மருத்துவம் தொடர்பான போலியான செய்திகளை முகநூல் மூலம் சுட்டிக் காட்டி சமூகத்துக்கு உதவும் மருத்துவர்கள்!

1

கேரளாவைச் சேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழு மருந்துகள் குறித்த போலியான செய்திகளையும் தவறான தகவல்களையும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை எதிர்த்து போராடுவதற்காக ஒரு முகநூல் பக்கத்தை அமைத்துள்ளனர். இதற்கு கிட்டத்தட்ட 50,000 ஃபாலோயர்ஸ் உள்ளனர். மருத்துவத்தின் பல்வேறு துறைசார் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு ஐந்து மருத்துவர்களால் இன்ஃபோ கிளினிக் துவங்கப்பட்டது. தற்போது 25 மருத்துவர்களைக் கொண்டு இது செயல்படுகிறது. துவங்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு வயதுப் பிரிவில் இருக்கும் மருத்துவர்கள் தடுப்பூசிகள் உள்ளிட்ட தவறான நம்பிக்கைகளையும் வதந்திகளையும் தகர்த்து தெளிவுப்படுத்தியுள்ளனர். இந்த முகநூல் பக்கத்தின் அட்மின் மற்றும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியின் தடவியல் மருத்துவப் பேராசியரருமான பி எஸ் ஜினேஷ் ஃபேஸ்புக் பக்கத்தை துவங்குவதற்கான காரணம் குறித்து ’தி ஹிந்து’ நாளிதழிடம் குறிப்பிடுகையில்,

தொண்டை அழற்சி (Diptheria) மீண்டும் தலைதூக்கிய சமயத்தில் அதற்கான தடுப்பூசிகள் மற்றும் நவீன மருத்துவம் குறித்த பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. அதை எதிர்கொள்ள சமூக ஊடகங்களை பயன்படுத்த நினைத்தோம்.

முகநூல் நேரடி வீடியோக்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு எளிய மொழியில் மக்களுக்கு பொது சுகாதாரம் குறித்த சரியான தகவல்களை வழங்கினர். ஸ்க்ரோல்  நேர்காணலில் நிறுவனர் உறுப்பினரான டாக்டர்.நெல்சன் ஜோசப் குறிப்பிடுகையில்,

பொது சுகாரத்தில் இருந்த ஆர்வம்தான் எங்களை ஒன்றிணைத்தது. நாங்கள் பொது மக்களுக்காக எழுத விரும்புகிறோம். அறிவியல்பூர்வமான புரிதலை சமூகத்தில் மக்களிடையே ஏற்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம். எங்களது முயற்சியில் வெற்றியடைந்துள்ளோம். நாங்கள் புள்ளிவிவரங்களுடன் உண்மையான தகவல்களை பகிர்ந்துகொள்கிறோம். எப்போதும் பிரச்சனைகளை பரபரப்பாக்க முயற்சிப்பதில்லை. கருத்துக்களை வெளியிடும் மருத்துவரின் பெயரை வெளியிடுகிறோம். இதனால் பொறுப்பேற்றுக்கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது.

இந்தக் குழு இதுவரை 135-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் தரத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. குழு உறுப்பினர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. இருந்தும் இவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் முகநூல் பக்கத்தைத் துவங்கியதிலிருந்து இதுவரை மூன்று முறை மட்டுமே இக்குழுவினர் சந்தித்துள்ளனர். கான்ஃபரன்ஸ் கால் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்களை பயன்படுத்தியோ மட்டுமே ஒருவரை ஒருவர் தொடர்புகொள்கின்றனர்.

ஒரு கட்டுரைக்கான தலைப்பை தீர்மானித்ததும் அது ஒரு தனிநபருக்கோ அல்லது அந்த குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவிற்கோ அழைப்பு வாயிலாகவோ மெயில் வாயிலாகவோ ஒதுக்கப்படும்.

அதிக மக்களை சென்றடைய வருங்காலத்தில் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட இந்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கட்டுரை : Think Change India