ஸ்டிரீமிங் முறையில் திரைப்படங்களை வழங்கும் 'ஸ்பூல்'

0

நெட்பிளிக்ஸ் போன்ற இணைய சேவைகள் பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஸ்டிரீமிங் முறையில் வழங்கி வருவதால், டிவிடி பார்லர்கள் மக்கள் மனதில் இருந்து வேகமாக மறைந்து வருகின்றன. இந்தியாவிலும் கூட, திரைப்படங்கள் வெளியான சில வாரங்களில் எல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.

ஆனாலும் என்ன, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா சார்ந்த டிவி நிகழ்ச்சிகள், ஐபிஎல் போட்டிகள் மற்றும் திரைப்படங்களை பார்ப்பது சிக்கலானதாகத் தான் இருக்கிறது. இந்த குறையை நண்பர்களான சுபின் சுப்பையா, எஸ்.மோகன் மற்றும் சுதேஷ் ஐயர் உணர்ந்தனர்.

புதிய பாதை

வெளிநாடுகளில் டிடிஎச் சேவை நிறுவனங்கள் சர்வாதிகாரமாக செயல்படுவதையும் இவர்கள் உணர்ந்தனர். உதாரணமாக சிங்கப்பூரில் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் செய்திகளுக்கான பேக்கேஜ் தவிர இந்த நிறுவனங்கள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளை காண 40 முதல் 50 டாலர் கூடுதலாக வசுலிக்கின்றன. இவற்றை எல்லாம் உணார்ந்ததன் விளைவாக மூவரும் இந்திய உள்ளடக்கத்தை வழங்குவதற்கான வீடியோ ஸ்டிரீமிங் சேவையான "ஸ்பூல்" (Spuul) என்னும் நிறுவனத்தை உருவாக்கினர்.

சுதேஷ், இந்தியாவில் சோனி டெலிவிஷனில் பணியாற்றியதால் இந்தத் துறை பற்றி நன்கு அறிந்திருந்தார். மோகன் சிலிக்கான் வேலி மற்றும் சிங்கப்பூரில் தொழில்முனைவு அனுபவம் கொண்டிருந்தார். சுபின் வங்கியாளர். சுதேஷ் தனது நண்பரான ராஜீவ் வைத்யாவை சி.இ.ஓவாக கொண்டு வந்து இந்திய செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க வைத்தார். பீட்டா வடிவில் ஸ்பூல் 2014 ல் அறிமுகமானது. அதன் பிறகு அதன் கவனம் இந்தியா சார்ந்ததாக மாறியது. 60 சதவீத வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் வசிப்பவர்களாக இருந்தது தான் காரணம்.

வளர்ச்சி

டிஸ்னி, யாஷ்ராஜ் பிலிம்ஸ் மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டாலும் ஸ்பூல் எந்த ஒரு நிறுவனம் அல்லது நெட்வொர்க் சாராத சுயேட்சையான மேடையாக இருந்தது.

“திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை இணையதளம் அல்லது செயலி மூலம் அணுகும் வசதியை அளிக்கிறோம்” என்கிறார் ராஜீவ். 

இந்தச் சேவையை பயன்படுத்தும் அனுபவம், சிக்கல் இல்லாமல் இருக்கும் என்றும் சொல்கிறார். திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் கட்டத்தில் நிறுத்துவிட்டு பின்னர் அதே இடத்தில் இருந்து எந்த சாதனத்திலும் தொடர்ந்து பார்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

நெட்வொர்க் பிரச்சனைக்கு தீர்வு

“இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு 24 மணி நேரம் டவுண்லோடாக செயல்படக்கூடிய வகையில் வசதியை உருவாக்கினோம். டவுண்லோடு செய்து கொண்டிருக்கும் போது, நெட்வொர்க் மோசமாக இருக்கிறதா என தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ப போனில் பைட் விகிதத்தை மாற்றி ஸ்டிரீமிங்கை தொடர வைக்கலாம்” என்று ராஜீவ் விளக்குகிறார்.

இதனால் பயனாளிகள் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. பிரிமியம் மாடலில் செயல்படுகிறது. உதாரணத்திற்கு 1,000 படங்கள் இருக்கின்றன என்றால் 600 படங்களை இலவசமாக பார்க்கலாம், 300 படங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். மாதம் ரூ.300 சந்தா செலுத்தினால் 600+ 300 விளம்பரமில்லா படங்களை பார்க்கலாம். 100 படங்கள் கட்டணப்பிரிவில் வரும்.

புதிய படங்கள் கட்டணச் சேவையில் வந்து பின்னர் இலவச பிரிவில் இடம்பெறும்.

"எங்களிடம் பெரிய பட்டியல் இல்லை. ஏனெனில் டேட்டா ஆய்வு செய்து யார் எப்போது எந்த படங்களை பார்க்கின்றனர் என அறிந்திருக்கிறோம். குறைவான எண்ணிக்கையிலேயே பழைய படங்களை பார்க்கின்றனர். எனவே 2009 க்கு பிறகான படங்களே அதிகம் உள்ளன” என்கிறார் அவர்.

மினிமம் கியாரண்டி மற்றும் வருவாய் பகிர்வு முறையில் வர்த்தகம் அமைகிறது. தயாரிப்பு நிறுவனத்திற்கு மினிமம் கியாரண்டி தொகை வழங்கப்படுகிறது. பின்னர் பார்வைகளுக்கு ஏற்ப வருவாய் பகிரப்படுகிறது.

சவால்கள்

ஆனால் ஸ்பூல் மற்றும் அதன் நெட்வொர்க்கை அமைப்பது எளிதாக இருக்கவில்லை. முன்பெல்லாம் ஒரு படம் வெளியான ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்தே அதை ஸ்டிரீமிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போது படம் வெளியான சில வாரங்களிலேயே இது சாத்தியமாவதாக ராஜீவ் கூறுகிறார். தயாரிப்பு நிறுவனங்கள் இதன் வருவாய் வாய்ப்பை உணர்ந்துள்ளன என்கிறார் அவர்.

இணையம் மூலம் பணம் செலுத்துவதை ஏற்க வைப்பதும் ஒரு சவாலாக இருந்தது என்கிறார். இலவசமாக கிடைக்கும் ஒன்றை கட்டணம் கொடுத்து டவுண்லோடு செய்ய வைப்பதும் சிக்கலாக இருந்தது. ஆனால் இப்போது மாறிவருகிறது என்கிறார் அவர்.

பயனாளிகளில் ஒருவரான கவுரவ் ஜிந்தால் ஸ்பூல் சேவையில் படம் பார்ப்பது சிக்கல் இல்லாத அனுபவமாக இருக்கிறது என்கிறார்.

எதிர்கால திட்டம்

ஸ்பூல் குழு அதிக அளவிலான விளம்பரத்தில் ஈடுபடவில்லை என்கிறது. மாதந்தோறும் 20 சதவீத வளர்ச்சி இருப்பதாகவும் தெரிவிக்கிறது. ராஜீவ் வருவாய் விவரங்களை பகிரவில்லை என்றாலும் 90-95 சதவீதம் கட்டணம் மூலம் வருவதாக கூறுகிறார். 50 லட்சம் சந்தா இருப்பதாகவும், 20 லட்சம் தீவிர பயனாளிகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

"அதிக பிராந்திய மொழிப் படங்கள் தேவை, இப்போது இவை 10 சதவீதம் தான் உள்ளன. தென்னிந்திய மொழிகள் மற்றும் பஞ்சாபி மொழிகளில் கவனம் செலுத்துகிறோம்” என்கிறார் ராஜீவ். 

வாடிக்கையாளர் பரப்பையும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை சொந்த நிதியில் செயல்பட்டு வருகிறது.

யுவர்ஸ்டோரி பார்வை

இந்தியாவில் வீடியோ ஸ்டிரீமிங் சேவை பிரபலமாகத் துவங்கியிருக்கிறது. ஹாட்ஸ்டார் (Hotstar ), ஈராஸ்நவ் (Eros Now),ஹூக், மூவிஸ் (Muvizz )ஆகியவை இந்தப் பிரிவில் செயல்படுகின்றன. ஹீரோடாக்கிஸ் போன்ற பிராந்திய மொழி சேவைகளும் உள்ளன.

ஹூக் (HOOQ ) போன்ற சேவைகள் பழைய தொலைக்காட்சி தொடர்களையும் வழங்குகின்றன. ஸ்பூல் இன்னமும் டிவி மற்றும் ஆங்கில மொழி உள்ளடக்கம் பக்கம் செல்லவில்லை. சொந்த உள்ளடக்கத்தையும் உருவாக்க உள்ளது. நெட்பிளிக்ஸ் வருகைக்குப்பின் இவை எப்படி செயல்படுகின்றன என்று பார்க்க வேண்டும்.

இணையதள முகவரி: Spuul

ஆக்கம்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்