குடிசைவாழ் சுட்டிகளிடம் கனவுகள் விதைக்கும் 'ஸ்லம் கிரிக்கெட் லீக்'

0

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே போற்றிப் பின்பற்றப்படுகிறது. நம் கல்வி நிலையங்கள், பள்ளிகள், மைதானங்கல், காலியிடங்கள் என அங்கிங்கெனாதபடி கிரிக்கெட் விளையாட்டுதான். எல்லாவற்றுக்கும் மேலாக, பிரபலமான உள்விளையாட்டாகவும் காணப்படுகிறது. அதிகரித்து வரும் வாய்ப்புகளும், கட்டமைப்புகளும் மேல்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் சரியான பயிற்சிகளுடன் கிரிக்கெட்டை அணுக வகை செய்கிறது. சாதாரண பின்னணியில் இருந்து எழுந்து அசாதாரண சாதனைகள் படைத்த கிரிக்கெட் வீரர்கள் வாழும் சரித்திரமாகவும் நம் கண் முன்னே இருக்கிறார்கள். இந்த வெற்றிக் கதைகள் நம் குழந்தைகளின் கனவுகளை மெய்ப்படுவதற்கு மென்மேலும் உந்துதலைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால், பெரும்பாலானவர்களில் உண்மை நிலையையும் இங்கே கவனிக்க வேண்டும். இந்தியாவின் மதம் என்று கருதப்படும் கிரிக்கெட்டை பின்பற்றுவதற்குக் கூட முடியாத வசதியற்ற நிலையில் நம் குழந்தைகளில் பெரும்பாலானோர் வாடுகிறார்கள் என்பதே நம்மை வதைக்கும் நிஜம்.

குடிசைப் பகுதிகள், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறுவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், மைதானப் பயிற்சிகள், புரொஃபஷனல் பயிற்சிகள் என்பது கட்ட முடியாத தூரத்தில் உள்ள கட்டணங்களைக் கொண்டது என்பது பலருக்கும் தெரிந்ததே. அவர்கள் தங்களால் இயன்றவரையில் பிளாஸ்டிக் பந்துகள், மரக்கட்டை பேட்டுகள் மூலம் கிரிக்கெட் விளையாடும் நிலைக்கு ஆளாகின்றனர். கிரிக்கெட் என்பது அவர்களைப் பொறுத்தவரை கடைசி வரை பொழுதுபோக்காக போகிறதே தவிர, கனவு - லட்சியத்துக்கான பாதையாக மாறுவது இல்லை. கிரிக்கெட்டை தொழிலாக்கி அதில் வெற்றி பெறும் நிலை என்பது நம் நாட்டுச் சிறுவர்களைப் பொறுத்தவரை பிறப்பு அதிர்ஷ்டம்தான்.

எனினும், இந்த யதார்த்த நிலையில் ஒரு மாற்றம் பிறந்திருக்கிறது. டெல்லியில் உள்ள குடிசைப் பகுதி சிறுவர்கள் புரொஃபஷனல் போட்டிகளுடனும் பயிற்சிகளுடனும் தங்கள் திறமைகளை வெளி உலகுக்குக் காத்திட 'ஸ்லம் கிரிக்கெட் லீக்' துணைபுரிகிறது.

டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் வசிப்பவர் பி.எஸ்.புந்திர். இவர் சி.எஃப்.சி.டி. என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர். குடிசைப் பகுதி குழந்தைகளுக்காக பள்ளிகள், கணினி மையங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். ஏழை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர் என பல்வேறு தரப்பினருக்கும் இவரது தொண்டு நிறுவனம் உதவி வருகிறது. குடிசைப் பகுதிகளில்தான் அதிகம் இயங்குவதால், அங்குள்ள சிறுவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார் புந்திர். அப்போது, அந்தச் சிறுவர்களிடம் மிகுந்திருந்த விளையாட்டுத் திறமைகளையும் ஆர்வத்தையும் பார்த்து வியந்திருக்கிறார்.

நல்ல பந்தும் பேட்டும் இல்லாமலே சிறுவர்கள் சிலர் மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்தார். பணக்காரச் சிறுவர்கள் எல்லாம் அனைத்து வசதிகளுடனும் உபகரணங்களுடனும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுகிறார்கள். அவர்களைப் போலவே விளையாட வேண்டும் என்பதே தங்கள் கனவு என்று அவரிடம் சிறுவர்கள் சிலர் ஏக்கதைப் பகிர்ந்தனர். அந்தச் சிறுவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று விரும்பினார் புந்திர்.

தன் மகன் ராஜேஷ் புந்திர் மற்றும் இதர சகாக்களுடன் தனது கவலை குறித்து விவாதித்தார். இவரது நண்பர்களில் ஒருவரும், டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கமான டிடிசிஏ-வின் நடுவருமான எம்.பி.நரங் உதவி செய்ய முன்வந்தார். அந்தச் சிறுவர்களுக்கு போதுமான கிரிக்கெட் உபரணங்களை வாங்கித் தருவதுதான் முதன்மை யோசனையாக இருந்தது. ஆனால், இது நீண்ட காலத் தீர்வுக்கு வழிவகுக்காது என்பதை உணர்ந்தனர். எனவே, அந்தச் சிறுவர்களுக்காகவே தனியாக கிரிக்கெட் லீக் ஒன்றைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் அவர்களை புரொஃபஷனலாக கிரிக்கெட் விளையாட வகை செய்து, அதில் சிறந்து விளங்குவோர் அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்கத் துணைபுரியலாம் என்பதே நோக்கமாக இருந்தது. அப்படித்தான் 'ஸ்லம் கிரிக்கெட் லீக்' ‘Slum Cricket League’ பிறந்தது.

ராஜேஷ் நினைவுகூரும்போது, "முதலில் தெற்கு டெல்லி குடிசைப் பகுதிகளை இணைக்க முடிவு செய்தோம். அங்குள்ள பெற்றோர்களிடம் எங்கள் யோசனை குறித்து பேசினோம். அவர்களில் பெரும்பாலானோரும் தங்கள் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். தங்கள் பிள்ளைகளை எங்களோட அனுப்பி ஆதரவளித்தனர். முயற்சியைக் கையிலெடுத்த சிறிது நாட்களிலேயே தெற்கு டெல்லியின் 10 வெவ்வேறு குடிசைப் பகுதிகளில் இருந்து 120 சிறுவர்கள் சேர்ந்தனர். இந்த அக்டோபரில் முதல் 'ஸ்லம் கிரிக்கெட் லீக்' தொடரை நடத்தினோம். ஹெல்மெட், கிளவுஸ், பேடு என கிரிக்கெட் உபகரணங்களை அணிந்துகொண்டு முதல் முறையாக புரொஃபஷனலாக கிரிக்கெட் விளையாடியபோது, அந்தச் சிறுவர்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார்.

இந்தத் தொடரில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர். உள்ளூர்வாசிகள் மத்தியிலும் இந்தத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. மிக்கி மவுஸ் அணியை வீழ்த்திய மவுக்லி லெவன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு முறைப்படி கோப்பை வழங்கப்பட்டது. அதேபோல், தொடர் நாயகன், ஆட்ட நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து, கிரிக்கெட் தொடரை நடத்திய எம்.பி.நரங், இதைப்போலவே வடக்கு டெல்லி குடிசைப் பகுதி சிறுவர்களுக்காக வரும் டிசம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, மத்திய, கிழக்கு, மேற்கு என மற்ற பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது. அவர்களது கனவு இங்கேயே முடங்கிவிடக் கூடாது. டெல்லி முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு அழைப்பு விடுத்து மிகப் பெரிய போட்டித் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். பார்ட்னர்கள் மற்றும் ஸ்பான்ஸர்கள் துணையுடன், மாநிலம் தழுவிய அளவிலும், தேச அளவிலும் குடிசைப் பகுதி சிறுவர்களுக்கான தொடர் நடத்தவுடம் திட்டமிட்டு வருகின்றனர்.

குடிசைப் பகுதி குழந்தைகள் தங்கள் ஆசைகளையும் கனவுகளையும் அடைவதற்குத் துணைபுரிவதால், அவர்களில் பெரும்பாலானோர் தவறானப் பாதையைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்க முடிகிறது என்று நம்புகிறார் ராஜேஷ். இந்த முயற்சிகள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுவது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதில் இருந்து அவர்களில் பலரும் காக்கப்படுவதாகவும் கருதுகிறார். இந்தியாவில் இளம் வயதில் நம்பிக்கையின்மை மற்றும் சம உரிமையின்மை காரணமாகவே குடிசைப் பகுதி சிறுவர்களை போதைப்பொருள் அடிமை என்பது சட்டென பற்றிவிடுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். அந்தக் குழந்தைகளையும் கனவு காண அனுமதித்து, அவர்களின் கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்பதன் மூலம் அவர்கள் தங்கள் லட்சியத்தைத் தேர்வு செய்து, அதை அடைவதற்காகப் பயணிக்க வழிவகுக்க முடியும்.

'ஸ்லம் கிரிக்கெட் அகாடமி' ஒன்றையும் சிஎஃப்சிடி நடத்தி வருகிறது. ஸ்லம் கிரிக்கெட் லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் சிறுவர்களுக்கு, இந்த அகாடமி மூலம் புரொஃபஷனல் கிரிக்கெட் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். இதன்மூலம் அவர்கள் கிரிக்கெட்டையே தங்கள் முழு நேர தொழிலாக மாற்ற வாய்ப்புள்ளது. தங்களுக்கு புரொஃபஷனலாக பயிற்சிகள் கிடைப்பதால், இந்த அகாடமியில் பயிற்சி பெறும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் தேச அணியில் இடம்பெற்று, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே அவர்களது கனவு.

நல்ல எதிர்காலம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டதாக கூறும் ஒரு சிறுவன், "ஏழைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. இப்போது எனக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. என் கனவைத் தீர்மானித்து, அதை அடைவதற்காக ஓடத் தொடங்கிவிட்டேன். நான் வளர்ந்து வீரேந்திர சேவக் போல விளையாட விரும்புகிறேன்" என்று கூறியபடி உதிர்த்த புன்சிரிப்பில்தான் அத்தனை நம்பிக்கை!

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்