"ஓட்டத்தூதுவன் 1854"

0

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்கான படங்களில் திரையிடப்படும் போஸ்ட்மேன் பற்றிய முதல் படம் இதுதான்!

இந்தியாவில் முதன்முதலில் கடிதங்களையும் மணி ஆர்டர்களையும் மக்களிடம் கொண்டுசேர்த்த மெயில் ரன்னர்கள் பற்றிய கதைதான் 'ஓட்டத்தூதுவன் 1854'. திரையரங்குகளைத் தொடுவதற்கு முன்பே கொல்கத்தாவில் நவம்பர் 14 – 21 ம் தேதி வரை நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. தற்போது சென்னையில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற்றுவரும் சர்வதேசப் திரைப்பட விழாவிலும் போட்டிக்குரிய பிரிவில் இப்படம் திரையிடப்படவுள்ளது.

“நம்முடைய முதல் போஸ்ட்மேன்கள்தான் மெயில்ரன்னர்கள். அவர்கள்தான் காடு மலை என்று பார்க்காமல் மக்கள் எழுதிய கடிதங்களை உறவினர்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்கள். இயற்கைச் சீற்றங்களையும் கொள்ளையர்களையும் சமாளிக்கக்கூடிய உடல் வலிமை பெற்ற இளைஞர்களைத்தான் மெயில் ரன்னர்களாக தேர்ந்தெடுத்தார்கள்” என்று பேசத் தொடங்குகிறார் படத்தின் இயக்குநர் ராமு சிதம்பரம்.

இந்தியாவின் தபால் சேவை மற்றும் மெயில் ரன்னர்கள் பற்றி அவரே பேசுகிறார்.

மெயில் ரன்னர்கள் யார்?

இந்தியாவில் 1854ஆம் ஆண்டு தபால் சேவை ஆரம்பித்தது. மெயில் ரன்னர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடையும் ஓட்டமுமாக ஓடவேண்டும். கடிதங்கள் அடங்கிய பையை அடுத்த 8 கிலோ மீட்டரில் காத்திருக்கும் மெயில் ரன்னரிடம் கொடுத்துவிட்டு அவர்கள் கொடுப்பதை வாங்கி வரவேண்டும். சாலைகள் மேம்படாத தகவல் தொடர்பு வளராத காலத்தில் நாட்டில் உள்ள கிராமங்களையும் நகரங்களையும் இணைத்துவைத்தார்கள். புயல், மழை, வெள்ளம், இரவு, பகல் பாராமல் திருடர்களை சமாளித்து கடிதங்களை கொண்டுசேர்த்தவர்கள் இவர்கள்.

மலைப் பகுதிகளில் மெயில் ரன்னர்களாக பணியாற்றியவர்கள் பட்ட கஷ்டங்கள் மிக அதிகம். காட்டுவழித்தடங்களில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டும், பாம்பு கடித்தும், உடல்நலிவுற்றும் இறந்தவர்கள் அதிகம். சில இடங்களில் மெயில் ரன்னர்கள் இளைப்பாறுவதற்கும் மற்ற ரன்னர்களையும் சந்திப்பதற்கும் செக்போஸ்ட்கள் இருந்திருக்கின்றன.

மெயில்ரன்னர்களின் அடையாளம்; ஈட்டி, லாந்தர் விளக்கு, தோள்பைதான். பார்சல் சுமந்து செல்பவர்களுக்கு உதவியாக மற்றொருவரும் சேர்ந்து ஓடிவருவார். இந்தியா முழுவதும் 1300 மெயில் ரன்னர்கள் பணியில் இருந்துள்ளனர். கொல்கத்தா, சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களை அவர்கள் ஓட்டமும் நடையுமாக இணைத்து வைத்திருக்கிறார்கள்” என்கிறார் ராமு சிதம்பரம்.

'ஓட்டத்தூதுவன் 1854' திரைப்படம்

இந்த மெயில் ரன்னர்களில் ஒருவரது கதையைத்தான் வரலாற்றுப் பின்னணியுடன் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குநர்.  இப்படத்திற்கு "ஓட்டத்தூதுவன் 1854" எனப் பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தில் புதுமுகம் ஹீரோ ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருக்கிறார். நாயகி கெளதமி செளத்ரியும் புதுமுகம்தான் .

இயக்குநர் ராமு சிதம்பரத்தின் சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னைக்கு வந்த அவர் இயக்குநர் ஆதவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தின் கதை இவருடையதுதான். அதன் பிறகு பல படங்களுக்கான கதை விவாதங்கள் மற்றும் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றிய ராமு சிதம்பரத்தின் முதல் படம் இதுதான்.

“மெயில் ரன்னர்கள் பற்றி என்னுடைய தந்தை ராமகிருஷ்ணன் சொல்லி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னைக்கு வந்த பிறகும் அதே நினைவுகளுடன் இருந்தேன். இந்திய தபால் சேவையின் 150 ஆண்டு விழாவின்போது மெயில் ரன்னர்கள் பற்றி அதிக செய்திகள் கிடைத்தன. அதிலிருந்துதான் கதை எழுதத் தொடங்கினேன். 1854 காலகட்டத்தில் பல வரலாற்றுச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. டீ, புகைப்படக்கலை, தந்தியெல்லாம் அறிமுகமாகியுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து படத்திற்கான திரைக்கதை அமைத்தேன்” என்று கூறுகிறார் ராமுசிதம்பரம்.

வரலாற்றுப் பின்னணியுள்ள கதையை எடுப்பது சுலபமான காரியமல்ல. உடைகளுக்காகவும், பின்னணியில் காட்டப்படும் பொருள்களுக்காக அலைந்து திரிந்திருக்கிறார் இயக்குநர். முதலில் அவர் கையில் கிடைத்தது, இந்திய அஞ்சல் துறையின் வரலாறு என்கிற புத்தகம். அந்தப் புத்தகத்தை எழுதியவர் தமிழகத்தில் தபால் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற உயரதிகாரி. அதுவொரு இந்திய தபால் சேவை பற்றிய மிக முக்கியமான ஆவணம். அடுத்து ஜார்ஜ் போர்ஜியோ எழுதிய 'பீக்கான் போஸ்ட்' என்ற புகைப்படங்கள் அடங்கிய புத்தகம். இவற்றை வைத்துக்கொண்டு முயற்சிகளைத் தொடங்கினார்கள். சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தை தத்ரூபமாக படத்தில் கொண்டு வந்துள்ளார்கள். மெயில் ரன்னர்கள் வசிக்கும் இடத்தை மலைப்பகுதியாக மாற்றி குரங்கினி மலையை 'ஓட்டத்தூதுவன்' படத்தின் பேக்ட்ராப்பாக காட்டியிருக்கிறார்கள்.

ஜார்ஜ் போர்ஜியோ அளித்து உதவிய பழைமையான பொருட்களும் படத்திற்கு உதவியாக இருந்துள்ளன. கோடைக்காலத்தில் வெம்மையைப் போக்க பிரிட்டிஷர்கள் பயன்படுத்திய பழைமையான விசிறியைகூட தேடிப்பிடித்து படத்தில் காட்டியுள்ளனர். வரலாறு என்ற பிரம்மாண்டத்தை சின்ன குப்பியில் அடைத்த மாதிரி சிறு பட்ஜெட்டில் படமெடுத்து தமிழ்ப் படவுலகை பெருமைப்பட வைத்திருக்கிறார் இயக்குநர் ராமுசிதம்பரம்.

தமிழ் சினிமாவில் புதுமை படைக்கவேண்டும் என்று படத்தின் ஹீரோவான ராம் அருண் காஸ்ட்ரோவுக்கு மனம் நிறைய ஆசைகள். அதற்கு முதல் படமாக ஓட்டத்தூதுவன் தீனி போட்டிருக்கிறது. அந்தப் படம் திரைக்கு வரும்போது மேலும் பல பாராட்டுகளைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

"ஓட்டத்தூதுவன் 1854" திரைப்படம் ரஷ்யன் கலாச்சார மையத்தில் 11ஆம் தேதியன்று மாலை 4.15 மணிக்கு திரையிடப்படுகிறது. வரலாற்று ஆர்வலர்களும், திரைப்படப் பிரியர்களும் நேரில் சென்று இப்படத்தை ரசித்து மகிழலாம்...

a journalist, interested in social, literary, cultural and political issues of the people, and also interest in creative writing.

Stories by tharun kartic