ரூபாய் நோட்டுகள் தடை: சலசலப்பின்றி செயல்படும் இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம்!

0

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடையை தொடர்ந்து இந்தியா முழுதுமுள்ள ஏடிஎம் மற்றும் வங்கிகள் தொடர்ந்து கூட்டத்துடன் காணப்பட்டுவருகிறது. ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் மட்டும் எப்பொழுதும் போல செயல்பட்டுவருவது ஆச்சர்யம். 

இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம் என்று அழைக்கப்படும் அக்கோடோரா, குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ளது. அகமதாபாத்தில் இருந்து 90 கிமி தூரத்தில் உள்ள அந்த கிராமத்தில் ரூபாய் நோட்டு செல்லாமல் போன அறிவிப்பால் எந்த சலசலப்பும், குழப்பமும் ஏற்படவில்லை. அங்குள்ள கடைகள் மற்றும் கிராமவாசிகளும் தங்களின் அன்றாடத்தை இயல்பாக தொடர்ந்து வருகின்றனர். 

இதற்கான விடை, அந்த கிராமத்தில் உள்ளோர் இ-பாங்கிங் அதாவது மின்னணு வங்கியை பயன்படுத்தி தங்களின் பரிவர்த்தனைகளை செய்து வருவதாகும். பால், வீட்டு மளிகை, பில் கட்டுவது, சம்பளத்தை எடுப்பது என்று அனைத்திற்கு அவர்கள் தங்களின் மொபைல் போன் மூலம் கட்டணத்தை செலுத்துகின்றனர். 

“நாங்கள் மின்னணு மூலம் எல்லா பரிவர்த்தனைகளையும் செய்ய பழகிவிட்டோம், அதனால் கையில் பணத்தோடு சுற்றுவதில்லை. இந்த அறிவிப்பு எங்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை,” என்கிறார் பங்கில் படேல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டி ஒன்றில். 

இவர் அக்கோடோரா கிராமத்தில் வசிக்கும் ஒரு மளிகைக் கடைக்காரர். 

1200 பேர் வசிக்கும் அந்த கிரமத்தை  ஐசிஐசிஐ வங்கி தத்தெடுத்துக் கொண்டு, டிஜிட்டல் முறையை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன், ஒவ்வொரு கிராமவாசிக்கும் இந்த டிஜிட்டல் முறை சென்றடைய அவர்கள் உழைத்துள்ளனர். 

டிஜிட்டல் முறைக்கு மாற கிராமவாசிகள் படிப்பறிவையும் பெற்றுவருகின்றனர். அங்குள்ள உயர்நிலை பள்ளி வாத்தியார் ப்ரணவ் உபாத்யேய் இதுபற்றி தி ஹிந்து பத்திரிகைக்கு பேட்டி அளிக்கையில்,

“முன்பு கற்றல் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டலின் உதவியோடு கற்று தருகிறோம்,” என்றார். 

கட்டுரை: Think Change India