந்து பாயும்.

 அப்படி, ஒரு கொஞ்சு தமிழ் பேசக்கூடியவர் ஷௌ ஷின் எனும் ஈஸ்வரி!. அவர் பேரு நம் வாய்க்குள் வேண்டுமானால் வராமால் இருக்காலாம்... ஆனால், அவர் திருவாய் மலர்ந்தால் தமிழ் சும்மா சரளமாய் வருகிறது. ஆம் மக்களே, சீனாவின் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்த ஷௌ ஷின்னுக்கு தமிழ் மீது அளவற்ற காதல். அசராமல், பிசிராமல் சீனமொழி டச்சோடு அவர் பேசும் தமிழ் மழலையின் கொஞ்சு பேச்சுக்கு நிகரானது. 

‘ஜப்பானிய ஓவியர் ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுலா செய்த அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருந்தார். அந்த புத்தகம் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பள்ளிக்கூடத்தில் படித்த போது அந்த புத்தகத்தை வாசித்தேன். அதில் தமிழகத்தை சுற்றிப்பார்த்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அதில் மீனாட்சி அம்மன் கோவிலின் பிரம்மாண்டம் என் மனைதில் ஆழமாய் பதிந்தது. அதனால், பள்ளிப்படிப்பை முடித்த பின் இந்திய பண்பாடு, தொடர்புடைய மொழியை கற்று கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.” 

எனும் அவர், 2003ம் ஆண்டு பெய்ஜிங் உள்ள பல்கலைகழகம் தமிழ் பட்டப்படிப்பை அறிமுகம் செய்த முதல் ஆண்டிலே தேர்வு செய்து கற்றுள்ளார். 

பின்னே, சீனாவின் தேசிய ரேடியோவின் தமிழ் பிரிவில் ஆர்ஜே மற்றும் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அக்காலத்தில், ரேடியா நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ, பாடகி அனுபமா ஆகியோரை பேட்டி கண்டுள்ளார். எழுத்து மொழியை கற்று தேர்ந்த ஈஸ்வரி, பேச்சு மொழியில் சிரமத்தை அடைந்துள்ளார். அதனால், தமிழகத்துக்கே வந்து பேச்சு தமிழை கற்க முடிவெடுத்துள்ளார். அதன்படி,

 பாண்டிச்சேரியில் உள்ள 'Puducherry institute of linguistic and culture'-ல் நடைமுறை பேச்சுத் தழிழை 6 மாதங்கள் தங்கியிருந்து கற்றுள்ளார். பாண்டிச்சேரியில் தங்கியிருந்த காலத்தில், மொழிக் கற்றல் தவிர்த்து பரதநாட்டியமும் கற்று கொண்டு, அரங்கேற்றமும் செய்தார்.
“தமிழ் கற்கத் தொடங்கிய பின், நிறைய பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகளை படித்தேன். அதைவிட, எனக்கு குறுந்தொகை ரொம்ப பிடிச்சிருக்கு. நிறைய தமிழ் இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க ஆசைப்படுகிறேன். ஆனால், அதற்கு என் ஆற்றல் போதாது என்பதால், சீனாவிற்கு திரும்பி முதலில் இன்னும் பலருக்கு தமிழை கற்றுக் கொடுக்க முடிவெடுத்தேன்,” என்கிறார். 

பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கென தனியாக தொடங்கப்பட்ட துறையில் தமிழ் பேராசிரியராய் பணியில் சேர்ந்து, திருக்குறளை சீனமொழியில் மொழிபெயர்க்க முயற்சித்து வருகிறார்.

“திருக்குறளின் வடிவம் மாறாமலும், அர்த்தத்தை உள்ளபடியே மொழிபெயர்ப்பது மிக கடினமாக உள்ளது. முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன்,” என்கிறார். 

சுவராஸ்மாக, ஈஸ்வரியின் இரட்டை சகோதரியான ஷௌ யுவான் உருது மொழியின் மீது ஆர்வம் கொண்டு அம்மொழியைக் கற்றுக் அவரது பெயரை நஸ்ரின் என மாற்றிக் கொண்டுள்ளார். அவர் பெய்ஜிங் வெளிநாட்டு மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் உருது கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தகவல் உதவி : timesofindia மற்றும் ibc tamil|கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ