இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல் என்று உலக நாடுகளை சுற்றி பயணம் மேற்கொள்ளும் 95 வயது கலக்கல் பாட்டி!

2

எண்ணிக்கை வெறும் எண்கள் மட்டுமே என்று குறிப்பிடுவது போல, வயது எதற்கும் தடையில்லை என்பதை காட்டியுள்ளார் 95 வயதான அன்னாகுட்டி சைமன் என்ற பாட்டி. இவர் பயணம் என்ற சொல்லுக்கு அடிமையாகி, உலகின் பல நாடுகளை சுற்றி வந்துள்ளார். இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல், ப்ரான்ஸ், யூஏஇ (4 முறை) என்று பயணித்து, தற்போது ஜெருசெலம் அருகின் உள்ள கல்வேரி செல்ல ஆயத்தமாக இருக்கிறார். 20 பேரன் பேத்திகளின் கொள்ளுப் பாட்டியான அன்னா, கேரள பாரம்பரிய உடையான சட்ட, முண்டு அணிந்து எல்லா நாடுகளுக்கும் பயணிப்பதால் எல்லாரையும் இவர் பக்கம் ஈர்த்துவிடுகிறார். அம்மாச்சி என்று செல்லமாக அழைக்கப்படும் அன்னாகுட்டி, காதில் தோடா என்றா பெரிய கம்மலை போட்டு அழகான பாட்டியாக வலம்வருகிறார். 

பட உதவி: TNM
பட உதவி: TNM

கோட்டயத்தில் பிறந்து, இடுக்கி மாவட்டத்தில் குனின்ஜி என்ற இடத்தில் வளர்ந்த அன்னா, பயணம் மேற்கொள்வதை விரும்புபவர். அவரது குடும்பத்தில், அவரின் பிள்ளைகள், பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் என்று சுமார் 70 பேர்கள் உள்ளனர். உலகை சுற்றி வந்தாலும் அவருக்கு மலையாளம் மட்டுமே பேசத் தெரியும். இவர் எப்படி அன்னிய நாடுகளில் மொழிப் பிரச்சனை இல்லாமல் பயணிக்கிறார் என்பது வியப்பாக உள்ளது என்று தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.  

அன்னாக்குட்டி உடல்நலம் நன்றாக உள்ளது. 95 வயதிலும் அவர் உடல் வலிமையுடன் எந்த ஒரு உபாதையும் இல்லாமல் இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக விதைவையான இவர், பயணம் செய்வதை பொழுது போக்காக கொண்டுள்ளார். பெரும்பாலான சமயத்தில் இவரது வயது காரணாமாக விசா பிரச்சனை எழுந்தாலும், தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை கொண்டு சமாளித்து விசா பெற்று விடுகிறார் இவர். 

இவரது முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனிக்கு 1997-ம் ஆண்டு சென்றார். அப்போது அவருக்கு வயது 75. அடிப்படைக் கல்வி மட்டுமே பயின்றுள்ள அன்னாக்குட்டி, விவசாயம் மற்றும் செடிகள் வளர்த்தலை செய்து வந்தார். தனது பெற்றோரின் பத்தாவது குழந்தையான அன்னாகுட்டி, 14 வயதான போதே திருமணம் செய்து வைக்கப்பட்டார் என்று டெய்லி ஹண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

இவருடன் கூடப் பிறந்த 12 பேர்களில் இளம் சகோதரி மரியக்குட்டி தவிர அனைவரும் இறந்து விட்டனர். இத்தனை சாகசம் செய்துள்ள இந்த பாட்டி மற்றுமொரு ஆச்சரிய விஷயத்தையும் அண்மையில் செய்துள்ளார். ஆபி என்ற மலையாள படத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த சூப்பர் பாட்டி. 

95 வயதை கடந்தும் உற்சாகத்துடன் வாழ்க்கையை எதிர்நோக்கும் இந்த அற்புத பாட்டியிடம் இருந்து இன்றைய இளைஞர்களும் நாமும் கற்கவேண்டியவை நிறைய உள்ளது. 

கட்டுரை: Think Change India