ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்க  இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

0

ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யும் மருந்துகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இதன் மூலம் இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்ததால் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேதியியலாளர்கள் மற்றும் மருந்தாளர்கள் சங்கம், ஆன்லைன் மருந்து விற்பனனையாளர்கள் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள், 1945-ஐ மீறுவதாக கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனையொட்டி உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆன்லைனில் விற்பனையை அனுமதிக்கும் சட்டப்பூர்வ கட்டமைப்பை மையமாகக் கொண்டுவரும் வரை ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று நேரடி மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாதவன் சுகாதார அமைச்சகத்திற்கும் மற்ற அரசு அமைப்புகளுக்கும் ஆன்லைன் விற்பனையை நிறுத்தகோரி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணை அரசு அமைப்புகளுடன், தற்போது ஆன்லைன் மருந்து விற்பனையில் வளர்ந்துவரும் மெட்லைஃப், 1எம்ஜி போன்ற ஸ்டார்ட் அப்-களுக்கும் பெரும் தடையாக அமையும்.

கடந்த ஆகஸ்ட் 28 அன்று ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டு அது பல மருந்தாளர்களின் எதிர்ப்பை சந்தித்தது. இந்த வழக்கை தலைமைவகுத்த மூத்த ஆலோசகர், இந்தியாவில் 1940 விதியின்படி அட்டவணை H, H1 மற்றும் X கீழ் வரும் மருந்துகள் மருத்துவர்களின் பரிந்துரை சீட் இல்லாமல் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்றார். இதனை எல்லாம் கருத்தில் கொண்டே இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நிதிபதி,

 “ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் விலை குறைவாக கிடைக்கிறது என்று தீங்கு விளைவிக்கக் கூடிய மருந்துகளை ஆன்லைனில் வாங்கக் கூடிய அபாயம் உள்ளது. இதை அனுமதிக்க முடியாது, ஸ்டீராய்டுகளை மருத்துவர் பரிந்துரையின்றி மக்கள் பெற்றால் என்ன ஆகும்? இதனால் இந்த வழக்கை இந்த நீதிமன்றம் நன்கு விசாரிக்கும்,” என்றார்.

பதிவு செய்யப்பட்ட வழக்கு,

“மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டங்கள் காலணித்துவ சகாப்தத்திலும், ஆன்லைன் வணிகத்தின் வருகைக்கு முன்பாகவும் இயற்றப்பட்டன. கடந்த 78 ஆண்டுகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், ஆன்லைன் விற்பனையை அனுமதிக்கும் எந்தவொரு விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவில்லை.”

ஆனால் 1945 விதியின்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கப்பல் மூலமொ அல்லது கொரியர் மூலமோ அனுப்பக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் விற்பனையாளர்கள் மற்றும் நேரடி விற்பனையாளர்கள் எதிர் எதிரே நிர்ப்பதால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற வாய்ப்பு உள்ளது.

இதைக்குறித்து ஸ்டார்ட்-அப் இ-காமர்ஸ் விற்பனையாளர்களிடம் கேட்ட பொழுது சட்ட விருப்பங்களை ஆராய்வதாக கோரி பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

முறையான தீர்ப்பு வரும்வரை தமிழ்நாட்டில் ஆன்லைன் மருந்து விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுரையாளர்: மஹ்மூதா நெளஷின்