இந்தியாவின் பொறியியல் சாதனைகளின் பின்னணியில் உள்ள மாமனிதரின் தலைமை பண்புகள்!

0

குளிர்காலங்களில் பெங்களூருவில் அதிகாலை நேரங்களில் விமான நிலையத்தை நோக்கிச்செல்வது புத்துணர்ச்சியான காற்றை அனுபவிப்பதற்கான தருணமாகும். ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை காலை கொச்சி செல்லும் விமானத்தை பிடிக்கச் சென்று கொண்டிருந்தேன். இந்த பயணத்திற்காக தான் இரண்டு வாரங்களாக காத்திருந்தேன்.

கொச்சி இதமாக இருந்தது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பொன்னனி எனும் கிராமத்தை நோக்கி காரில் பயணமானேன். தெளிவாக வழி சொல்லப்பட்டிருந்தால் இடத்தை கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அந்த மனிதரே கதவைத்திறந்தார்.

நான் சந்திக்கச்சென்ற மனிதர் வேறு யாருமில்லை, பத்ம பூஷன் விருது பெற்ற,  E&Y வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, இந்தியாவின் பொறியியல் சாதனைகளின் பின்னணியில் உள்ள மனிதரான இ.ஸ்ரீதரன் தான் அவர். 86 வயதில் அவர் 50 வயது மனிதரின் துடிப்புடன் இருந்தார். அதனால் தான் இன்னமும் அவர் அரசு அமைப்புகளால் ஆலோசனைக்காக நாடப்படுகிறார்.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் பெரும்பாலான பிரச்சனைகள் மிகவும் சிக்கலாகவும், தீர்க்க முடியாதபடி ஒன்றுக்கு ஒன்று பிணைக்கப்பட்டதாகவும் இருந்தன. ஆனால் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது ஒவ்வொரு கட்டத்திலும் சரியான தலைவர்கள் இந்தியா போன்ற சிக்கலான ஜனநாயகத்தில் கூட விரைவாக மாற்றத்தை கொண்டு வந்திருப்பதை உணரலாம். ஈ.ஸ்ரீதரன், டி.என்.சேஷன், எம்.எஸ்.ஸ்வாமிநாதன், வர்கீஸ் கூரியன், நந்தன் நிலேகனி மற்றும் ஆர்.எஸ்.சர்மா போன்ற பலரை உதாரணமாக சொல்லலாம்.

சக்தி வாய்ந்த அமைப்புகள் கூட, அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வளைக்கப்படலாம். ஆனால் ஈடுபாடு மிக்கவர்கள் அமைப்புகளின் தலைமை பொறுப்பேற்கும் போது, அவற்றின் பலன் மகத்தானதாக இருக்கிறது.

இத்தகைய மனிதர்களிடம் பொதுவாக இருப்பது என்ன? இந்த முறை எப்படி வெற்றிகரமாக அமைகிறது? போன்ற கேள்விகளுக்கான ஆழமான பதில்களை எதிர்பார்த்து கொச்சிக்கு பயணமானேன்.

இந்தக் கட்டுரையில் இறுதியில், தேசத்தின் முகத்தை மாற்றிய மனிதர்களின் பொது குணங்களைச் சுருக்கமாக பட்டியலிடுகிறேன்.

இந்த மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் கடினமான சூழலை இவர்கள் சமாளித்த விதம் சுவாரஸ்யம் அளிக்கின்றன.

மதிப்பை உருவாக்கு

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பொறியியல் சாதனைகளில் ஒன்றாகும். 1914 ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலம் காலத்தை வென்று நிற்கிறது. 1964 டிசம்பர் மாதம் கிழக்கு கடற்கரையில் பெரும் புயல் தாக்கியது. டிசம்பர் 23 ம் தேதி காற்று மற்றும் அலைகளின் சீற்றம் கருணையில்லாமல் இருந்தது. 150 பயணிகளுடன் தனுஷ்கோடி பயணிகள் ரெயில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தது. புயலின் சீற்றம் காரணமாக அந்த ரெயில் பாலத்துடன் அடித்துச் செல்லப்பட்டது மிகப்பெரிய துயரமாக அமைந்தது. கன்னியாகுமரி முதல் லக்னோ வரை அந்த பாலம் மீது பலரும் ஆன்மிக மற்றும் உணர்வு பூர்வமான பந்தம் கொண்டிருந்தனர்.

அந்த பாலத்தை போர்க்கால அடிப்படையில் மீண்டும் அமைக்க வேண்டியிருந்தது. ஓராண்டு கூட அதற்கு போதுமானதல்ல எனும் நிலையில் அரசு மூன்று மாதங்களில் அதை செய்ய விரும்பியது. ரெயில்வேத்துறை இதற்காக இளம் பொறியாளர் ஒருவரை கண்டறிந்தது. அவர் கேரளாவில் விடுமுறையில் இருந்தார். தொலைபேசி அழைப்புகள் பறந்தன. அவர் விடுமுறையில் இருந்து சென்னைக்கு அழைக்கப்பட்டார். அதன் பிறகு அந்த பாலம் மூன்று மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது.

பொறியியல் அற்புதம்

மங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரண்டு துறைமுக நகரங்களும் 1998-க்கு முன் ரெயில் இணைப்பை பெற்றிருக்கவில்லை. பெங்களூரு அல்லது புனே வழியே தான் செல்ல முடியும். இதன் காரணமாக இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

நேரடி இணைப்பு இல்லாததற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. இந்த பாதை கடினமானதாகவும், பாறைகளை கொண்டதாகவும் இருந்தது. இத்தகைய திட்டத்தை செயல்படுத்து முடியுமா என்பது உறுதியாக த்தெரியவில்லை. கோவாவில் இருந்த நிலப்பகுதி மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா நிலப்பரப்பு செழிப்பாக இருந்தன. இவற்றை கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. இந்த திட்டத்திற்கு நான்கு மாநில அரசுகளின் பங்களிப்பு மற்றும் ஆதரவு தேவப்பட்டது. மற்ற ரெயில்வே திட்டங்கள் போல் இதற்கான பட்ஜெட் மூலமான நிதி ஒதுக்கீட்டிற்கே பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.

இதுவரை அரசு திட்டங்களில் முயற்சிக்கப்படாத புதிய நிதி வழிகள் முயற்சிக்கப்பட வேண்டிய நிலை. தடைகள் கடக்க முடியாததாக இருந்தன. வி.பி.சிங் ஆட்சி காலத்தில் இந்த திட்டத்திற்கான ஆதரவு மற்றும் அரசியல் உறுதியும் இருந்தது. இந்த பகுதியை சேர்ந்த மூன்று ஆளுமைகள் (ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, ராமகிருஷ்ண ஹெக்டே) இதற்குக் காரணமாக இருந்தனர். இந்த திட்டத்தை ஒருவரால் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என்பதில் ஒத்த கருத்து இருந்தது. முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்ற உறுதியுடன் ஸ்ரீதரனிடம் இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டது. நெறிமுறைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு, 1990 களில் கொன்கன் ரெயில்வே கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டது.

இந்த பாதையில் இருந்த பல இடங்கள் அணுக முடியாதவையாக இருந்தன. ஜப்பானின் கவாஸாகி நிறுவன உதவியுடன் நூற்றுக்கணக்கான இளம் பொறியாளர்கள் பைக்கில் உபகரணங்களுடன் இந்த இடங்களை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஸ்ரீதரன் முதல் ஒரு ஸ்டார்ட் அப் குழுவை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் திறமை மற்றும் நேர்மையானவர்களாக இருந்தனர். பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் இருந்ததால் சின்ன ஊழல் கூட எல்லாவற்றையும் பாதிக்கலாம். எப்போது கடினமான திட்டங்கள் கொடுக்கப்பட்டாலும், ஸ்ரீதரன் முதல் மகத்தான குழுவை உருவாக்கிக் கொள்வார். அவர் திறமையான பொறியாளர்களை ஈர்க்கும் காந்தமாக இருந்தார். சிறந்த நிறுவனர்கள் புதிய நிறுவனங்களை துவக்கும் போது இப்படி தான் செயல்படுகின்றனர்.

விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் ஆர்ப்பாடங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் சில உள்நோக்கம் கொண்டவையாகவும், சில உண்மையாகவும் இருந்தன. கோவாவில் நிலைமை கைமீறியது. ஸ்ரீதரன் இவற்றை நேர்த்தியாக கையாண்டார். அவரது தகவல் தொடர்பு அரசியல் சார்பில்லாமல், நேரடியாக அமைந்திருந்தது. திட்டத்தின் பலனை புள்ளிவிபரங்கள் கொண்டு விளக்கினார்.

போராட்டத்தை கட்டுப்படுத்த அவர் தனது நிர்வாகத்திறமை மற்றும் அரசியல் புரிதலை பயன்படுத்த வேண்டியிருந்தது. கோவாவில் ஏற்பட்ட பிரச்சனை மற்ற பகுதிகளில் வேலை மந்தமாக பொருத்தமான காரணமாக அமைந்தது. ஆனால் ஸ்ரீதரன் இதை அனுமதிக்கவில்லை. மற்ற பகுதிகளில் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. இது ரிஸ்கானது தான். கோவாவில் நிலைமையை சமாளிக்க முடியாவிட்டால் மொத்த திட்டமும் நிறுத்தப்படலாம். ஆனால் ஸ்ரீதரன் மீது ஒப்பந்ததாரர்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. காகித பணிகள் முடியும் முன் ஆட்களை களமிறக்க அவர் கேட்டுக்கொண்ட போது தயங்காமல் செய்தனர். இத்தகைய ரிஸ்க் காரணமாக இந்த பணி வெற்றிகரமாக நிறைவேறியது. அவர் ஒரு தொழில்முனைவோர் போல செயல்பட்டார்.

மனிதநேயம்

விஸ்வேஸ்வரய்யாவிற்கு பிறகு இந்திய வளர்ச்சியில் அதிகம் தாக்கம் செலுத்திய பொறியாளர் ஸ்ரீதரன் தான். அவரைப்போலவே இவரும் பொறியாளருக்கு மேலாக இருந்தார். கொன்கன் திட்டத்தின் போது அவர் தாராளமான நஷ்ட ஈடு கிடைக்க போராடினார். பெரிய திட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அவர் பரிவுடன் நோக்கினார். 5,000 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி, 50,000 பேர்களுக்கு மேல் வேறு இடத்திற்கு குடிபெயர வைக்கும் பணி குறுகிய காலத்தில் செய்து முடிக்கப்பட்டது. இந்த முயற்சியில் அவர் நேரடியாக அக்கறை காட்டியதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

ஒப்பந்ததாரர்களுக்கு குறித்த நேரத்தில் பணம் கிடைக்க ஏற்பாடு செய்தார். திட்டங்களில் இதுவே தாமதத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இவ்வாறு நிகழ அவர் அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றியும் கவலைப்படவில்லை.

மோசமான செயல்பாடுகள் பரவலாக உள்ள சூழலில் நல்ல செயல்கள் சந்தேகிக்கப்படுவது முரணானது தான்.

கண்டக் பகுதியில் ரெயில் பாலத்திகு அனுமதி அளிக்கப்பட்ட போது அவர் தரைப்பாலமும் வேண்டும் என்றார். ரெயில் பாலத்தால் ஏழைகளுக்கு அதிக பலன் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே இதற்குக் காரணம். அரசு ஏற்கும் வரை அவர் ஓயவில்லை.

சரியான கலாச்சாரம்

ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பும் இப்போது கலாச்சாரம் பற்றி பேசுகின்றன. ஸ்டார்ட் அப்போ அல்லது பெரிய நிறுவனமோ செயல்பாட்டிற்கான முக்கிய உந்துசக்தியாக கலாச்சாரம் இருக்கிறது. எங்கு சென்றாலும் அங்குள்ள கலாச்சாரத்தை மாற்றும் ஆற்றல் ஸ்ரீதரனுக்கு இருந்தது. கொச்சின் துறைமுக கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவர் செய்தது குறிப்பிடத்தக்கது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்களுக்கு இடையிலான உறவு மோதல் போக்குடன் அமைந்திருந்தது. ஆனால் சலுகை மற்றும் கண்டிப்புடன் அவர் அதை உடனே மாற்றினார். தொழிற்சங்கங்கள் போராட்டம் என மிரட்டிய போது அவர் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டார். ஆனால் அடிப்படையான விஷயங்களில் உறுதியாக இருந்தார். அவரது உண்மையான நோக்கத்தை தொழிற்சங்கங்கள் புரிந்து கொண்டன.

மெட்ரோ மகுடம்

தில்லி மெட்ரோ தான் அவரது மகுடமாக அமைந்தது. அவர் மெட்ரோ மனிதர் என்றே அழைக்கப்படலானார். சுதந்திரமான பணிக்கு உறுதி அளிக்கப்பட்டாலும் நிறைய தலையீடு இருந்தன.

அப்போதெல்லாம் அவர் தனது கொள்கை சார்ந்த அணுகுமுறையில் உறுதியாக இருந்தார். தில்லி மெட்ரோ திட்டம் மற்றம் பொது திட்டங்களுக்கான முன்னுதாரணமாக மாறியது. மற்ற மெட்ரோ திட்டங்களுக்கான ஆலோசனை சொல்ல அழைக்கப்பட்டார். ஐதராபாத் திட்டத்தின் முதல் வடிவத்தை அவர் விமர்சனம் செய்தார். பொது மக்கள் பணத்தை அபகரிக்கும் வகையில் இருப்பதாக கூறினார். அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டது, ஆனால் ஒப்பந்தம் பெற்றிருந்த சத்யம் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான சத்யம் மற்றும் மேத்தாசில் நடந்தவை அவரது கருத்துக்களை உறுதியாக்கின.

அவர் இப்படி சொல்கிறார்: பாம்பன் புதுமை தொடர்பானது, கொன்கன் ரெயில்வே நிதி அமைப்பின் அற்புதம், டெல்லி மெட்ரோ குழு உணர்வின் சாதனை.

உரையாடலின் முடிவில் தலைமை பண்பு உள்ளவர்கள் பற்றி நான் அறிந்த ஐந்து அம்சங்கள்:

• இவர்கள் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு நம்பிக்கை மற்றும் நேர்மையை பெற்றிருந்தனர். அச்சம் இல்லாமல் இருந்தனர். விளைவுகள் பற்றி கவலைப்படாமல் உறுதியாக நின்றனர்.

• தனிப்பட்ட தன்மைகளுக்கு ஒரு போதும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

• அரசுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி என அறிந்திருந்தனர். பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வருவது என்பது அரசுடன் இணைந்து அல்லது அரசு ஆதரவால் மட்டுமே செய்ய முடியும் என நம்பினர்.

• சிக்கலான மற்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பொறுமை மற்றும் உறுதி தேவை என அறிந்திருந்தனர். இதற்கு ரிஸ்க் எடுப்பது அவசியம் என்றும் அது அவர்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்கலாம் என்றும் அறிந்திருந்தனர்.

• செயல்பாட்டில் உதவி செய்த சமரசம் மற்றும் திட்டத்தின் அடிப்படையை குலைக்கும் சமரசத்திற்குமான வேறுபாட்டை அறிந்திருந்தனர். எப்போது வளைந்து கொடுக்கலாம் எப்போது உறுதி காட்ட வேண்டும் என்றும் உணர்ந்திருந்தனர்.

முடிவாக

ஊழலுக்கு எதிரான உறுதியான அணுகுமுறையால் ஓரங்கட்டப்படலாம் அல்லது குடும்பத்தினருக்கு பாதிப்பு வரலாம் என அச்சப்படவில்லையா என கடைசி கேள்வியாக கேட்டேன். அவர் கூறியது சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. கீதையை மேற்கோள் காட்டினார். 

கடமை செய்யுங்கள், பலன்கள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். இந்தியா பலவீனமான நாடு இல்லை, வலுவான அமைப்புகள் உள்ளன. சரியான பாதையில் சென்றால் ஊழல்வாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது.

(பொறுப்பு துறப்பு; ஆங்கில கட்டுரையாளர்: டி.என்.ஹரி. இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அதை எழுதியவருடையது. யுவர்ஸ்டோரி கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

 தமிழில்: சைபர்சிம்மன்