பாண்டிச்சேரி பீச்சில் செயற்கை மணல் பரப்பு: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

0

புதுச்சேரி என்றதும் பிரெஞ்சுக் காரர்கள் வடிவமைத்த நேரான வீதிகள், பாரம்பரிய கட்டிடங்கள், மணக்குள விநாயகர் ஆலயம், அழகிய நீண்ட கடற்கரை தான் நினைவுக்கு வரும். இவற்றை ரசிக்க, வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனர். புதுச்சேரிக்கு சுற்றுலா மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது.

இதனால் சுற்றுலாவை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ. 107.2 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்து, முதல் தவணையாக ரூ. 21.40 கோடி நிதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு திட்டங்களை செல்படுத்துவதற்கான பணிகளையும் அரசு துரிதப்படுத்தியுள்ளது.

அழகிய கடற்கரைக்கு பெயர்போன புதுச்சேரி கடற்கரை, கடல் அரிப்பால் இயற்கை மணல் பரப்பு மறைந்து தற்போது வெறும் கருங்கற்கள் தான் காட்சியளிக்கின்றன. இதனால் கடல் அலையில் கால் நனைத்து விளையாடும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது.

புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்கவும், செயற்கை மணல் பரப்பை உருவாக்கவும் அரசு முடிவு செய்தது. கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உருவாக்க தொழில்நுட்பக் குழுவினர் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். 

கடல் நீரோட்டத்தில் மணல் அடித்துச் செல்லாமல் தடுக்கவும், கடலில் அள்ளப்படும் மணலை ஒரு குறிப்பிட்ட திசையில் காற்று வீசும்போது கரையில் கொட்டினால் செயற்கை மணல் பரப்பை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தில் தூர்வாரும் மணலை புதுச்சேரி கடற்கரையில் கொட்டி செயற்கை மணல் பரப்பு உருவாக்க திட்டமிடப்பட்டது. முகத்துவாரம் ரூ. 14.89 கோடி மதிப்பில் மத்திய அரசு நிறுவனமான டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. கப்பலுடன் கூடிய தூர்வாரும் இயந்திரம் மூலம் முகத்துவாரத்தில் இருந்து எடுக்கப்படும் மணல் பெரிய ராட்சத பைப் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, சீகல்ஸ் ஓட்டல் அருகில் கடற்கரை பகுதியில் பீய்ச்சி அடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அதே நேரத்தில் தூர் வாரி கடற்கரையில் கொட்டப்படும் மணல், கடல் அரிப்பால் மீண்டும் கடலுக்கு செல்லாமல் இருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடற்கரை சாலையொட்டி செயற்கை மணற்பரப்பை உருவாக்க, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, 25 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டத்தை மார்ச் மாதம் முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.  

தலைமை செயலகம் எதிரில், கடலில் கூம்பு வடிவிலான அமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக, கடலில் 200 மீட்டர் நீளத்திற்கு, கருங்கற்கள் கொட்டப்பட்டு இடம் சமன் செய்யப்பட்டது. மணல்பரப்பினை கடல் அலை அரித்து செல்லாதவண்ணம் நிலையாக வைத்துக்கொள்ள, 50 மீட்டர் அகலம், 60 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 900 டன் எடையுள்ள, கூம்பு வடிவிலான இரும்பு மிதவையை கடலுக்குள் நிரந்தரமாக வைக்க முடிவு செய்யப்பட்டது

மிதவையை கடலில் மூழ்க விடும்போது, அலையின் வேகத்தை குறைப்பதற்காக சப்மெர்ஜ்டு ரீப்புகளுக்கு சுற்றிலும் போடுவதற்காக ராட்சத கய்சன் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டது. மிதவை அடித்து செல்லாத வண்ணம் அதனுள் மணல் நிரப்பப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் 1 புள்ளி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் பரப்பு உருவாகும். இதனால் சுற்றுலா பயணிகள் கடல் மணல் பரப்பில் இறங்கி நடந்து சென்று, கடற்கரையின் அழகை ரசிக்கலாம்.

கருங்கற்களையும், பாறைகளையும் கடந்து, புதுச்சேரி கடற்கரையில் மணல் பரப்பு பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையொட்டி செயற்கை மணல் பரப்பு உருவாக்கி வருவது, குழந்தைகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இறங்கி குளித்தும், கால்களை கடல்நீரில் நனைத்தும் மகிழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுரையாளர்: ஜெசிக்கா

Related Stories

Stories by YS TEAM TAMIL