'எளியவர்களின் வளர்ச்சியே எனக்குப் பெரு மகிழ்ச்சி'- வெற்றி மங்கை லதா ராஜன்

1
பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கிய மாஃபா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சமூக நிறுவனம் மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் லதா ராஜனை பலரும் அறியாமல் இருக்க முடியாது. எத்தகைய வெற்றிகளை சந்தித்திருந்தாலும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் என்றுமே புன்னகை மாறா எளிமையான அணுகுமுறை கொண்ட லதா ராஜனை தமிழ் யுவர்ஸ்டோரி பிரத்யேக நேர்காணல் கண்டது.

கடந்து வந்து பாதையை சற்றே பின்னோக்கி பார்த்தால், முக்கிய நிகழ்வாக எதை பார்கிறீர்கள்?

இந்த பயணத்தில் மக்களே பிரதானமாக இருந்திருக்கின்றனர். மிகுந்த கற்றல் அனுபவங்கள் நிறைந்ததாகவே பார்க்கிறேன். என்னுடைய தனிப்பட்ட முன்னேற்றமாகட்டும், தொழில் வளர்ச்சி ஆகட்டும் மக்கள் இந்த வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக விரிவான முயற்சிகளை மேற்கொண்டோம். கீழ்மட்ட அளவில் மாற்றம் கண்ட பொழுது அது தந்த திருப்தி ஈடு இணையில்லாதது.

2000 ஆம் ஆண்டு நாங்கள் சொர்ணம்மாள் பள்ளியை எடுத்து நடத்தினோம். சுமார் நூறு ஏழை பிள்ளைகள் பள்ளிக் கட்டணம் கட்ட இயலாத நிலையில் இருந்த பொழுது அவர்களின் அம்மாக்கள் ஏதேனும் தொழில் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். இதுவே சமூக பாதையில் எங்களை அடியெடுக்க வைத்தது. இதன் மூலம் அப்பெண்களுக்கு சனல் பை தயாரித்தல் போன்ற பல்வேறு கைவேலையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம். இதோடு இல்லாமல் கடன் பெற உதவினோம். இந்த சிறு முயற்சி பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. இந்தப் பெண்களுக்கு பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையும் இது அளித்தது. என்னைப் பொறுத்தவரை இதுவே மகளிர் மேம்பாடு.

இந்த பயணத்தில் தன்னை நெகிழவைத்த பல சம்பவங்களை லதா ராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

62 வயது பெண்மணி இவர்கள் நடத்திய ஒரு போட்டியில் கலந்து கொண்டு பாடியுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் கண்ணீர் பெருக லதாவின் கைகளை பற்றியுள்ளார், ஏனெனில் இவ்வளவு வருஷத்தில் அவர் வெளியே வந்து தன்னுடைய திறமையை முதல் முதலாக வெளிப்படுத்தியது அப்பொழுது தான். இதே போல் மற்றொரு பெண் தன் வாழ்க்கையில் இவர்களின் பூத்தையல் பயிற்சி முடித்த பொழுது வாங்கியதே அவரது முதல் சான்றிதழ்.

இது போல் சம்பவங்கள் அவர் பகிர நமக்கும் சிலிர்த்தது. இதே போல் கீழ் மட்ட குழந்தைகள் படிப்பிற்கு உதவுவது, அவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிப்பது என இந்த பதினாறு வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை லதாவை சாரும். 

நிறுவன தலைமைக் குழுவில் பெண்கள் பங்கு கொள்வதை பற்றி நிறைய பேசும் அளவில் நிதர்சனத்தில் இல்லையே - உங்களின் கருத்து?

உண்மை தான். இதற்கு முக்கிய காரணமாக நான் பார்ப்பது நிறுவனங்களில் நிகழ்வுத் தன்மை (flexibility) மிகவும் குறைவாக இருப்பதே. ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏதோவொரு கட்டத்தில் பணியில் இடைவெளி தேவைப்படுகிறது. இந்தச் சூழலை நிறுவனங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் சூழலை உருவாக்கிக் கொடுத்தல் வேண்டும். இந்த நிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

அதே போல் பெண் தொழில்முனைவர்களும் அந்த அளவிற்கு இல்லை, காரணங்கள் என்ன?

தொழில் முனைவது என்பது மார்க்கெட்டிங், நிதி, அன்றாட நிகழ்வுகள் என பல செயல்பாடுகளை உள்ளடக்கியது. தொழில் முனைதல் என்பது சவால்கள் மிகுந்தது மட்டுமல்லாமல் மிகவும் டிமாண்டிங் வேலையாகும். ஆரம்பித்தல் இலகுவாக இருந்தாலும் அதனை முன்னெடுத்து செல்லும் பொழுது நமக்கு உற்ற மக்கள் அமைவது மிகவும் முக்கியம். ஐடியா செயல்படுத்தும் அதே வேகம் முன்னோக்கி திட்டமிடுதலிலும் இருத்தல் வேண்டும். அதே போல் நம்முடைய சமூக அமைப்பை பார்த்தால் ஆண்கள் பெரும்பாலும் பெண் முதலாளியிடம் கீழ் வேலை பார்ப்பதை நெருடலாகவே நினைக்கின்றனர். ஆண்களை சமாளித்து அவர்களை கையாளுதல் பெரிய சவால். இதுவும் காரணமாக இருக்கலாம்.

தொழில் துறை பெண் உரிமையாளர், சமூக முன்னேற்றத்தில் பங்கு பெறுபவர், குடும்பத் தலைவி, அரசியல்வாதியின் மனைவி - எப்படி சமாளிக்கிறீர்கள்?

அவரது முத்திரை புன்னகையுடன் பதில் வருகிறது! பெரிய சூத்திரம் ஒன்றுமில்லை. திட்டமிடுதலே இவற்றையெல்லாம் இலகுவாக சமாளிக்க உதவுகிறது. இதில் குடும்பத்தினரின் ஆதரவு பெரும் பங்கு உண்டு. எதுவுமே நம்மின் சிந்தனையிலுருந்தே எழும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். அடுத்தவரின் முன்னேற்றத்தில் பங்கு வகிப்பதே மிகப் பெரிய பிணைப்பை ஏற்படுத்துகிறது. அதுவே முன்னெடுத்து செலுத்துகிறது.

உங்களின் உத்வேகம், முன்னோடிகள் மற்றும் பிற ஆர்வங்கள் பற்றி?

மாற்றத்தை உண்டு பண்ணும் ஒவ்வொரு பெண்மணியும் உத்வேகம் அளிப்பவர்கள். தாக்கத்தை உண்டு பண்ணிய மதர் தெரேசா, ஆண்கள் கோலோச்சும் துறையில் சாதனை புரியும் மல்லிகா ஸ்ரீனிவாசன், தேர்மக்ஸ் நிறுவனர் அனு அகா என நிறைய பேரைக் கண்டு வியந்து இருக்கிறேன். வெளி உலகத்தில் அறியாது, சத்தமே இல்லாமல் சாதனை புரியும் நிறைய பெண்மணிகளும் உள்ளனர்.

புத்தகம் வாசித்தல், பலதரப்பட்ட மனிதர்களுடன் நேரம் செலவழித்தல் தவிர நேரம் கிடைக்கும் பொழுது என் பிள்ளைகளுடன் கழிப்பேன். வித விதமாக சமையல் முயற்சிகளை மேற்கொள்ள பிடிக்கும்.

தொழில் முனைவது என்பது ஒரு ஆத்மார்த்த மனநிலை, அது ஒவ்வொரு பெண்ணிற்கும் உள்ளது என கூறும் லதா ராஜன், அவர்களுக்கு தேவைபடுவதெல்லாம் நல்ல வழிகாட்டி மட்டுமே. நாம் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் சிறிய அளவில் மாற்றத்தை உண்டு பண்ண முடியும் என்கிறார்.

மகிழ்ச்சி என்பது உணர்ச்சிப்பூர்வமானது. அடுத்தவரின் ஏற்றம் அளவில்லா மகிழ்ச்சியை நிச்சயம் தரும் என்று மாறாப் புன்னகையுடன் நம்மிடம் விடை பெறுகிறார்.

மகளிர் தினச் சிறப்பு கட்டுரைகள்:

'பெண்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்'- எழுத்தாளர் அனு சுப்ரமணியன்