புத்தகம் படித்துக் கொண்டே காபி அருந்தலாம்: பாதிக்கப்பட்ட பெண்களை பணியில் அமர்த்தி அசத்தும் சென்னை ‘Writer’s Cafe'   

1

19 வயதான சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கு வேலை கிடைப்பது சிரமமான காரியமாக இருந்தது. பலரும் அவரின் உருவத்தை கண்டு வேலை தராமல் நிராகரித்து வந்தனர். ஆம் பிரியதர்ஷினியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் தீப்புண் காயங்களோடு தோல் சுறுங்கி காணப்படும். இதுவே அவர் மீது பலருக்கும் பரிதாபம் மட்டுமே ஏற்பட காரணமாக இருந்தது. ஆனால் அவருக்கு வேண்டியதோ பச்சாதபம் அல்ல ஒரு நிலையான வேலை மற்றும் வருமானம். அவர் தி நியூஸ் மினிட் பேட்டியில் கூறும் போது,

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் என் அம்மாவுடன் சண்டை போட்டதை அடுத்து என்னை நானே எரித்துக் கொண்டேன். அதனால் என் கழுத்து பகுதியில் பெரிய தீக்காயம் ஏற்பட்டது. வேலை தேடி எங்கு சென்றாலும் என்னை மறுத்துவிடுவார்கள். ஒரு சிலரோ என் மேல் பரிதாபம் மட்டும் படுவார்கள்,” என்றார். 
பட உதவி: தி நியூஸ் மினிட்
பட உதவி: தி நியூஸ் மினிட்

ஆனால் தற்போது இவரின் பிரச்சனைக்கு தீர்வு ஒரு நல்ல பணி வாய்ப்பின் மூலம் வந்துள்ளது. சென்னையில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள ‘ரைட்டர்ஸ் கபே’ Writer’s Cafe என்ற இடத்தில் பிரியதர்ஷினிக்கு வேலை அளித்து அவரின் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளார் அந்த கபே நிறுவனர் எம்.மஹாதேவன். 

தொடர் தொழில்முனைவரும் பிரபல ஹோட்டலியரான சென்னையைச் சேர்ந்த மஹாதேவன், பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தகக் கடை ஹிங்கிம்பாத்தம்ஸ் உடன் இணைந்து புத்தகங்களுடன் கூடிய காபி ஷாப் ’ரைட்டர்ஸ் கபே’ தொடங்கி அதில் குடும்ப வன்முறை, ஆசிட் வீச்சு மற்றும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்க முடிவெடுத்தார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ராயப்பேட்டையில் 4800 சதுர அடியில் நிறுவப்பட்டுள்ள ரைட்டர்ஸ் கபே இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் சுமார் 13000 புத்தகங்களுடன், காபி அருந்திக் கொண்டே படிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது. 

சில மாதங்களுக்கு முன்னர் மஹாதேவன், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தீக்காயங்கள் கொண்ட நோயாளிகள் வார்ட் ஒன்றை பார்வையிட்டார். அவர்களை கண்ட மஹாதேவன், சமுதாயத்தில் இதுபோன்று இருப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடிவெடுத்து, கபே ஒன்றை தொடங்கி அதில் பணி வாய்ப்பு அளிக்க செயல்பட ஆரம்பித்து நிறுவியதே ரைட்டர்ஸ் கபே.

புத்தகங்களுடன் கூடிய கபே நிறுவியது பற்றி டிடி நெக்ஸ்ட் இடம் பேசிய மஹாதேவன்,

“இன்று எல்லாரும் நல்ல உணவிடம் என்பதில் இருந்து கேளிக்கையுடன் உணவருந்தும் இடங்களில் ஆர்வம் கொள்கின்றனர் மக்கள். அதனால் ஒரு கேஷுவலான, இளைஞர்களை குறிவைத்து தொடங்கப்பட்டதே ரைட்டர்ஸ் கபே. ஹிக்கிம்பாதம்சும் ஒரு புகழ்பெற்ற ப்ராண்ட் அதனால் அவர்களுடன் இணைந்துள்ளோம்,” என்றார்.

பொதுவாக கபேக்களில் இருப்பது போல் அழகிய படங்களை சுவர்களில் மாட்டிவைப்பதில் விருப்பம் இல்லாததால் இது போன்று புத்தகங்களை அடுக்கிவைத்தால் புதுமையாக இருக்கும் என்று எண்ணியதாக மேலும் கூறினார் மஹாதேவன்.

ரைட்டர்ஸ் கபேவின் மேனேஜர் கரண் தி நியூஸ் மினிட் இடம் பகிர்கையில்,

“காயங்களுடன் உயிர் பிழைத்து வாழும் ஆறு பெண்கள் தற்போது எங்கள் கபேவின் சமையலறை, பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்புக்கூடத்தில் பணியில் உள்ளனர். மேலும் நான்கு பேர் எங்களுடன் இணைய உள்ளனர்,” என்றார்.   

பணியில் சேரும் இந்த பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் கூறினார். பலவகை கேக்குகள், காபி, சேண்ட்விச்சுகளை விற்பனை செய்கிறது இந்த கபே. இதன் மூலம் வரும் வருவாய், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் (PCVC) என்ற அமைப்புக்கு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.