தனது காதலரை மணமுடிக்கும் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிலா!

மணிப்பூரை சேர்ந்த, மனித ஆர்வலர் இரோம் ஷர்மிலா திருமணத்துக்குப் பிறகு தன் கணவருடன் கொடைக்கானலில் தங்க முடிவு செய்துள்ளார்...

1

மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிலா, புதன்கிழமையன்று கொடைக்கானலில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் தனது திருமணத்தை பதிவு செய்துள்ளார். தன்னுடைய நீண்ட கால நண்பரான, பிரிடிஷ் நாட்டைச் சேர்ந்த தேஷ்மந்த் கொடின்கொவை அவர் திருமணம் செய்ய உள்ளார்.

இரோம் மற்றும் அவரது வருங்கால கணவரும், இரண்டு மணிநேரம் பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய செலவிட்டனர். இது கலப்பு திருமணம் என்பதால் இந்து திருமண சட்டத்தின்படி, திருமணத்தை உடனடியாக அனுமதிக்க முடியாது என்று துணை பதிவாளர் தெரிவித்துள்ளார். எனவே இதை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ்பதிவு செய்ய வேண்டும், அதற்கு 30 நாட்கள் அறிவிப்பு தேவை.

மணிப்பூரில், ஆயுதப்படை சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடம் உண்ணாவிரதமிருந்து உலகம் முழுவதும் பேசப்பட்டவர் இரோம் ஷர்மிலா. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை (AFSPA) நீக்கும் வரை சாப்பிடவும், குடிக்கவும், தன்னை அலங்கரித்துக்கொள்ளவும் போவதில்லை என்று தனி மனுஷியாக போராடிய இரோம் ஷர்மிலா கடந்த வருடம் ஆகஸ்டில் தனது போராட்டத்தை முடித்தார். போராட்டத்தை முடித்து ஓராண்டு கழித்து, ஆகஸ்ட் 2017-ல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த 16 வருடத்தில், இரோம் பல முறை கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டார்.

“நான் இன்னும் 16 ஆண்டு உண்ணாவிரதம் இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை, ஆயுதப்படைச் சட்டத்தை முதல் அமைச்சரால் நீக்க முடியும் என்றால், நான் முதல் அமைச்சருக்கு போட்டி இடுவேன்” என்று இரோம் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டப்பின், இரோம் மணிப்பூர் தேர்தலில் கலந்துக் கொண்டார். ஆனால் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று தேர்தலில் தோல்வியுற்றார். தனது இளமை வாழ்கையை மணிப்பூர் மக்களுக்காக அற்பனித்த அவருக்குக் கிடைத்தது வெறும் 90 வாக்குகள் மட்டுமே. இதனால் விரக்தி அடைந்த இரோம் மணிப்பூரை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலையில் வந்து தங்கினார். தற்போது அங்கேயே திருமணம் செய்து, தன் கணவர் தேஷ்மந்த் கொடின்கொவுடன் சாதாரண வாழ்கையை வாழவும் முடிவு செய்துள்ளார். தேஷ்மந்த் கொடின்கொ கொடைக்கானலில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இரோம் தனக்கு கொடைக்கானலில் அமைதி கிடைப்பதாகவும், தான் இங்கு சுதந்திரமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தேவை இருந்தால் பொது நலத்துக்காக குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL