அஞ்சேல் 8 | வியப்பில் ஆழ்த்து! - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 1]

'அருவி' மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் பகிரும் அனுபவக் குறிப்புகள்.

6

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

"நான் குட்டிப் பையனாக இருக்கும்போது தனிமைச் சூழலால் துறுதுறு இயல்பை இழந்திருந்தேன். யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். மாறுவேடப் போட்டிகள், வசனங்கள் பேசுதல் போன்றவற்றால் தனிமைப் பிரச்சினையில் இருந்து வெகுவாக மீள முடிந்தது."
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்

சிறுவர்களை உள்ளடக்கிய ராம்ஜி சாரின் இன்னிசைக் குழுவில் சேர்ந்தேன். மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது அங்கு மிமிக்ரி கலைஞராக உருவெடுத்தேன். என் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பாக்யராஜ் சார் டிவி சீரியலுக்கு நடிக்க அழைத்தார். அதன்பிறகு, இயக்குநர் பாலச்சந்தர் சாரின் 'அண்ணி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'அண்ணாமலை' சீரியலில் நடிக்கும்போது வெகுவாக கவனம் ஈர்த்தேன். இதனால், ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிக்க வேண்டியதானது.

நான் பிறந்தது மயிலாடுதுறை. வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். நான் வெவ்வேறு கலைகளில் ஈடுபட வேண்டும் என்பதில் அப்பா விரும்பினார். என் வீட்டில் இருந்து எந்த அழுத்தமும் இருந்தது இல்லை. பள்ளிப் படிப்பு பற்றிய கவலை இருக்காது. யோகா, கராத்தே, களரி முதலானவற்றில் ஈடுபட்டு தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளேன். ஒரு கட்டத்தில் சீரியல்களில் நடிப்பதில் சலிப்பு ஏற்பட்டது. ஒருவிதமான நெருடலும் இருந்தது. ஆனால், சீரியலில் நடிப்பது என்பது வீட்டின் பொருளாதாரத் தேவைக்கு உறுதுணையாக இருந்தது.

அப்பா வாசிப்பை நேசிப்பவர். இலக்கியம் மீது மிகுதியான நாட்டம் கொண்டவர். தான் வாங்கும் சம்பளத்தின் பெரும் பகுதியை மாதந்தோறும் புத்தகங்கள் வாங்குவதற்கே செலவிடுவார். எனக்காகவும் நிறைய புத்தகங்களை வாங்கிக் குவிப்பார். இதனால், வாசிப்புப் பழக்கம் சிறுவயதில் இருந்தே தானாகவே வலுப்பெற்றுவிட்டது. அப்பாவுடன் தினமும் மாலை நேரங்களில் நிறைய விவாதிப்பேன்.

அதேபோல், சினிமா மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். உலக நாடுகளில் வெளியாகும் நல்ல படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கும்போது, தமிழில் கொட்டிக் கிடக்கும் திரை மொழியே இல்லாத படங்களைப் பார்த்து அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது சீரியல்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டு வீட்டிலேயே புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் மூழ்கினேன்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு 'ப்ளஸ் ஒன்' என்ன க்ரூப் எடுக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டேன். அவரோ "உனக்கு சினிமாதான் என்று முடிவு செய்துவிட்ட பிறகு, அதற்காக உன்னைத் தயார்படுத்திக்கொள்," என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை. ப்ளஸ் 2-வை பள்ளிக்குப் போகாமல் பிரைவட்டாகவே முடித்தேன்.

அந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு மிக முக்கியமான காலக்கட்டமாக இருந்தது. படிப்பது, எழுதுவது, பயணிப்பது மூன்றும்தான் முழுநேர வேலையாக இருக்கும். அப்பா சுகாதாரத்துறையில் தொழுநோய் பிரிவில் பணிபுரிந்துவந்தார். தமிழகம் முழுவதும் பணி நிமித்தமாகச் செல்வார். எல்லா மூலை முடுக்களும் அவருக்குத் தெரியும். நான் பல இடங்களில் பயணிப்பதற்கும், பல மனிதர்களைச் சந்திப்பதற்கும் அவரே காரணமாக இருந்தார்.

அருவி படக்க்குழு
அருவி படக்க்குழு

ப்ளஸ் 2 முடித்த பிறகு 2005-ல் ஒரு குறும்படம் எடுக்க முடிவு செய்து நண்பர்களுடன் சேர்ந்து களமிறங்கினேன். 'ஆடடா களத்தே' என்ற அந்தக் குறும்படத்தில், பலத்த காயமுற்ற ஓர் ஈழப் போராளியின் உணர்வுகளைச் சொல்ல முற்பட்டேன். ஆறு நிமிடங்கள் ஓடும் அந்தப் படத்தில் வசனம் இருக்காது. பத்தாயிரம் ரூபாய் திரட்டி ஒரு வழியாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். ஆனால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் செய்ய முடியாமல் திணறிவிட்டேன். அந்தக் காலக்கட்டத்தில் குறும்படங்கள் எடுப்பது மிகவும் குறைவு என்பதால் எங்கு எடிட் செய்வது என்றுகூட தெரியவில்லை. அப்போதுதான் 'கனவுப் பட்டறை'யில் இருந்த க்ளைட்டன் அண்ணனின் உதவி கிடைத்தது. 'கனவுப் பட்டறை' பதிப்பகத்தில்தான் இந்திய சினிமா, உலக சினிமா குறித்த பல புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது. அங்கு லீனா மணிமேகலை அவர்களின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஸ்டூடியோ இருந்தது. நண்பர்கள் உதவியுடன் அங்கேயே எடிட் செய்து குறும்படத்தை உருவாக்கினோம்.

ஒருவழியாக குறும்படம் எடுத்து முடித்துவிட்டேன். எனக்கு ஓரளவு திருப்தி இருந்தது. ஆனால், அதை என்ன செய்வது? யாருக்குப் போட்டுக் காண்பிப்பது? என்றெல்லாம் தெரியவில்லை. பலருக்கும் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியது. அப்போது ஒரு யோசனை வந்தது. என் குறும்படத்தை 200 சிடிக்களில் பிரதி எடுத்தேன். வெரைட்டி டைரக்டரியை எடுத்தேன். 40 இயக்குநர்களின் முகவரிகளைத் திரட்டினேன். தினமும் மூன்று வீடுகளைக் கண்டுபிடித்து, நேரடியாக நானே கொரியர் சர்வீஸ் செய்தேன். ஒருமாதம் ஆனது. 

ஒன்றரை மாதமும் ஆனது. யாரிடம் இருந்தும் எனக்கு பதில் வரவே இல்லை. விரக்தியின் உச்சத்துக்கே சென்றதால் எஞ்சியிருந்த மற்ற பிரதிகள் அனைத்தையுமே உடைத்துப் போட்டேன். 'சினிமாவே வேண்டாம். பயணம் செய்வோம், மக்களைச் சந்திப்போம், கட்டுரைகள் எழுதுவோம்' என்று முடிவெடுத்து எழுத்தை நோக்கி இயங்கத் தொடங்கினேன்.

சரியாக இரண்டு மாதங்கள் கழித்து இயக்குநர் பாலுமகேந்திரா சாரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 

"உங்க குறும்படம் பார்த்தேன். நேரில் வாங்க சந்திப்போம்" என்றார். எனக்கு தலைகால் புரியவில்லை. அப்பாவுடன் அவர் வீட்டுக்குப் போனேன். அவர் "எனக்கு நான்கு நாட்களாக தூக்கமே இல்லை. பல தடவை உங்க குறும்படத்தைப் பார்த்தேன். திரை மொழி ரொம்ப நல்லாவே இருக்கு" என்றதுடன் "சினிமாவுக்கென ஒரு மொழி இருக்கு. அது உங்க பையனுக்கு ரொம்ப நல்லாவே வருது. அவனுக்குத் துணையா இருங்க"ன்னு அப்பாவிடம் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டோம். 

அத்துடன், ஈழப் பிரச்சினையை ஒட்டி தான் எழுதி வைத்திருந்த ஒரு குறும்படத்துக்கான குறிப்புகளை என்னிடம் தந்து, அதைப் பயிற்சிக்காக திரைக்கதையாக உருவாக்கும்படி சொன்னார். நானும் அப்படியே செய்து கொண்டுபோய் கொடுத்தேன். என்னை வெகுவாகப் பாராட்டியதை இன்றும் மறக்க முடியாது. அதன்பின், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவரைச் சந்திப்பது வழக்கம் ஆனது. நிறைய திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்து பல மணி நேரம் விவாதிப்போம். எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும், நாம் மிக உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப் படைப்பாளி நம்மிடம் மாணவ மனநிலையுடன் பழகுகிறாரே என்று. என்னைப் போல இளைஞனாகவே இறங்கிவந்து அவ்வளவு நெருக்கமாகப் பழகுவதும் விவாதிப்பதும் பாலுமகேந்திரா சாருக்கு மட்டுமே உரித்தான உயரிய அணுகுமுறை.

அந்தக் காலக்கட்டத்தில், திரைப்படம் சார்ந்த படிப்பை முறையாகப் படிக்கலாம் என்ற எண்ணம் வலுவானது. அதன் தொடர்ச்சியாக லாஸ் எஞ்செல்ஸில் உள்ள 'யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா'வில் விண்ணப்பித்தேன். சீட்டும் கிடைத்தது. அங்கு செல்வதாக இருந்தால் ரூ.7 லட்சம் தயார் செய்ய வேண்டும். அந்தப் படிப்பு மூலம் பலன் கிடைக்குமா என்பதற்காக நிறைய விசாரித்தேன். அப்போதுதான் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழகப் படிப்பு குறித்து நன்றாகவே தெரியும்.

"உங்க முடிவை மாத்திக்கோங்க. அங்க போய் அங்குள்ள மக்களுக்காக படமெடுப்பதாக இருந்தால் அங்கு செல்லலாம். மீண்டும் இங்கு வருவதாக இருந்தால் வேண்டவே வேண்டாம். இங்கே இருந்தபடியே சினிமாவைக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் இங்கிருக்கும் மக்களுக்கான படைப்பைத் தர முடியும். இல்லையென்றால் உங்களை அறியாமல் ஒருவித அந்நியத்தன்மை உங்களைத் தொற்றிக்கொள்ளும். இப்போதைக்கு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேருங்கள். பேராசிரியர் ராஜநாயகம் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்யுங்க," என்று அறிவுரை கூறினர். அதை அப்படியே பின்பற்றினேன். எனக்கு சினிமா குறித்த பார்வையையே மாற்றினார் பேராசிரியர் ராஜநாயகம்.

உதவி இயக்குநராக இருந்தபோது...
உதவி இயக்குநராக இருந்தபோது...
கல்லூரியில் பேராசிரியர் ராஜநாயகத்துடனும், வெளியே வந்தபிறகு பாலுமகேந்திரா சாருடனும் என் நேரத்தைச் செலவிட்டேன். அதுவே எனக்குத் தேவையான பயிற்சிப் பட்டறையாக இருந்தது. அவர்கள் கொடுக்கும் பயிற்சிகளை அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செய்து வியப்பில் ஆழ்த்துவதே என் நோக்கமாக இருக்கும். நாம் நேசிப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதற்கு மெனக்கெடும்போது நம் திறமையும் தானாக மேம்படும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

ஒரு பக்கம் சினிமாவைக் கற்றுக்கொண்டும், இன்னொரு பக்கம் மக்களை நேரில் சந்தித்து ஆய்வுப் பணியில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்தது. கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள்ளேயே இரண்டு திரைக்கதைகளை எழுதி வைத்திருந்தேன். வெளியே போனதும் படமெடுக்க வேண்டும் என்பது கனவு. கல்லூரி முடித்தபோது பேராசிரியர் ராஜநாயகம் சொன்னது அதிர்ச்சியளித்தது. "இப்போதே படமெடுக்கும் முயற்சியில் இறங்காதே. கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு போன்றவர்களிடம் போய் உதவியாளராக சேர். இங்கே சினிமாவில் படைப்பாற்றலைத் தாண்டி அதன் வணிகப் போக்குகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியம்," என்றார்.

சரி, பாலுமகேந்திரா சாரிடம் அறிவுரை கேட்கலாம் என்று போனேன். அங்கே இன்னோர் அதிர்ச்சி. அவரும் பேராசிரியர் ராஜநாயகம் சொன்னது போலவே கமர்ஷியலாக வெற்றி பெற்ற இயக்குநர்களிடம் சேரச் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'பொல்லாதவன்' பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன் சாரிடமோ அல்லது 'காதல்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாரிடமோ சேர்ந்து 'ரியலிஸ்டிக்' சினிமாவை கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு ஒரே மாதிரியான இந்த இரண்டு அறிவுரைகளுமே வேறு மாதிரியாக இருந்தது.

எதையும் குழப்பிக்கொள்ளாமல் அவர்களின் அறிவுரைகளின்படியே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் சேர்ந்தேன். அப்போதுதான் அவ்விருவரும் எனக்குச் சொன்ன அறிவுரையின் மேன்மை புரிந்தது.

காத்திருப்புப் போராட்டங்கள், சில புறக்கணிப்புகளுடன் 'அருவி' உருவாகி வெளியானச் சூழல்கள்...

*** இன்னும் பகிர்வேன் ***

அருண் பிரபு புருஷோத்தமன் (28): 2017 இறுதியில் வெளியானாலும் மக்கள் மனதிலும் விமர்சகர்கள் பார்வையிலும் முன்னிலை இடத்தைப் பிடித்திருக்கும் 'அருவி' படத்தின் இயக்குநர். தனது தனித்துவமான திரைமொழி மூலம் முதல் படைப்பிலேயே கவனத்தை ஈர்த்துள்ள நம்பிக்கை நட்சத்திரம். சினிமா மூலம் மக்களை மகிழ்விப்பதும் நெகிழ்விப்பதும் ஒருசேர நிகழ்த்திக் காட்டியிருப்பதால் இவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 7 | தெரிவில் கவனம் கொள் - நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் [பகுதி 2]

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்