'திருநங்கையர் தினம்'- தன் சமூகத்தின் அங்கீகாரத்திற்காக வித்திட்ட தமிழக திருநங்கைகள்!

0

பிறப்பால் ஆண் என அடையாளப் படுத்தப்பட்டு, பின்னர் தன்னுள் இருக்கும் பெண்மையை உணர்ந்து, மீதி வாழ்க்கையை பெண்ணாகவே வாழ முற்படுபவர்கள் தான் திருநங்கைகள். ஆனால், அதற்கு இந்த சமூகம் அவர்களை அனுமதிக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.

தங்கள் வாழ்க்கையை மானத்தோடு, மற்றவர்களைப் போல் மகிழ்ச்சியாக வாழ இவர்கள் பெரும் பிரயத்தனம் பட வேண்டி இருக்கிறது. ஆனால் முயற்சிகள் மேற்கொண்டாலும், அனைவருக்கும் அது சாத்தியப்பட்டு விடுவதில்லை. பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை வலி நிரம்பியதாகத்தான் உள்ளது.

எனவே தான், திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றையும் பிறப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி திருநங்கையர் நாள் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய தினத்தில் திருநங்கைகளுக்கு வாழ்த்துக்களைக் கூறிக் கொள்ளும் அதேவேளையில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் மாற்றத்திற்கு வித்திட்ட சில திருநங்கைகள் குறித்தும் நாம் தெரிந்து கொள்ளலாம்...

கல்கி சுப்பிரமணியம் :

ஆணாக பிறந்து, 16 வயதில் தான் யார் என்ற குழப்பத்திலிருந்து இன்று வரை, கல்கி பல சோதனைகளையும், சவால்களையும் கடந்து வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இருப்பினும், தன்னுடைய சோதனைமிக்க நாட்களில், எல்லாம் நன்மைக்கே என்று அவர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையும், நேர்மறை சிந்தனைகள் கொண்டு இன்று தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார்.

ஒரு கலைஞராக, தொழில்முனைவராக, நல்ல கவிதாயினியாக, கோவையில் வசிக்கும் கல்கி, ’கல்கி ஆர்கானிக்’ என்ற ரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான சோப்பு, மற்றும் சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். ஓவியக் கலைஞராக பல கண்காட்சிகளையும் நடத்தும் கல்கி பல சர்வதேச திருநங்கை மாநாடுகளில் விருந்தினராகவும் சென்றுள்ளார்.

கல்கி சுப்பிரமணியம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பத்மினி பிரகாஷ்:

‘நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிக்க நீங்கள் யார்?’ என தன்னை எதிர்த்தவர்களை எல்லாம், இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் என்ற தனது அடையாளத்தின் மூலம், ஒடுங்கிப் போகச் செய்துள்ளார் திருநங்கை பத்மினி பிரகாஷ். 

தான் எதிர்கொண்ட உடல் சவால், மன அழுத்தம், குடும்பத்தினரின் புறக்கணிப்பு, சமுதாயத்தின் வெறுப்பு திணிப்பு என அனைத்து துயரங்களையும், சவால்களையும் தவிடு பொடியாக்கினார்.

சாதனையாளாராக உருவான தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி இந்தச் செய்தியில் அவரே விவரிக்கிறார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

அஞ்சனா தேவி:

திருநெல்வேலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அஞ்சனா தேவி. சென்ற இடங்கள் எல்லாவற்றிலும் தான் சந்தித்த அவமானங்களால், திருநங்கையாகவே வேலைக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தார் அஞ்சனா. அதனைத் தொடர்ந்து திருநங்கை சமூகத்திற்கு உதவும் ’சகி ட்ரஸ்டில்’ வேலைக்கு சேர்ந்தார். 

பல திருநங்கைகளை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே அவரது வேலை. ஆனால் தொடர்ந்து அந்த வேலையில் அவரால் இருக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து Valeo India Pvt Ltdல் HR பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். 

இதோ அஞ்சனாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

திருநங்கை தேவி:

நாடு முழுவதும் பெரிதும் ஆர்வமாக கவனிக்கப்பட்ட 2016ம் ஆண்டு நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக களமிறங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் திருநங்கை தேவி. சமூக, இலக்கிய, கல்வி, சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் திருநங்கைகள் கால் பதித்து வரும் நிலையில், ’நாம் தமிழர் கட்சி’யின் வேட்பாளராக அரசியல் பிரவேசம் செய்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இவர். 

சேலத்தைச் சேர்ந்த தேவிக்கு சமூகப் பணியில் அதிக ஆர்வம். 2004ம் ஆண்டு முதல் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றியவர், 2009ம் ஆண்டு பிப்ரவரியில் ’தாய்மடி’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி ஆதரவற்ற முதியோருக்கு உணவும், உறைவிடமும் தந்து உதவுகிறார். 

இவரைப் பற்றி மேலும் விரிவாக இந்தச் செய்தியில் படித்து தெரிந்து கொள்ளலாம்...

ப்ரீத்திகா யாஷினி:

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் உதவி ஆய்வாளராக பதவியேற்று மொத்த நாட்டையும் சல்யூட் அடிக்க வைத்தவர் தருமபுரியைச் சேர்ந்த ப்ரீத்திகா யாஷினி. சிறு வயது முதற்கொண்டே காக்கிச்சட்டைக் கனவில் இருந்த ப்ரீத்திகா, அதனை அணிய சந்தித்த தடைகள் ஏராளம். ஆனால், தடைகளையெல்லாம் தவிடு பொடியாக்கி, தன் சமூகத்திற்கு உதவிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இன்று வெற்றியாளராகி இருக்கிறார். 

இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

அங்குரா:

வதோதராவில் வசித்து வரும் திருநங்கை அங்குரா, மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பட்டயப் படிப்பு படித்தவர். இருளில் இருந்து வெளிச்சத்துக்கான தனது பயணம் பற்றி இவர் எழுதி பாடியுள்ள ‘ஹூ பாங்கி பனைனே’ என்ற பாடல், ’சாங்க்ஸ் ஆப் கேரவன்’ என்ற ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் விடுதலைக்கான அவரது வேட்கையும் எதிர்பாலினம் மீதான கவர்ச்சி பற்றியும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

இவரது பாடல்கள் திருநங்கைகள் சொந்தக் காலில் நிற்பது பற்றிக் கூறுகின்றன. இவரது இந்த பாடல்கள் பற்றிய மேலும் விபரங்களை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

6 பேக் பேண்ட்:

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஒய்-ஃபிலிம்ஸ் என்ற யூத் என்டர்டெயின்மென்ட் பிரிவு, '6 பேக் பேண்ட்' (6 Pack Band) என்ற இந்தியாவின் முதல் திருநங்கைகள் இசைக் குழுவை நடத்தி வருகிறது. ஆஷா ஜெக்தாப், பாவிகா பாட்டீல், சாந்தினி சுவர்ணாகர், ஃபிதா கான், கோமல் ஜெக்தாப் மற்றும் ரவீனா ஜெக்தாப் ஆகியோர் 6 பேக் பேண்ட் உறுப்பினர்கள் ஆவர். 

ந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள பாடல்கள் பற்றி இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்...

பெரும்பாலும் திருநங்கைகள் சமூகத்தினர் பாலியல் துன்புறுத்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களால் பாதிக்கப்படுவது இன்றும் சமூகத்தில் தொடர்கதையாக உள்ளது. ஆனால், உலகமே எதிர்த்து நின்றாலும், வாழ்ந்து காட்டுவதே பெரும் சாதனை என வைராக்கியமாக சாதித்துக் காட்டி வருகின்றனர் திருநங்கைகள் பலர். அவ்வாறு தமிழகத்தில் பிறந்து வளர்ந்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சில திருநங்கைகள் பற்றி இந்தச் செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.. 

தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த திருநங்கைகள்!