ஆம் அத்மியின் ‘ஒற்றை-இரட்டை’ வழிமுறை டெல்லியின் சுற்றுச்சூழலை காப்பாற்றுமா?

0

பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் ஆங்கிலம் பேசும் மேட்டுக்குடியினரின் அறிவுஜீவி நுட்பங்களுக்கு ஏற்றவை என நான் நினைப்பதுண்டு. சாமானிய மனிதன் வேறு முக்கிய பிரச்சனைகளில் மூழ்கியிருப்பதாகவும் நினைத்திருக்கிறேன். ஆனால் இன்று நான் நினைத்தது தவறு என ஒப்புக்கொள்கிறேன். தேசிய தலைநகரம் 'கேஸ் சேம்பர்' (அதாவது வாயு இருப்பிடம்) போல ஆகிவிட்டதாக டெல்லி உயர்நீதி மன்றம் தெரிவித்த பிறகு, சுற்றுச்சூழல் அவசரநிலையை சமாளிக்க டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசு அறிவித்த ஒற்றை-இரட்டை ( சாலை பரப்பை சுழற்சி முறையில் பயன்படுத்துவது) வழிமுறை போல வேறு எந்த பிரச்சனையும் சமீப காலத்தில் பொது வெளியை ஆக்கிரமித்துக்கொண்டதில்லை. இப்போது எல்லோரும் இது பற்றி தான் பேசுகின்றனர். எம்பிக்கள் கூட முகமூடி அணிந்து காணப்படுகின்றனர்.

டெல்லியில் மாசு, அபாய கட்டத்தை கடந்து விட்டது என்பதிலும் இதை உடனடியாக எதிர்கொண்டாக வேண்டும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. உலக சுகாதார அமைப்பு 2014 ல் 160 சர்வதேச நகரங்களின் பட்டியலில் டெல்லியை மிகவும் மாசு அடைந்த நகரம் என குறிப்பிட்டுள்ளது. தேசிய தலைநகரின் காற்றுவெளியில் நச்சுத்தன்மை மிக்க புகை மண்டலத்தை காண முடிகிறது. குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த மாசு மேலும் அடர்த்தியாக வருகிறது. இந்த பின்னணியில், வாகன எண்ணில் கடைசி இரண்டு இலக்கங்களில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாலையில் செல்ல தடை விதிக்கும் வகையிலான டெல்லி அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சாலைகளில் புழங்கும் வாகனத்தை பாதியாக குறைக்கலாம். இந்தியாவில் இது புதிய வகை பரிசோதனை என்பதால் இது அதிக அளவில் கவனத்தையும் பலவித கவலையையும் உண்டாக்கியுள்ளது. மக்களில் பலர் கவலை அடைந்துள்ளனர். இந்த கவலையை நான்கு பிரிவாக வகைப்படுத்தலாம்.

காரின் எண் தடை செய்யப்பட்ட தினத்தில் மருத்துவ அவசர நிலை உண்டானால் என செய்வது?

சொந்த வாகனங்களை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் நிலை என்ன? அவர்கள், வாகன எண் தடை செய்யப்பட்டிருக்கும் போது எப்படி பயணிப்பார்கள்? மற்ற வளர்ந்த நாடுகள் போல் அல்லாமல் இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் சொற்பமாகவே இருப்பதால் இவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் அதிக இன்னல்களுக்கு இலக்காவார்கள்.

சொந்த கார் வைத்திருக்கும் மற்றும் பணி முடிந்து இரவு தாமதமாக திரும்பும் பெண்களின் நிலை என்ன? கார்களை பயன்படுத்த முடியாத தினங்களில் அவர்கள் என்ன செய்வார்கள்? இது அவர்களின் பாதுகாப்பை பாதித்து, இரவு நேரங்களில் பணியாற்றுவதை தவிர்க்க வைக்காதா?

பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை நாடாமல் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்சென்று வர தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் பெற்றோரின் கவலை.

இவை எல்லாம் முக்கிய கவலைகள். இவற்றுக்கான தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளின் அறிக்கைகளால் குழப்பம் அதிகரித்திருக்கிறது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆம் ஆத்மி பிரதிநிதி என்ற முறையில் முதலில், இதற்கான வழிமுறைகள் குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும், நோக்கம் மற்றும் செயலாக்கத்திற்கான நாள் பற்றிய கொள்கை முடிவு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அனைவருக்கும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இரண்டாவதாக இந்த திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து முதன்மை செயலாளர், சுற்றுச்சூழல் செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி அவர்கள் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை கேட்டறிந்து அதனடிப்படையில் ஆலோசனை நடத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இறுதி செய்யும். எனவே யாரும் அச்சமடைய வேண்டாம். இறுதி திட்டம் வெளியாகும் வரை காத்திருந்து அதன் பிறகே கருத்து தெரிவிக்கவும். இறுதி வடிவத்திற்கு பிறகும் கூட ஏதேனும் குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்படும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு, தெரிவிக்கப்படும் யோசனைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படும்.

இது இந்தியாவில் புதிய திட்டம் என்றாலும் உலகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். மிகவும் சமீபத்தில் பெய்ஜிங் மற்றும் பாரீசில் இது அமலுக்கு வந்துள்ளது. மெக்சிகோ சிட்டி, பகோடா, சாண்டியாகோ, சா பாவ்லோ, லண்டன், ஏதென்ஸ், சிங்கப்பூர், டெஹரான், சான் ஜோஸ், ஹாண்டுராஸ், லா பாஸ் உள்ளிட்ட நகரங்களில் இது அமல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான விஷயம் என்ன என்றால் இது 365 நாட்களும் அமலில் இருக்கும் என நினைக்க வேண்டியதில்லை. இது ஒரு அவசர நிலை வழியாக கருத்தப்பட்டு அதற்கேற்ப தேவைக்கேற்ப நிறைவேற்றப்பட்டு, பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவது, மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூடுவது, மாசு படுத்தும் வாகனங்களை தடை செய்வது , மக்கள் தனி வாகங்களை பயன்படுத்துவதை தவிர்க்கச்செய்வது போன்ற சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த தேவையான மற்ற வழிகளையும் மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக பகோடாவில் இந்த முறை வாரத்திற்கு இருமுறை அமலில் உள்ளது. சா பாவ்லோவில் 1997 முதல் அமலில் உள்ளது பெய்ஜிங்கில் வாரம் ஒரு முறை தீவிரமாக அமல் செய்யப்படுகிறது. 2008 ஒலிம்பிக் போட்டியின் போது தான் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு அதற்கு பதிலாக மக்களுக்கு மூன்று மாதங்களுக்கான வாகன வரி விலக்கு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு நகரமும் வேறு விதமான வழிமுறையை பின்பற்றுகிறது. உதாரணமாக ஏதென்ஸ் தனது பரப்பை உள் மண்டலம் மற்றும் வெளி மண்டலம் என இருபகுதிகளாக பிரித்துள்ளது. முழு நகரமும் 24 மணிநேரமும் மாசு படுதல் நோக்கில் கண்காணிக்கப்படுகிறது. மாசுபடுத்தல் அபாய கட்டத்தை எட்டும் போது அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டுக்கான வழிமுறை வானொலி, தொலைக்காட்சி மற்றும் பொது அறிவிப்பு மையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டு உள் மண்டலத்தில் தனியார் வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன. ஒற்றை –இரட்டை முறைப்படி டாக்சிகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. வெளி மண்டலத்தில் டாக்சிகள் வழக்கம் போல இயங்குகின்றன. ஆனால் தனியார் வாகனங்கள் ஒற்றை –இரட்டை முறைப்படி இயங்க அனுமதிக்கப்படுகின்றன. சில நகரங்களில் பகல் முழுவதும் இது அமல் செய்யப்படுகிறது. சில நகரங்களில் காலை 8.30 மணி முதல் 10.30 வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில் அமல் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் இந்த முறை நாள் முழுவதும் செயல்படுத்தப்படும் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதில் உண்மையில்லை. தீவிரமாக செயல்படுத்தப்படும் பாரீசில் இந்த முறை காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அமலில் உள்ளது. மற்ற நகரங்களிலும் இது போன்ற விதிமுறைகள் உள்ளன.

லண்டன் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்கள் பொது போக்குவரத்து முறையை வலுப்படுத்துவதோடு வேறு விதமான வழிகளை மாசு கட்டுப்பாட்டிற்கு கடைபிடிக்கின்றன. இது குறைந்த புகை போக்கி மண்டலங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த நகரங்கள் மையப்பகுதியை குறிப்பிட்ட அளவுக்கு மீறிய வாகனங்கள் தடை செய்யப்படும் மண்டலங்களாக அறிவிக்கின்றன. இவற்றை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு நோக்கில் வாகனங்களை மேம்படுத்த ஊக்கம் அளிக்கப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் கூடுதலாக்கப்படுகிறது. இது போன்ற பகுதிகளில் லண்டனில் அதிக பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படுகிறது. முன்னர் மணிக்கு 5 பவுண்ட் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது மணிக்கு 10 பவுண்ட் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் வசூலான 2 பில்லியன் பவுண்ட் தொகையை போக்குவரத்து சார்ந்த வசதிகளை மேம்படுத்துவதில் செலவிடப்பட்டுள்ளது.

அதே போல, சிங்கப்பூர் கார் லைசன்ஸ் மற்றும் இடப்பரப்பு லைசன்சிற்கான முறையை உருவாக்கியுள்ளது. சிங்கப்பூரில் புதிய கார் வாங்க விரும்பும் நபர் அதற்கான உரிமத்தையும் வாங்க வேண்டும். இதனால் காரை விட அதை சொந்தமாக்கி கொள்வதற்கான செல்வு அதிகமாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட பகுதியில் நுழைய ஒருவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

பெய்ஜிங்கில் கார் வாங்க லாட்டரி போன்ற பதிவு முறை உள்ளது. இது குறிப்பிட்ட எண்கள் கொண்ட கார்கள் மட்டுமே சாலையில் செல்லும் நிலையை உருவாக்குகிறது.

சாலைகளில் வாகன பயன்பாட்டை குறைக்க பலவித வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒற்றை-இரட்டை முறை இவற்றில் ஒன்று. அவசர நிலையில் மிகவும் உதவுவது. டெல்லியும் இந்த வழியை பின்பற்ற முனைகிறது. டெல்லியை மேலும் சுற்றுச்சூழல் நட்பு மிக்கதாக்க உலக அளவிலான வழிமுறைகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் அழகான நோக்கம் கொண்ட ஒரு புதிய துவக்கம் இது என்று நம்புகிறேன். இந்த துணிச்சல் மற்றும் அழகான திட்டத்தை வெற்றி பெற வைப்போம். நம்முடைய எதிர்கால நலனுக்காக டெல்லி மக்களாகிய நாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியம். நாம் இதை செய்வோம்.

ஆங்கில கட்டுரை: அசுடோஷ் | தமிழில் சைபர்சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)