வாசிப்பு நேசர்களுக்கு சென்னையில் 'புத்தகப் பொங்கல்'!

0

ஜனவரி 13-ல் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தொடங்கிய 'சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா' ஜனவரி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான புத்தகக் காட்சி அல்ல; மழை - வெள்ளத்தின் விளைவாக 'நெகிழ்ச்சிகள்' பல உள்ளடக்கிய புதிய முயற்சி இது!

சென்னையில் ஜனவரி என்றாலே புத்தகத் திருவிழாதான் என்று சட்டென நினைவுக்கு வரும் அளவுக்கு கடந்த 37 ஆண்டுகளாக சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்ததன் எதிரொலியாக, இந்தப் புத்தகக் காட்சி இம்முறை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மழை - வெள்ளம் காரணமாக, 10-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் முழுமையாகவும், சில பதிப்பகங்கள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த ஒத்திவைப்புக்கு முக்கியக் காரணம்.

ஆனால் வழக்கமான புத்தகக் காட்சி தள்ளிவைக்கப்பட்டதால், சிறு பதிப்பகங்கள் பலரும் பாதிக்கப்பட்டுவிடுவர் என்ற நோக்கத்தில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது பொங்கல் புத்தகத் திருவிழா'.

ஏன் இந்தப் பொங்கல் புத்தகத் திருவிழா?

"தமிழக பதிப்புத் துறையில் சுமார் 250 முதல் 400 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் 90 சதவீதம் பாடப் புத்தகம் தொடர்பானது. பொதுவான நூல்களின் பதிப்புத் துறை சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கே உள்ளது. இதில், சுமார் 20 பதிப்பகங்கள் மட்டுமே கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யக் கூடியவை. இதர நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் சில லட்சங்கள் முதலீட்டில் நடைபெறக் கூடியவை.

இந்த நூற்றுக்கணக்கான பதிப்பகங்களுக்கு மொத்த வருவாயில் சுமார் 50 சதவீதம் சென்னை புத்தகக் காட்சி விற்பனை மூலம் கிடைக்கின்றன. இதனால் சென்னை புத்தகக் காட்சிக்காக பதிப்பகங்கள் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி புத்தகங்களை அச்சடித்து வைத்துள்ளன. இந்தப் புத்தகங்கள் விற்பனை செய்தால்தான் பதிப்பகங்களால் அடுத்தடுத்த புத்தகங்களை கொண்டு வர இயலும்.

இந்தச் சூழலில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 'தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம்' என்று அமைப்பை உருவாக்கி, இந்த அமைப்பின் சார்பில் 'சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா' நடைபெறுகிறது" என்று இந்தப் புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளனர்.

வாசிப்பை நேசிப்போருக்கு விருந்து

பொங்கல் புத்தகத் திருவிழாவின் பின்னணியில் இந்தக் காரணம் முக்கியமானதாக இருந்தாலும், மக்களின் அறிவுப் பசி போக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற அக்கறையும் முழுமையாக இருக்கிறது. அவசர கோலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்தாத வகையில், வாசகர்களுக்கு வழக்கமான அனுபவம் கிடைக்கத்தக்க அளவில் புத்தகக் காட்சி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன.

குறிப்பாக, ஒவ்வொரு பொங்கல் பண்டிகையையும் புத்தகங்களோடு கொண்டாடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், வாசிப்பை நேசிப்போரும் இது ஓர் அற்புத வாய்ப்பு என்றே சொல்லலாம்.

வழக்கமான கொண்டாட்டங்கள்...

தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் தொடங்கி வைத்தவர், காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி.

புத்தகக் காட்சிகளுக்கே உரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்தத் திருவிழாவிலும் இருப்பது கவனிக்கத்தக்கது. தினமும் மாலை நேர கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றில் தமிழகத்தின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்கள், விமர்சகர்கள், திரைக் கலைஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் பங்கேற்கின்றன.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகத்தில் ஜனவரி 11-ல் 'ஊர் கூடி ஓவியம் வரைதல்' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி, ஓவியர்கள் விஸ்வம், ஜேகே, மணிவண்ணன், யூமா வாஸுகி ஆகியோர் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர்.

புத்தகத் திருவிழாவில் முக்கிய அம்சங்கள்:

 • பொங்கல் புத்தகத் திருவிழா ஜன.24-ம் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
 • விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும்.
 • புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் ரூ.5.
 • பள்ளி, கல்லூரிகளிலிருந்து அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு இலவச அனுமதி.
 • புத்தகத் திருவிழாவில் சுமார் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
 • பதிப்பாளர்களுடன் ஊடகங்களும் புத்தகக் காட்சியில் பங்கேற்றுள்ளன.
 • சுமார் 1 லட்சம் தலைப்புகளில் சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 • புத்தகங்களுக்கு மொத்த விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
 • புத்தகக் காட்சியில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.
 • இந்தப் புத்தகத் திருவிழாவில் சென்னை வெள்ளம், புகழ்பெற்ற நூலகங்கள் ஆகிய தலைப்புகளில் சிறப்பு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 • சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசோக் நகர் அரசு நூலகத்துக்கு இந்தப் புத்தகத் திருவிழாவில் 3,000 புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
 • புத்தகத் திருவிழா வளாகம் உள்ளேயே ஏடிஎம் வசதி உண்டு.
 • திடலில் நிரந்தரக் கழிப்பிட வசதி உள்ளது.
 • மாற்றுத்திறனாளிகள் உள்ளே சென்று புத்தக அரங்குகளைப் பார்வையிட சக்கர நாற்காலி வசதி உண்டு.
 • அரங்குகள், புத்தகங்கள் முதலான விவரம் அறிய 'தகவல் மையம்' ஒன்று நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

பரிசு பெறும் 10 சிறந்த 10 நூல்கள்:

2014 – 2015 ஆண்டுகளில் வெளியான நூல்களில் சிறந்த கவிதை, நாவல் சிறுகதை, வரலாறு, கல்வி, சுற்றுச்சூழல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பெண்ணியம் என 10 தலைப்புகளில் வெளிவந்த சிறந்த நூல்களுக்கு பரிசுகளை வழங்குவதும் இந்தப் புத்தகத் திருவிழாவில் தனிச் சிறப்பு.

எஸ்.ராமகிருஷ்ணன், ச.தமிழ்செல்வன், பா.திருமாவேலன் ஆகியோரைக் கொண்ட குழு பரிசுக்குத் தேர்ந்தெடுத்துள்ள 10 நூல்களின் விவரம்:

1. சிறந்த கவிதை நூல் - 'அந்நிய நிலத்தின் பெண்' - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை பதிப்பகம்
2. சிறந்த நாவல் - 'ஆங்காரம்' - ஏக்நாத் - டிஸ்கவரி புக்ஸ்
3. சிறந்த சிறுகதை நூல் - 'மரணத்தில் மிதக்கும் சொற்கள்' - எஸ்.அர்ஷியா - புலம் வெளியீடு
4. சிறந்த கட்டுரைத் தொகுப்பு - 'நான் வடசென்னைக்காரன்' - பாக்கியம் சங்கர் - பாவைமதி பதிப்பகம்
5. சிறந்த வரலாறு நூல் - 'ஊரங்கு உத்தரவு' - பிஎன்எஸ் பாண்டியன் - வெர்சோ பேஜஸ் வெளியீடு
6. சிறந்த மொழிபெயர்ப்பு நூல் - 'தமிழ்நாட்டு வரலாறு' பேரா.கே.ராஜய்யன் | மொழியாக்கம்: சா.தேவதாஸ் - எதிர் வெளியீடு
7. சிறந்த கல்வி நூல் - 'என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா' - சா.மாடசாமி - புக்ஸ் பார் சில்ட்ரன்
8. சிறந்த சுற்றுசூழல் நூல் - 'யாருக்கானது பூமி' - சதீஸ் முத்து கோபால் - அகநாழிகை வெளியீடு
9. சிறந்த பெண்ணியம் நூல் - 'பேசாத பேச்செல்லாம்' - ப்ரியா தம்பி - விகடன் பிரசுரம் வெளியீடு
10. சிறந்த சிறுவர் இலக்கிய நூல் - 'யானை சவாரி' - பாவண்ணன் - புக்ஸ் பார் சில்ட்ரன்


படங்கள்: https://facebook.com/chennaipongalbookfair

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்