'தகவல் திங்கள்': இலக்குகளை அடைய உதவும் புதுமை சாதனம்!

0

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள் போல இருக்கிறது அந்த சாதனம். ஆனால் அது விளையட்டு பொருள் அல்ல: வினையாக்கப்பொருள்!

அதாவது உங்கள் செயல்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் சாதனம். எளிமையான இந்த சாதனம் புதுமைக்கான உதாரணமாகவும் இருக்கிறது என்பது தான் விசேஷமானது.

புதுமை என்றால் உலகை மாற்றக்கூடிய வகையை சேர்ந்தது அல்ல; ஆனால் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள உதவக்கூடியது. அதாவது, உங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாதனம்!

நம்மூர் பல்லாங்குழி போன்ற சின்னதாக ஒரு மரப்பலகை, ஒரு சின்ன உலோகத் துண்டு, கொஞ்சம் பெரிய உலோக குண்டு- இவ்வளவு தான் அந்த சாதனம். இத்துடன் ஒரு துண்டு சீட்டும் இருக்கிறது.

இந்த சாதனம் எப்படி செயல்படுகிறது என பார்ப்பதற்கு முன்பாக, இலக்குகளை அடைவதற்காக சொல்லப்படும் வழிகள் பற்றி நினைத்துப்பார்க்கலாம். இலக்குகளை அடைவது எப்படி எனும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கின்றன என்றாலும், பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அல்லது பழக்கத்தை மாற்றிக்கொள்வது என்பது தான் அவற்றுக்கான பொது அம்சமாக இருக்கிறது.

நீங்கள் அடைய விரும்பும் இலக்கு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவற்றை நோக்கி முன்னேறுவதற்கான வழி பழக்கங்களில் கவனம் செலுத்துவது தான். உதாரணத்திற்கு நாவல் எழுத வேண்டும் என்பது உங்கள் இலக்காக இருந்தால், நாவல் எந்த வகையை சேர்ந்ததாக இருக்க வேண்டும்?, எழுத்து நடை எப்படி இருக்க வேண்டும்? எத்தனை பக்கங்கள் கொண்டிருக்க வேண்டும்?, அதன் பாத்திரங்களை எப்படி அமைப்பது? போன்ற பல கேள்விகள் மனதில் அலைமோதலாம். இதனிடையே நமக்கு எழுத வருமா என்ற சந்தேகம் வரலாம். அல்லது எழுத முயலும் போது, நாம் எழுதும் விதம் சரி தானா? என்ற குழப்பமும் ஏற்படலாம். இந்த மனப்போராட்டங்களோடு, சோம்பலும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம். நாவல் எழுதும் எண்ணம் வெறும் ஆசையாகவே இருந்து கொண்டிருக்கும்.

நாவல் எழுதுவது என்றில்லை, உடல் இளைக்க வேண்டும் என நினைப்பதில் துவங்கி தொழில்முனைவோராக வேண்டும் என நினைப்பது வரை எல்லா வகை இலக்குகளை நிறைவேற்றுவதற்கான பாதை இத்தகைய தடைகளை கொண்டதாக தான் இருக்கின்றன. சரி, இதை வெல்வது எப்படி?

இலக்குகளை அடைய வேண்டும் என்றால், முதலில் அதற்கான பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள் என்பதை இதற்கான வழியாகச் சொல்கின்றனர். நாவல் எழுதும் விருப்பத்தையே எடுத்துக்கொள்வோம். நாம் எழுதும் நாவல் எப்படி இருக்கும்? உன்னதமான படைப்பாக இருக்குமா? என்பது போன்ற கேள்விகளை எல்லாம் விட்டு விடுங்கள். நாவல் எழுத வேண்டும் என்றால் முதலில் எழுத வேண்டும். தினமும் ஒரு பத்து பக்கம் எழுத வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு நாள் தவறாமல் எழுதி வர வேண்டும். எழுதுவது என்பது ஒரு பழக்கமாகிவிட்டால் அதன் பிறகு, மனதில் உள்ள கதைக்கு வடிவம் கொடுப்பதும், பின்னர் அதை வெட்டி திருத்தி மெருகேற்றுவதும் சாத்தியம் தான்.

ஆனால், முதலில் எழுதத் துவங்க வேண்டும் என்பது தான் முக்கியம். இந்த பயணத்தில் ஏற்படக்கூடிய ரைட்டர்ஸ் பிளாக் என்று சொல்லப்படும் எழுத்தாளர் தடைகளை எல்லாம் தாண்டி குதிக்க ஒரே வழி தொடர்ந்து எழுதுவது தான். உண்மையில் எப்படி எழுதுகிறோம், என்ன எழுதுகிறோம் என்று கவலைப்படாமல் எழுத வேண்டும் என்பதை மட்டும் இலக்காக கொண்டு தினமும் எழுத வேண்டும் என்பதை எழுத்து பயிற்சியின் முக்கிய அம்சமாகவே சொல்கின்றனர்.

நாவல் எழுதுவதற்கு என்றில்லை, எல்லா இலக்குகளுக்கும் இது தான் பொது விதி. இலக்கை அடைய எது முக்கியமோ அந்த அம்சத்தை ஒரு பழக்கமாக ஆக்கி கொள்ள வேண்டும் என்பது தான் அந்த விதி. பழக்கமாக்கி கொள்வதற்கு அந்த செயலை விடமால் முயற்சிக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொல்கின்றனர்.

இதைத் தான் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுதல் என்கின்றனர். பழக்கத்தை உருவாக்கி கொண்டால் மட்டும் போதாது; அதை விடாமல் செய்ய வேண்டும்- இதை தான் 'ஹாபிட் டிராக்கிங்' என்கிறனர். அதாவது பழக்கத்தை தொடர்ந்து செய்கிறோமா? என நம்மை நாமே கண்காணிப்பது.

செயல்களை எழுதி வைத்தல், நினைவூட்டிக்கொள்ளுதல் என இதற்கும் பலவிதமான வழிகள் சொல்லப்படுகின்றன. இதற்காக என்றே ஸ்பிரெட் ஷீட் எல்லாம் உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஸ்மார்ட்போன் யுகத்தில் இதற்கான செயலிகளும் கூட உருவாக்கப்பட்டுள்ளன.

இலக்குகளை பெரும் சுமையாக நினைக்காமல், அவற்றை சின்ன சின்ன செயல்களாக பிரித்துக்கொண்டு அந்த செயல்களை ஒரு பழக்கமாக்கி கொள்வதில் கவனம் செலுத்தினால் போதும் என்பது தான் இவற்றின் பின்னே உள்ள கருத்தாக இருக்கிறது. நிற்க, இதை அறிந்து கொண்ட பிறகும் கூட செயல்படுத்த உறுதியும், ஊக்கமும் தேவைப்படலாம்.

ஸ்பிரெட் ஷீட்களும், நவீன செயலிகளும் உதவாமல் போனால், கவலைபடாதீர்கள், உங்களுக்காக என்றே, பழக்கங்களை வெற்றிகரமாக கடைப்பிடிப்பதற்கான புதுமையான சாதனத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று அமெரிக்காவின் பிரெட்டன் சகோதர்கள் தெரிவித்துள்ளனர். பிரெட்டன் சகோதரர்கள் உருவாக்கிய சாதனம் தான் ஆரம்ப பத்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் இதற்கு ’மைட்டி டைனி வின்’ (Mighty Tiny Win) என பெயர் சூட்டியுள்ளனர். இதை அழகான பழக்க கண்காணிப்பு சாதனம் என்றும் வர்ணிக்கின்றனர்.

ஏதேனும் ஒரு சின்ன பழக்கத்தை தேர்வு செய்து, அதை தொடர்ந்து கவனித்து கடைப்பிடித்து உங்களை மேம்படுத்திக்கொள்ள இந்த சாதனம் உதவும் என்றும் சகோதரர்கள் நம்புகின்றனர்.

இந்த சாதனத்தை எப்படி பயன்படுத்துவது? முதலில் ஒரு துண்டு காகிதத்தில் நீங்கள் கடைபிடிக்க விரும்பும் பழக்கத்தை அல்லது செயலை எழுதி கொள்ளுங்கள். அந்த சீட்டை சொருகி வைப்பதற்காக என்றே இந்த சாதனத்தின் பக்கவாட்டில் ஒரு இடம் இருக்கிறது. அதில் சீட்டை வைத்து விட்டு, அந்த செயலை பின்பற்றத்துவங்குங்கள். முதல் நாள் வெற்றிகரமாக செய்துவீட்டீர்களா? நல்லது, இப்போது அந்த சின்ன உலோக குண்டை மரப்பலகை மீது உள்ள சிறிய பள்ளங்களில் முதல் பள்ளத்தில் வையுங்கள். மறு நாள் மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாக பழக்கத்தை கடைபிடித்தவுடன், இரும்பு குண்டை அடுத்த பள்ளத்திற்கு மாற்றுங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளமாக இரும்பு குண்டை மாற்றுவது நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம். பலகை மீது உள்ள பள்ளங்களை எல்லாம் நிரப்பியவுடன், உலோகத் துண்டை பலகையின் பக்கவாட்டில் உள்ள துளையில் சொருகி வையுங்கள். இது அடுத்த கட்ட முன்னேற்றத்தின் அடையாளம். இனி மீண்டும் இரும்பு குண்டை பழைய இடத்தில் இருந்து துவக்கவும். ஒரு வாரம் கழித்து, இரண்டாவது துளைக்கு உலோகக் குண்டை மாற்றுங்கள். இப்படி மாற்றிக்கொண்டே இருப்பது நீங்கள் கடைபிடிக்க விரும்பும் பழக்கத்தை வெற்றிகரமாக பின்பற்றி வருகிறீர்கள் என்று பொருள். குறிப்பிட்ட காலம் இதை செய்து வந்தால் போதும், அந்த செயல் ஒரு பழக்கமாகி விட்டிருக்கும்.

மனதில் உள்ள இலக்கை நோக்கி முன்னேற இந்த சாதனத்தை பயன்படுத்துவதை கற்பனை செய்து பாருங்கள்? அட என வியந்து போய் சொல்லத்தோன்றுகிறதா?

அந்த வியப்பு தான் இந்த சாதனத்தின் வெற்றி!

வன்பொருள் நோக்கில் பார்த்தால், மகத்தான பொருள் என்று சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம், ஒரு புதுமையான சாதனம் தான். இந்த புதுமை அன்றாட வாழ்க்கையில் ஒரு சின்ன மாறுதலை உண்டாக்கி உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருப்பதை மனதில் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் மனதுக்குள் இலக்குகள் இருக்கின்றன. ஆனால் இலக்குகளை நோக்கி முன்னேறும் விடாமுயற்சியை பெறுவது தான் சிக்கலாக இருக்கிறது.

இந்த விடாமுயற்சியை பெற மனதுக்குள் ஒரு உத்வேகமும், தொடர்ச்சியான சுய நினைவூட்டலும் அவசியம். இதை ஒரு சாதனம் மூலம் அளிக்கலாம் என பிரெட்டன் சகோதரர்கள் நினைத்திருக்கின்றனர். அதன் பயனாக தான் அழகான இந்த ’மைட்டி டைனி வின்’ சாதனத்தை அளித்திருக்கின்றனர். இது எளிதான பயன்பாடு கொண்டது. இதை வாங்கி வைத்துக்கொண்டு, மனதில் உள்ள இலக்கிற்கான சின்ன செயல் அல்லது பழக்கத்தை எழுதி வைத்து, அதை தினமும் செய்து வரவேண்டும். ஒவ்வொரு நாளும் மறக்காமல் இதை செய்து முடிக்க இந்த சாதனத்தின் செயல்முறை உற்சாகம் அளிக்கும். இரும்பு குண்டை நகர்த்துவதன் மூலம் முன்னேற்றத்தை உணரலாம். ஒரு வார கால முன்னேற்றத்தை சின்னதாக கொண்டாடவும் செய்யலாம். இலக்கை அடைதலை ஒரு விளையாட்டு போல மாற்றி விடுவதும் இந்த சாதனத்தின் சிறப்பாக இருக்கிறது.ஃ

எல்லாவற்றையும் விட முக்கியம், தற்போதைய நிலையில் இருந்து மாற வேண்டும், மேம்பட வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தி அதற்கான உத்வேகத்தையும் அளிப்பது முக்கியமானது.

இணைய யுகத்தில் ஒரு புதிய சாதனம் அல்லது பொருளை எப்படி உருவாக்கி சந்தைக்கு எடுத்துச்செல்வது என்பதற்கான அழகான உதாரணமாகவும் இது இருக்கிறது.

இந்த சாதனம் பிரெட்டன் சகோதரர்களின் மனதில் தங்களுக்கான சுய தீர்வாக உதித்திருக்கிறது. சகோதரர்களில் ஒருவரான ஹோய்ட் பிரெட்டன் ஸ்பாட்டிபை மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களில், பொருள் வடிவமைப்பாளராக பணியாற்றியவர். பிஜே பிரெட்டன் தணிக்கையாளர் மற்றும் பொருள் வடிவமைப்பில் பத்தாண்டு அனுபவம் உள்ளவர். நம்மை மேம்படுத்தும் மனிதர்களும், சாதனங்களும் நம்மைச்சுற்றி சூழந்திருக்க வேண்டும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள் என தங்களைப்பற்றி குறிப்பிடுகின்றனர். அந்த நம்பிக்கையில் தான், இந்த சாதனம், மற்றவர்களுக்கும் பயன்படும் என நினைத்து இதை சந்தைக்கு கொண்டு வர விரும்பியுள்ளனர்.

புதிய பொருள் ஒன்றை மக்களிடம் கொண்டு செல்ல இணைய நிதி திரட்டல் மேடையாக கிக்ஸ்டார்ட்டரை விட சிறந்த வழி என்ன இருக்கிறது. சகோதரர்களும் அதைத் தான் செய்துள்ளனர். கிக்ஸ்டார்ட்டரில் இதற்கான கோரிக்கை பக்கத்தை அமைத்து இந்த சாதனம் பற்றியும், அதன் பின்னே உள்ள கோட்பாடு பற்றியும் விளக்கி இதற்கான நிதி ஆதரவை கேட்டுள்ளனர். அழகான வீடியோ விளக்கத்தையும் அளித்துள்ளனர்.

ப்ரெட்டன் சகோதரர்கள்
ப்ரெட்டன் சகோதரர்கள்

இதற்கென தனி இணையதளமும் அமைத்துள்ளனர். இதனிடையே புதிய பொருள் கண்டறியும் சேவையான பிராடக்ட் ஹண்ட் தளத்திலும் இந்த சாதனம் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. உண்மையில், இந்த சாதனத்தை விட முக்கியமானது, தினசரி வாழ்க்கையில் மேம்பாடு அளிக்க உதவக்கூடிய ஒரு சாதனம் அல்லது பொருளை வடிவமைத்து, இணையம் மூலம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது சாத்தியம் என்பது தான் இதன் மூலம் நாம் பெறக்கூடிய செய்தி.

சாதனத்திற்கான கிக்ஸ்டார்ட்டர் பக்கம் , சகோதரர்களின் இணையதளம்

தகவல் திங்கள் தொடரும்...

முந்தைய பதிவுகள்: வன்பொருளில் புதுமை செய்வோம் வாருங்கள்!

விக்கிபீடியாவுக்கு வேண்டும் ஒரு ஆதாரமாணி!

70 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தை ஊகித்த எழுத்தாளர்!