2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறும் 14 பெண்கள்!

நாட்டுப்புற பாடகர்கள், நாவலாசிரியர்கள், மூத்த யோகா பயிற்சியாளர்கள், 23 வயது பளு தூக்குபவர் என பத்ம விருது பெற்ற 85 பேரில் 14 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்...

0

2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கான 85 பிரபலங்களின் பெயர்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி, இசையமைப்பாளர் இளையராஜா போன்றோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். எனினும் இந்த 85 பேரில் 14 பெண்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.

பத்ம விருதுகளை வென்ற இந்த பெண்களின் சாதனைகள் குறித்து இங்கு பார்ப்போம்:

சாரதா சின்ஹா

சாரதா சின்ஹா பீஹாரைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி. இவரது சாத் புஜா பாடல்கள் குறிப்பாக ’பஹீலே பஹில் ஹம் கயேனி சத்’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் இந்தியப் பாரம்பரிய இசை பயின்றவர். பெரும்பாலும் மைதிலி, போஜ்புரி, மகஹி ஆகிய மொழிகளில் பாடுகிறார். இவருக்கு இரண்டாவது உயரிய விருதான ’பத்ம பூஷன்’ வழங்கப்படுகிறது. இந்த நாட்டுப்புறக் கலைஞர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒதுக்கப்பட்ட பீஹாரி கலாச்சாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

டாக்டர் ராணி பேங்

டாக்டர் ராணி பேங் மற்றும் அவரது கணவர் டாக்டர் அபய் பேங் இருவரும் இந்தியாவின் கிராமப்புறங்களில் மருத்துவப் பராமரிப்பில் முன்னோடியாக செயல்பட்டவர்கள். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கட்சிரோலி மாவட்டத்தின் பழங்குடிப் பகுதிகளில் பணியாற்றினர். இந்தப் பகுதியில் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இவ்விருவரும் SEARCH என்கிற லாப நோக்கமற்ற நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இந்நிறுவனம் கிராமப்புற மருத்துவப் பராமரிப்பில் ஈடுபட்டு சமூகம் சார்ந்த மருத்துவப் பராமரிப்பை ஊக்குவித்து ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

சாய்கோம் மீராபாய் சானு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாய்கோம் மீராபாய் சானு அமெரிக்காவின் ஆனஹிம் பகுதியில் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான இவர் 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார்.

லட்சுமி குட்டி

கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொன்முடியின் அடர்ந்த காட்டுப்பகுதியில் 75 வயதான லட்சுமி குட்டி பாரம்பரிய மூலிகையைக் கொண்டு இயற்கை வைத்தியம் பார்த்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கன்னி பழங்குடி பிரிவைச் சேர்ந்த லட்சுமி 500-க்கும் அதிகமான மூலிகை மருந்துகள் குறித்து நன்கறிவார். அவற்றைக் கொண்டு அருகாமை கிராமங்களில் பாம்பு மற்றும் பிற விஷப் பூச்சிகள் கடித்த ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளார்.

சுலாகட்டி நரசம்மா

1940-ம் ஆண்டு 20 வயதான நரசம்மா அவரது உறவினரின் பிரசவ நேரத்தில் ஒரு பணிப்பெண்ணாக சேவை புரிந்து குழந்தை பிறக்க உதவினார். 70 ஆண்டுகளாக கர்டாநகாவின் தும்கூரின் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றி வருகிறார். தற்போது 97 வயதான நரசம்மா குழந்தையை பெற்றெடுக்க பாரம்பரிய முறைகளையே பின்பற்றி வருகிறார். எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இல்லாத பகுதிகளில் அவர் சேவை புரிந்த காரணத்தால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடகரான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவரது கணவர் எம் நவநீதகிருஷ்ணனுடன் இணைந்து தமிழ் இசை மற்றும் நடனம் குறித்த ஆய்விற்காக பல ஆண்டுகள் செலவிட்டுள்ளார். பத்ம ஸ்ரீ விருது பெறும் இவர் 10,000-க்கும் அதிகமான நாட்டுப்புறப் பாடல்களைத் தமிழில் பாடியுள்ளார். அத்துடன் தமிழ் இசை மற்றும் நடனம் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் 11 புத்தகங்களை எழுதியுள்ளார்.

லெண்டினா ஆவ் தக்கர் 

84 வயதான நாகாலாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகளாக நாகாலாந்தின் மோகோக்சுங் பகுதியில் இருக்கும் காந்தி ஆஸ்ரமத்தில் சேவை புரிந்து வந்தார். 1950-ல் அசாமின் குவாஹாத்திக்கு அருகில் இருக்கும் உலூபாரி பகுதியில் இருக்கும் கஸ்தூரிபாய் ஆஸ்ரமத்தில் காந்தியவாத தன்னார்வலராக பயிற்சி பெற்ற ஒரே நாகாலாந்து பெண்மணி இவர் தான். சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக பணியாளரான நட்வர் தக்கரை லெண்டினா திருமணம் செய்துகொண்டார்.

சித்தவ்வா ஜோடதி

தேவதாசிகளுக்காக போராடியவர் கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சித்தவ்வா ஜோடதி. குடும்பத்தின் ஏழ்மை நிலைக் காரணமாக இவர் ஏழு வயதில் தேவதாசி ஆனார். தேவதாசி முறையை கர்நாடக அரசாங்கம் தடை செய்த பிறகு தேவதாசிகளின் மறுவாழ்விற்காக போராடினார். இவர் தற்போது மஹிலா அபிவிருத்தி மத்து சம்ரக்‌ஷனா சம்ஸ்தி (MASS) என்கிற பெலகவியைச் சேர்ந்த நிறுவனத்தின் சிஇஓ-வாக உள்ளார்.

நௌஃப் மார்வாய்

இவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த முதல் யோகா பயிற்சியாளர். தனது நாட்டில் யோகா பயிற்சியை சட்டபூர்வமாக இணைக்கும் பணியில் ஈடுபட்டார். இவர் அரேபிய யோகா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.

வி நானம்மாள்

வி நானம்மாள் தனது 98 வயதிலும் தினசரி யோகா பயிற்சி செய்கிறார். அத்துடன் இவர்தான் நாட்டின் மூத்த யோகா ஆசிரியர். 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். இதில் 10,000-க்கும் அதிகமானோர் யோகா கற்றுக்கொடுத்து வருகின்றனர். இன்றும் கோயமுத்தூரில் உள்ள ஓசோன் யோகா செண்டரில் தினமும் நூறு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் நானம்மாள்.

லங்காபோக்ளாம் சுபாதாணி தேவி

இவர் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய நெசவாளர். நெசவுக் கலையில் பங்களித்ததற்காகவும் கைத்தறி நெசவை ஊக்குவித்து பாரம்பரிய முறையில் பாதுகாத்ததற்காகவும் இவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்படுகிறது.

ஜாய்ஸ்ரீ கோஸ்வாமி மஹந்தா

ஜாய்ஸ்ரீ கோஸ்வாமி மஹந்தா இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில் பத்ம விருதை பெறுகிறார். இவர் புனைவு மற்றும் புனைவல்லாத ஏழு நாவல்களை எழுதியுள்ளார். அசாம் அந்தோலன், தி போயட் இம்மார்டல், மஹாகலா உள்ளிட்டவை அவரது புத்தகங்களில் சில. ஜாய்ஸ்ரீ முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராவார். அசாமின் முன்னாள் முதலமைச்சர் பிரஃபுல்லா குமார் மஹந்தாவின் மனைவியாவார்.

சுபாஷினி மிஸ்திரி

பத்மஸ்ரீ விருது பெறும் சுபாஷினி மிஸ்திரி கொல்கத்தாவில் ஏழைகளுக்காக ஒரு மருத்துவமனை கட்டியுள்ளார். 75 வயதான இந்த பெண்மணி அவரது கணவர் இறந்த பிறகு வீட்டு வேலைகள் செய்துள்ளார். வீதிகளில் காய்கறிகள் விற்பனை செய்துள்ளார். தனியாகவே தனது நான்கு குழந்தைகளையும் வளர்த்தார். 1993-ம் ஆண்டு ஒரு மருத்துவரின் உதவியுடன் ஹ்யூமானிட்டி மருத்துவமனையை கட்டியுள்ளார்.

மால்டி ஜோஷி

தேசிய அளவில் பாராட்டு பெற்ற ஹிந்தி எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மால்டி ஜோஷி இரண்டு நாவல்களும் 35 கதைகளும் எழுதியுள்ளார். பத்ம விருது பெற்ற இவர் மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிர அரசாங்கத்தாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்நேஹ் சிங்

Related Stories

Stories by YS TEAM TAMIL