முதியவர்களுக்கு சலூன் சேவைகளை வீடு சென்று அளிக்கும் நோமாடிக் ஸ்பலூன்

0

சாதரணமாக பெண்கள் செல்லும் ஸ்பா மற்றும் சலூன்களுக்கு மத்தியில், "நோமாடிக் ஸ்பலூன்" (Nomadic Spalon) சற்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறது. நடமாடும் ஸ்பா மற்றும் சலூனான இது, நேரடியாக மக்களுடைய வீட்டிற்கே சென்று தேவையான சலூன் சேவைகளை செய்துவருகிறது. அழகு நிலையங்களுக்கு செல்ல நேரமில்லாத பெண்களுக்கு இந்த நடமாடும் ஸ்பலூன் திட்டம் பெரிய வரம் என்றே சொல்லலாம்.

"அந்த நாளுடைய எல்லா வேலைகளையும் முடித்த பின், அழகு நிலையங்களுக்கு சென்று தன்னை பார்த்துக்கொள்ள நேரமில்லாமல், உடனே அடுத்த நாளுக்கு என்னென்ன தேவை என்ற யோசனையில் பெண்கள் மூழ்கிவிடுகிறார்கள். பெண்களுக்கு நேரடியாக சென்று ஒரு சிறந்த சேவையை அவர்களுடைய நேரத்திற்கு ஏற்ப தர வேண்டும் என்ற எண்ணம் தான் நோமாடிக் ஸ்பலூனை நிறுவ செய்தது." என்று பகிர்ந்து கொள்கிறார் இதன் நிறுவனர் சீமா நந்தா.

ஹோட்டல் துறையில் தன்னுடைய பணியை தொடங்கிய சீமாவிற்கு அழகு நிலையம் என்பது ஒரு விதத்தில் அடிப்படையும் கூட. சீமா ஹைதராபாத்தில் தன்னுடைய தாயார் நடத்தி கொண்டிருந்த அழகு நிலையத்தில் அவ்வப்போது உதவியாக குழந்தை பருவத்திலிருந்தே இருந்ததுண்டு. பள்ளி முடிந்ததும் அந்த அழகு நிலையத்தில் தன்னால் முடிந்த வேலைகளை பார்த்து வருவது சீமாவிற்கு பழக்கமாகியிருந்தது. ஒரு தொழிலை எப்படி கவனிப்பது வருவாயையும் வரும் வாடிக்கையாளர்களையும் எப்படி கவனித்து கொள்ள வேண்டும் என்ற தொழில் நேர்த்திகளை சீமா அப்போதே கற்றுக்கொண்டார்.

தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும், சீமா விருந்தோம்பல் துறையில் தன் பனியை தொடங்கினார்.பின், ஒரு ஹோட்டல் உரிமையாளரை திருமணம் செய்துக்கொண்ட சீமா டெல்லிக்கு குடிபெயர்ந்தார். பெரிய நகரமான டெல்லி, சீமாவிற்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல், ரேடிசன், தி பார்க், இண்டர்காண்டினெண்ட்டல் போன்ற பெரிய ஹோட்டல்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளையும் தந்தது. தினமும் 8 நேரம் ஒரே மாதிரியாக இருந்த வேலை, சீமாவிற்கு ஒரு லேசான அலுப்பையும் தந்தது.

இதை தொடர்ந்து சீமா தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து, சரும மற்றும் முடி பரமாரிப்பில் தனி படிப்பை முடித்து, ஸ்பா ஆலோசகராக கோர் வெல்னஸ் நிறுவனத்திடமிருந்து அங்கிகாரம் பெற்றார். அதே நேரத்தில் தாயையும் அடுத்த ஆண்டில் தந்தையையும் இழந்தார் சீமா. தன்னுடைய அம்மாவிற்கு பிறகு அவருடைய அழகு நிலையத்தை கவனிக்க ஆள் இல்லாததால் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதை ஒரு ஊன்றுகோலாக எடுத்துக்கொண்ட சீமா, ப்ரோவாடோ சலூன் (Provado spa ltd) தனியார் நிறுவனத்தை தொடங்கினார். ஓராண்டிலேயே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய விருப்பப்பட்ட நேரத்தில் சேவைகளை தரும் நோமாடிக் ஸ்பலூனையும் நிறுவினார் சீமா. "ஒரு மாதத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 250 வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது நோமாடிக் ஸ்பலூன்" என்று பெருமையோடு கூறுகிறார் சீமா.

முதியவர்களுக்கான பிரத்யேக சேவைகள்

பெரும்பாலான அழகு நிலையங்களில் முதியவர்களுக்கான சேவைகள் இல்லாத போது, நோமாடிக் ஸ்பலூனில் செய்யப்படும் முதியவர்களுக்கான சேவைகளால் ஒரு தனி பெருமையை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. படுக்கையில் இருக்கும் முதியவர்களுக்கு தலைக்கு குளிப்பாட்டுவது, நகங்களை வெட்டுவது போன்ற அடிப்படையான சேவைகள் நோமாடிக்கில் செய்யப்படுகின்றது. "வயதான மரத்தில் அழகை பார்க்கும் நம்மில் பல பேர், வயதானவர்களிடம் ஏன் எதையும் அழகாக பார்ப்பதில்லை? நாம் வளர வேண்டும் என்று ஓடும் ஓட்டத்தில் அவர்களுடைய முதிர்வை பற்றி மறந்துவிடுகிறோம்." என்கிறார் சீமா.

நகங்களை வெட்டுவது, தலை அலசுவது, முகத்தை சுத்தம் செய்வது முதல் முதுகு மற்றும் தலை வலிக்கான சிகிச்சை மசாஜ், என்று அனைத்து வகையான சேவைகளும் செய்யப்படுகின்றது. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், முதியோர் இல்லங்களிலிருக்கும் பெரியவர்களுக்கும் இந்த பிரத்யேக சேவைகள் செய்யப்படுகின்றது. இதை பற்றி சீமா கூறுகையில்,

"எங்களுக்கு வயதானவர்களை கவனிப்பதில் ஒரு தனி சந்தோஷம் இருக்கின்றது. அவர்கள் குழந்தைகள் போல."

நோமாடிக் குழு

தற்போது இந்த குழுவில் ஏழு முழு நேர வல்லுனர்கள் மற்றும் நான்கு பகுதி நேர பணியாளர்களும் இருக்கின்றனர். என்.ஜி.ஒ வோடு சேர்ந்து பணியாற்றுவதால், இளம்பெண்களுக்கு ஸ்பா மற்றும் சலூன் சேவைகளில் தனி பயிற்சி அளிக்கப்பட்டு, அனுபவமுள்ள வல்லுனர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்கு அவர்கள் அனுப்பியும் வைக்கப்படுகின்றனர். இதன் மூலம், அந்த பெண்களுக்கு இந்த துறையில் போதிய அனுபவமும் தேர்ச்சியும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெண்களுக்கு அன்றாடம் சந்திக்கும் ஆபத்துகளை பற்றி தெரிந்துவைத்திருக்கும் சீமா, தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், பணிக்கு வந்து, செல்ல பாதுகாப்பான வண்டி சேவைகளை அளித்துள்ளார். தவிர, வாகனத்தை ஓட்டுபவர்கள் சரியாக நடந்துக்கொள்பவர்களா, சரியான அனுபவமும் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும் சீமா தவறுவதில்லை.

நோமாடிக்கின் அடுத்தக்கட்ட விரிவு

இந்த ஆண்டிற்குள் நோமாடிக் நிறுவனத்தை டெல்லியில் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார் சீமா. தவிர, நவம்பர் 2015 ல் என்சிஆர் பகுதியில் ஒரு ஆடம்பர ஸ்பாவையும் தொடங்க ஏற்பாடுகளை அவர் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு நோமாடிக் ஸ்பா, தன் சேவைகள் மூலம் ஒரு தீர்வை தரவேண்டும் என்ற நோக்கில் மருத்துவமனைகளுடன் இணையவும் திட்டமிட்டுள்ளனர். முதியவர்களுக்கு பிரத்யேக சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் இந்த அழகு துறையில் சீமா தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் என்பது பாராட்டுதலுக்குரியது.