தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளில் இ-மெயில் வசதி: பிஎஸ்என்எல் அறிவிப்பு!

0

இந்தியாவின் பல மாற்றங்களும் புதிய திட்டங்களும் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கும் வேளையில் மற்றொரு நல்ல செய்தியும் வந்துள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கனவை நினைவாக்க பிஎஸ்என்எல் Bharat Sanchar Nigam Limited (BSNL) தனது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ‘டேட்டா மெயில்’ எனும் ப்ராண்ட் சேவையான அதன் மூலம், பயனாளிகள் தங்களது இ-மெயில்களை அவரவரின் தாய் மொழியில் உருவாக்கி, மெயில்கள் அனுப்ப முடியும். தற்போது எட்டு இந்திய மொழிகளில் இந்த சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. 

’Datamail’, யுவர்ஸ்டோரி நடத்திய மொபைல் ஸ்பார்க்ஸ்’16 விழாவில் கலந்து கொண்ட ஒரு ஸ்டார்ட்-அப் ஆகும். மொபைல் போன்களில் உள்ள மொழி சிக்கலை நீக்கி எல்லாரையும் தொழில்நுட்பத்துடன் இணைக்க உதவும் நிறுவனமாகும். Xgenplus என்ற இ-மெயில் தீர்வு நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ’Datamail’. ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் அல்லாத மொழிகளில் எழுதப்படிக்க தெரிந்த மக்களுக்கு இடையே பாலமாக இது இயங்கி வருகிறது. 

ஊரக இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு இ-மெயில் வசதியை சுலபமாக்க பிஎஸ்என்எல் எடுத்துள்ள முயற்சி ஆகும். ஆங்கிலம் தெரியாதவர்களும் இணையத்தை அவரவர்களின் மொழிகளில் பயன்படுத்த ஊக்குவிக்கும் நடவடிக்கை இது. இந்த புதிய பிராந்திய மொழி     இ-மெயில் முகவரியின் மூலம், சுமார் 8.9 கோடி மக்களை தங்களின் வாடிக்கையாளர்களாக பெற பிஎஸ்என்எல் இலக்கு வைத்துள்ளது. 

அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தியின் மூலம் இதை பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனர் அனுப்பம் ஸ்ரீவத்சவா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“பிராந்திய மொழியில் இ-மெயில் முகவரி வழங்குவது உலகளவில் ஒரு புதிய முயற்சி ஆகும். இனி இந்தியாவில் உள்ள அனைவராலும் அவரவர்களின் மொழியில் இ-மெயில் முகவரி வைத்திருக்கவும், தாய் மொழியில் பிறருடன் தொடர்புக்கொள்ளவும் முடியும்,” என்றார்.

 DataOne.Bharat என்ற டொமெயின் கொண்டு இயங்கும் இதில், ஹிந்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் பயன்படுத்த முடியும். CFA இன் இயக்குனர் என்கே.குப்தா, இந்த ஆப் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் உள்ளது என்றார். Data XGen நிறுவனத்தின் சிஇஒ, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவிற்கு தங்களால் ஆன ஒரு பங்களிப்பு என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்த சேவையை பயன்படுத்தும் வழிமுறைகள்:

1. பிஎஸ்என்எல் ப்ராட்பாண்ட் வாடிக்கையாளர்கள் DataMail செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தமுடியும்.

2. பயனர்கள் தேவைப்படும் இ-மெயில் முகவரியின் மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

3. மொபைல் எண்ணை அதில் பதிவிடுங்கள்.

4. ‘நான் பிஎஸ்என்எல் ப்ராட்பாண்ட் வாடிக்கையாளர்’ என்று டிக் செய்யுங்கள்.

5. பிஎஸ்என்எல் ப்ராட்பாண்ட் எண்ணை எஸ்டிடி கோடுடன் பதிவிடுங்கள்.  

6. ஓடிபி எண் உங்கள் மொபைல் போனிற்கு அனுப்பப்படும்.

7. உங்களுக்கு தேவையான இ-மெயில் முகவரியை உங்கள் மொழியில் பதிவிடுங்கள்

8. இ-மெயிலை பயன்படுத்த துவங்குங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்!

டிஜிட்டல் உலகில், இந்திய மொழிகளின் பங்களிப்பு குறைவாக உள்ள நிலையில், இது போன்ற முயற்சிகள், ஒரு புதிய உலகை இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தி, ஊரக இந்தியாவிற்கு டிஜிச்சல் கதவுகளை திறந்து விடும் என்று எதிர்ப்பார்க்கலாம்.