இந்திய ராணுவத்தின் தகவல்களை திருடிய ஸ்மார்ட்போன் செயலிகள் 

குறிப்பிட்ட  அந்த செயலி வழியாக, ராணுவ வீரர் கையிலிருக்கும் போனை கொண்டே அதன் ஆடியோ மற்றும் வீடியோவை ரிக்கார்ட் செய்யும் வகையில் தொலைவிலிருந்தே இயக்க வைக்க முடியும்.

0

பொதுவாக ஒரு செயலியை நாம் டவுன்லோடு செய்யும்போது, அந்த செயலி கேட்கும் அனைத்திற்கும் அனுமதி கொடுத்துவிடுகிறோம். ஆனால், நம்மையறியாமலேயே எண்ணற்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் இதனால் ஏற்பட்டுவிடுகின்றன. சில நேரங்களில் தேச பாதுகாப்பு பிரச்சினைகளில் கூட நமது இத்தகைய செயல் கொண்டு போய்விடுகிறது. சமீபத்தில், நமது ராணுவ வீரர்களை கண்காணிக்கும் ஸ்பைவேர்கள் பற்றி சிஎன்என்-ஐபிஎன் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

ஸ்மேஷ்ஆப் SmeshApp என்ற மெசஞ்சர் செயலியின் மீது தான் பாதுகாப்பு பற்றிய கேள்வி முக்கியமாக எழுந்துள்ளது. இந்த செயலியின் மூலம், ஐஎஸ்ஐ உளவு அமைப்பானது நமது ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களிலிருந்து தரவுகளை எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைத்து வந்த செயலி, அதிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த செயலியானது, ஸ்மார்ட் போன்களில் உள்ள போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், படங்கள், இவற்றுடன் ஜிபிஎஸ் செயல்பாடுகள் உள்ளிட்ட தரவுகளை திருடியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்துமே, ஜெர்மனியில் உள்ள பிபிஎஸ்மொபிப்ளக்ஸ்.காம் (pbxmobiflex.com) என்ற ஜெர்மனியிலிருக்கும் சர்வரில் சேமித்து வைக்கப்பட்டது. இந்த சர்வரை, பாகிஸ்தானுக்கு வெளியே வாழும் கராச்சியை சேர்ந்த சஜித் ராணா என்ற பாகிஸ்தானியர் உருவாக்கியுள்ளார். பதான்கோட் விமானப்படையின் முகாமை தாக்குவதற்கு முன், இந்த செயலியை பயன்படுத்தி பல தகவல்களை ஐஎஸ்ஐ உளவு நிறுவனம் திரட்டியதாக சிஎன்என்- ஐபிஎன் கூறுகிறது.

இந்த தகவல் திரட்டும் முறை மிகவும் எளிது. ராணுவ வீரர்கள், ஃபேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளால் கவரப்படுகிறார்கள். பின்னர் சேட்டிங் செய்வதற்காக இந்த செயலியை தங்கள் போன்களில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். ஒருமுறை, இந்த செயலியை டவுன்லோடு செய்துவிட்டால், அதன்பின் அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் கண்காணித்துவிட முடியும். 10 க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகளை, ராணுவ வீரர்களை கவருவதற்காக பயன்படுத்தியுள்ளனர். 12 க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள், பாகிஸ்தானியர்களின் இந்த தந்திரத்தில் அறியாமல் வீழ்ந்துள்ளனர் என ஐபின் கூறுகிறது.

இப்படிப்பட்ட நிலைமையானது, ராணுவவீரர்களுக்கு அடிப்படை தொழில்நுட்பத்தை கையாளுவதற்கான பயிற்சி இல்லாததையும், அதனால் ஏற்பட்டுள்ள ஆபத்தையும் வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதற்கு முன் குறிப்பிட்ட அந்த செயலி ஸ்டோரில் இருந்து எடுக்கப்படும் போது, அந்த ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்காக அனுமதி கேட்கும் ஸ்கீரின் ஒன்றை டவுன்லோட் செய்ய விரும்புபவர் காண முடியும். இது ஒரு கவனிக்கத்தக்க எச்சரிக்கையாகும். தொழில்நுட்ப அறிவு உள்ள ரானுவவீரரால் இதனை கவனிக்க முடியும்.

ராணுவ படைகளை தவிர்த்து, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை போன்ற துணை பாதுகாப்பு படையினரும் கூட இதில் மாட்டிக் கொண்டுள்ளனர். சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம், இதுகுறித்துள்ள பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

“அவர்கள் ஒட்டுமொத்த தொடர்புகளுடைய பட்டியலும் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் பதிவுகள், படத்தொகுப்புகள் ஆகியவை பெறப்பட்டிருப்பதுடன், எல்லா அழைப்புகளும் ரிக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. அது போன்றே இந்த செயலி வழியாக, ராணுவ வீரர் கையிலிருக்கும் போனை கொண்டே அதன் ஆடியோ மற்றும் வீடியோவை ரிக்கார்ட் செய்யும் வகையில் தொலைவிலிருந்தே இயக்க வைக்க முடியும்.” என அந்த செய்தி சேனலின் அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தி அறிக்கையை தொடர்ந்து, கூகுள் நிறுவனம் அந்த செயலியை தனது ப்ளே ஸ்டோரிலிருந்து அகற்றிவிட்டது. அது அகற்றப்படுவதற்கு முன் ஏற்கனவே 500 முறைக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டிருப்பது, நாட்டின் பல பாதுகாப்பு தகவல்கள் திருட்டு போயிருப்பதை சுட்டி காட்டியது. இந்திய படைகள் ஏற்கனவே எண்ணற்ற செயலிகளை கறுப்பு பட்டியலில் கொண்டு வந்துள்ளதுடன், அவற்றை பயன்படுத்தவும் தடைவிதித்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு ரெட்மி வகை போன்கள், தரவுகளை சீனாவில் உள்ள சில சர்வர்களுக்கு அனுப்புவதாக ஒரு அறிக்கை கூறியது. அதன் விளைவாக, இந்திய விமானப்படை க்ஸ்யாமி வகை போன்களை பயன்படுத்த தனது வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தடைவிதித்திருந்தது.

ஆக்கம்: ஆதித்ய பூஷன் திவேதி | தமிழில்: நந்த குமாரன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்