மக்களுக்கு கழிவு மேலாண்மை குறித்து கற்பிக்க ஆவணப்படம் எடுத்துள்ள சென்னை கட்டிடக் கலைஞர்!

0

இந்த 21-ம் நூற்றாண்டில் சுற்றுச்சூழலை பல்வேறு வகைகளில் பாதுகாப்பது குறித்து நாம் அனைவரும் பேசி வருகிறோம். சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான விஷ்ணுப்ரியா இந்த நோக்கத்தில் ஆர்வம் கொண்டவர். சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகளை வடிவமைப்பது தொடர்பான இவரது எளிமையான முயற்சி நாடெங்கும் இவரைப் பிரபலப்படுத்தியுள்ளது. 

கழிவுகள் அகற்றப்படுவது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதை உணர்ந்து இது தொடர்பாக நிலையான தீர்வு காணவேண்டிய அவசியம் இருப்பதையும் உணர்ந்தார்.

”திருச்சியின் முசிறி பகுதியில் குறைவான தண்ணீர் பயன்பாட்டுடன்கூடிய சமூக கழிப்பறை குறித்து கேள்விப்பட்டேன். அதைப் பார்த்தபோது இதே மாதிரியை ஏன் மற்ற பகுதிகளிலும் பின்பற்றக்கூடாது என சிந்தித்தேன். பல அரசு அலுவலர்களும் உயர் அதிகாரிகளும் இந்த கழிப்பறையைக் கண்டு பாராட்டினர். ஆனால் இந்த திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் தேவையான எந்தவித முயற்சிகளையும் யாரும் எடுக்க முன்வரவில்லை,” என்றார் விஷ்ணுப்ரியா.

மீள் – ஆவணப்படம்

இந்த நகரில் உள்ள கழிவு மேலாண்மை அமைப்பு விஷ்ணுப்ரியாவின் கவனத்தை ஈர்த்தது. இந்தச் சமூகம் நிலநிரப்புதலுக்கு மிகக்குறைவான கழிவுகளை அனுப்புவதும் தீர்வுகளை வழங்குவதுமே ‘மீள்’ என்கிற ஆவணப்படத்திற்கு உந்துலளித்துள்ளது.

’மீள்’ என்கிற வார்த்தைக்கு ’தொலைந்தவற்றை மீட்டெடுப்பது’ என்று அர்த்தம். ஆவணப்படத்திற்கான பணி இரண்டாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. பெரும்பாலான நிதி என்னுடைய நண்பர்கள் வாயிலாகவே பெறப்பட்டது. லடாக் கிராமங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு நாங்கள் பயணித்தோம். கழிவு மேலாண்மை நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை முதன்மைப்படுத்தவேண்டும் என்பதே திட்டம். இந்த ஆவணப்படம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வெளியாகும்,” என்றார் விஷ்ணுப்ரியா.

பண ஆதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காததால் இந்த ஆவணப்படம் ஓபன் சோர்ஸில் இலவசமாகவே மக்களுக்குக் கிடைக்கும். எனவே இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கழிவு மேலாண்மை தொடர்பான தீர்வுகளை அதிகம் பேர் கண்டு பயனடைந்து பின்பற்றலாம்.

கற்றல்

ஆவணப்படத்தின் படப்படிப்பின்போது விஷ்ணுப்ரியாவிற்கும் அவரது குழுவிற்கும் மிகப்பெரிய கற்றல் அனுபவம் கிடைத்தது. யமுனா நதி மாசடைவது முதல் பெங்களூருவில் உள்ள ஏரிகள் அசுத்தமாவது வரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது அதிகரித்து வருவது குறித்து இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.

”மக்கள்தொகை அதிகரித்து வரும் காரணத்தாலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்பட்டு வருகிறது. ஆர்கானிக் மற்றும் ஆர்கானிக் அல்லாத பொருட்கள் நிலப்பரப்பில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவது அதிகரித்துள்ளது. இதனால் நிலநிரப்பல்களுக்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் வசிப்போரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தாய்ப்பால்கூட அசுத்தமாகிவிட்டது. அந்த அளவிற்கு சென்னையில் இதன் தாக்கம் உள்ளது,” என்றார் விஷ்ணுப்ரியா.

கூட்டுநிதி

தயாரிப்பிற்கு பிறகு தற்போது விஷ்ணுப்ரியாவும் அவரது குழுவும் தங்களது ஆவணப்படம் அதிகப்படியான பார்வையாளரைச் சென்றடைய கூட்டுநிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  

”3.5 லட்ச ரூபாய் நிதி உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதுவரை 1.45 லட்ச ரூபாய் நிதி உயர்த்தியுள்ளோம். எங்களது குழுவிற்கு இந்த ஆவணப்படத்திலும் அதன் நோக்கத்திலும் நம்பிக்கை இருப்பதால் அவர்கள் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆவணப்படத்தின் நிறைவுப்பணியை மேற்பார்வையிட நிதி பற்றாக்குறை உள்ளது. கழிவுகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்திலும் அதை கையாளும் விதத்திலும் இந்த ஆவணப்படம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்,” என்றார்.

தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் இந்த ஆவணப்படம் ஏற்கெனவே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் ப்ராக் மற்றும் செக் ரிபப்ளிக் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கான அங்கீகாரம் அதிகரித்து வருவதால் இதை நிறைவு செய்வது மிகவும் முக்கியமானது என்கிறார் விஷ்ணுப்ரியா.

ஆங்கில கட்டுரையாளர் : தீபிகா ராவ் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL