சரிவில் ஓடிய பள்ளி வேன் முன் குதித்து சிறுவர்களை காப்பாற்றிய ஓட்டுனர்! 

0

சட்டிஸ்கரைச் சேர்ந்த 30 வயது ஷிவ் யாதவ், வேனில் பயணித்த பள்ளி சிறுவர்களின் உயிரைக் காப்பாற்ற வண்டியின் முன் படுத்து, தடுத்து நிறுத்தி வீரச்செயலை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகளை வெளிப்படுத்திய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரை கெளரவப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

சட்டிஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் மாவட்டம் நாரயண்பூர் என்ற இடத்தில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு விபத்து நிகழ இருந்தது. 25 குழந்தைகளை ஏற்றிச்சென்ற பள்ளி வேன் கிராமப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அதன் ஓட்டுனரான ஷிவ் யாதவ், வேனை நிறுத்திவிட்டு சற்று ஓய்வு எடுக்க ஒதுங்கினார். மேட்டில் நின்று கொண்டிருந்த வேன், திடீரென சரிவில் பின்நோக்கி நகர ஆரம்பித்தது. அதனை கண்ட ஷிவ், வேகமாக ஓடி வேனை நிறுத்த வேறு வழியின்றி தானே அதன் முன் குதித்துள்ளார். 

“நான் கொஞ்சம் தூரம் ஓடிச்சென்று வேனை நிறுத்த முயன்றேன், ஆனால் முடியாததால் வீலுக்கு அருகே படுத்து என் உடலை வேகத்தடைப் போல் பயன்படுத்தினேன். வேனும் நின்றது,” என்கிறார். 

ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் வேன் கவுந்திருக்கலாம் என்பதால், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஷிவ் வேகமாக முடிவெத்ததால் பள்ளிச்சிறுவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த விபத்தில் எந்த குழந்தைக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் ஷிவ் யாதவுக்கு உடலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று நாட்கள் இருந்தார். 

நியூஸ்18 செய்தியின் படி, அந்த ஊர் மக்கள் பலரும் ஷிவ் யாதவின் வீட்டுக்கு சென்று அவரின் வீரத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் அகிலேஷ் யாதவ் பாராட்டியதை அடுத்து ஷிவ்வின் அப்பா தன் மகனைக் கண்டு பெருமிதம் அடைந்துள்ளார்.

கட்டுரை: Think Change India