கிளிகளுக்கு இடமளித்த கேமரா காதலர் 'பேர்ட்மேன்’ இருக்க இடமில்லாது போன சோகம்...

14 வருடங்களாக கிளிகளின் சரணாலயமாக மட்டுமின்றி கேமரா மியூசிமாக விளங்கி வந்த சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேகரின் இல்லத்தை தற்போது விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். 

0

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலைக்கு போய், சேகரின் வீட்டு விலாசத்தை கேட்டால் யார் வேண்டுமானாலும் சொல்வார்கள். அந்தளவுக்கு சேகர் பிரபலம். காரணம் அவரை தேடி மாணவர்கள் மட்டுமல்ல, பறவைகளும் வருவதால் தான். அவர் தான் ‘பேர்ட்மேன்’ எனும் ’பறவை மனிதன்.’

சேகர் வீட்டிற்குள் நுழைந்தால் வீடுகள் முழுக்க உள்ள கேமராக்கள் நம்மை வரவேற்கின்றன. உலகத்தில் உள்ள அனைத்து வகையான கேமராக்களும் இங்கே இருக்கிறது.160 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேமராவிலிருந்து மரத்தால் ஆன கேமரா, டிஜிட்டல் கேமரா என 4500 கேமராக்கள் இவரின் இல்லத்தில் இருக்கின்றன. இங்கு கேமராக்கள் மட்டுமல்ல. பிளாஸ், பிலிம், லென்ஸ் என கேமரா தொடர்பான எல்லா பொருட்களும் உள்ளன. 

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பார்த்த மேட்ச் பாக்ஸ் கேமராவும், சிகரெட் லைட்டர் கேமராவும் இங்கு ஸ்பெஷல். லைட்டரை ஆன் செய்யும் போதே ரகசியமாகப் படம் எடுக்கக் கூடிய இந்த கேமராவில் 8 எம்.எம் பிலிம் தான் போட முடியும் என்பதால் இவர் 16 எம்.எம் பிலிமை பாதியாக வெட்டி படம் எடுத்திருக்கிறார். 90 வருடங்களுக்கு முந்தைய சினிமா கேமராவில் மூன்று விதமான லென்ஸ் போட முடியும். அதே கேமராவில் போட்டோவும் எடுக்க முடியும் என கேமரா குறித்த தகவல்களை விரல் நுணியில் வைத்துக்கொண்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார், சேகர்.

“சொந்த ஊர் தருமபுரின்னாலும் செட்டிலானது சென்னையில் தான். 35 வருசத்துக்கு முன்னால எலக்ட்ரானிக்ஸ் டிப்ளோமா படிச்சிட்டு சென்னையில் வேலை தேடிட்டு இருந்தேன். டிவி, ரேடியோ சர்வீஸ் பண்ண நிறைய பேர் இருக்காங்க. சென்னையில் கேமரா சர்வீஸ் பண்ண நல்ல கடைகள் இல்லை என்பதால் கேமரா சர்வீஸ் பண்ண முடிவு செஞ்சேன். 

என் கைக்கு கிடைத்த கேமராக்களை சர்வீஸ் செய்ததின் மூலம் ஒரு கேமரா சர்வீஸ் மேனாக உயர்ந்தேன் . நானே விசிடிங் கார்டு அடிச்சு ஒவ்வொரு கடைக்கு போய் கேமரா சர்வீஸ் கேட்டப்போ எல்லாரும் என்னை வினோதமா பார்த்தாங்க. ஆனால் ஒரே வருடத்தில் கேமரா சர்வீசில் நல்ல பெயரை சம்பாதிச்சேன். பழைய கேமராக்களை சர்வீஸ் செய்தாலும், மார்கெட்டுக்கு புதிதாக வரும் கேமராக்களின் தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்வேன் என்றவர் ஜெர்மன் தயாரிப்பான 16 எம்.எம் கேமராவை காட்டி, இந்தியா-சீனா போர் நடந்தபோது இந்த கேமராவில் போர்க் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன என்றுசொல்லி முடிப்பதற்குள் இன்னொரு கேமராவை நீட்டி இது தண்ணீருக்குள் இருந்த படி படம் எடுக்கும் கேமரா. 

“50 அடி ஆழமுள்ள தண்ணீரில் இருந்தும் தெளிவான படங்களை இதன் மூலம் எடுக்க முடியும், காந்திஜியை படம் பிடிக்க பயன்பட்ட ‘ஹன்ட்ரட் ஷாட்’ கேமராகூட என்னிடம் இருக்கிறது,” என்றவரின் பேச்சிலும், செயலிலும் தெரிகிறது, கேமரா மீதான ஆசை.

எழுத்தாளர் ஹாரிமுல்லர், இயக்குநர் எல்.வி.பிரசாத், எம்.ஜி.ஆர் போன்றவர்களிடமிருந்தும் கேமராக்களை வாங்கி வைத்திருக்கும் இவர், இந்தியா முழுவதும் சுற்றி கேமராக்களை வாங்கி குவித்திருக்கிறார். உலக நாடுகளில் உள்ள கேமராக்களையும், கேமரா விற்பனையாளர்கள் மூலம் வாங்கி வைத்திருக்கிறார். இவரது கேமரா கலக்சனில் சுமார் 50 ஸ்பை கேமராக்களும் அடக்கம். இவை கைரேகைகள் போன்ற தடய அறிவியல் துறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது கொசுறு தகவல். 

வீட்டை அடைத்துக் கொண்டு இருப்பதால்,என் மனைவி எலிசபெத்துக்கு கேமராக்கள் மேல பெருசா ஆர்வம் இல்லை. நிறைய படிக்கிற பசங்க கேமரா பத்தி கேட்க வருவதால் இப்போ அவங்களும் கேமரா சேகரிப்பதில் உதவி வர்றாங்க. நம்ம ஊர் மாணவர்கள் மட்டும் படிப்பிற்காக இங்கு வரலை. ஒரே நாளில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த100 மாணவர்கள் ப்ரோஜெக்ட்க்காக இங்கு வந்து திக்குமுக்காட வச்சிட்டங்க என்று சொல்லி சிரிக்கும் சேகரின் வீட்டில் இருக்கும் கேமராக்களின் மதிப்பு கோடிக்களை தாண்டுமாம்.

"இதழியல், விஸ்காம், போட்டோகிராபி மாணவர்கள் அடிக்கடி என் வீட்டை தேடி வந்து தொழிற்நுட்ப உதவிகள் கேட்பாங்க. அவங்களுக்கு ப்ரோஜெக்ட் உதவியை இலவசமா செய்து வரேன். இதுவரை ஐந்து முறை கேமரா கண்காட்சி நடத்தி இருக்கேன். இப்போ சமீப காலமா நடத்த முடியலை. ஒவ்வொரு கண்காட்சிக்கும் 50000 ரூபாய்க்கும் அதிகமா செலவாகுது. 1000 க்கும் அதிகமான கேமராக்கள் பழுதடைந்த நிலையில் நிலையில் இருக்கு. இதை சர்வீஸ் செய்ய ஒரு கேமராவுக்கு 2000 ரூபாய் தேவைப்படுது. சரியான ஸ்பான்சர்கள் கிடைத்தால் உலகளவில் கேமரா கண்காட்சி நடத்த முடியும்,"

என்று கேமரா புராணம் பாடி, விலை மதிப்பிட முடியாத அளவுள்ள கேமராக்களை பராமரிக்கும் இவர் இருப்பது வாடகை வீட்டில் தான்.

சேகர் கேமரா காதலர் மட்டுமல்ல, பறவை ஆர்வலரும் தான். சேகர் காலை, மாலை என இரு வேலைகளிலும் கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். இவரை தேடி தினமும் சுமார் 2000 முதல் 6000 கிளிகள் வருவதால், இவரை பலரும் பேர்ட் மேன் சேகர் என செல்லப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இந்த வீட்டை விற்க முடிவு செய்துள்ள உரிமையாளர்கள் தற்போது வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக  இங்கு பசி தீர்க்கும் பறவைகள் நிலை என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

"15 ஆண்டுகளாக நான் கிளிகள் மேல அளவுக்கு அதிகமாக பாசம் வைச்சிட்டேன். திடீர்னு கிளிகளை பிரிந்து போகிறதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. வீட்டு உரிமையாளரிடம் அவர்களது முடிவை மாற்றச் சொல்லி பார்த்து, நான் தோற்றுவிட்டேன். இதனால் என்னுடைய அரிய வகை கேமராக்கள், புகைப்படக்கருவிகள் ஆகியவற்றை உயிருள்ள கிளிகளின் நலனுக்காக தற்போது விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்த கேமராக்களை வெளிநாட்டுக்கு விற்க மனமில்லை. இங்கேயே யாராவது வாங்கியாவது என்னுடைய கிளிகளை காப்பாற்றுங்கள்," என கண்கலங்குகிறார், சேகர்.

சேகரை குறித்து அறிந்த நாகலாந்து கவர்னர், அரசு விருந்தினராக வந்து பறவையின் விருத்தி மற்றும் அவசியம் குறித்து பயிற்சி வகுப்பு எடுக்குமாறு அழைத்துள்ளார். ஆனால் கிளிகளை பராமரிக்க ஆள் இல்லை என்பதால் பயணத்தை தள்ளிப் போட்டு வருகிறார் சேகர். 

இந்தக் கிளிகளிடம் இருந்து மட்டும் என்னை பிரித்து விடாதீர்கள் என்ற ஒற்றை கோரிக்கையோடு தொடர்கிறது சேகரின் போராட்டம். அவரை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது ‘பறவையை கண்டான் விமானம் படைத்தான்’ என்ற பாடல் எங்கோ ஒலித்தது. விமனம் பறக்கலாம். ஆனால் உயிருள்ள கிளிகள் பறக்க தான் வழியில்லை. 

அதிகமாய் பேசாத ஒருவரை மற்றவர்கள் அதிகமாய் பேச வைத்துக் கொண்டிருப்பது கேமராக்களும், கிளிகளும் தான். உயிருள்ள பொக்கிஷமான கேமராக்களை விற்றாவது, கிளிகளை காப்பாற்ற முடிவெடுத்து இருக்கும் சேகர், மற்றவர்களின் உதவிக்காக காத்திருக்கிறார்.

Related Stories

Stories by Jessica