தனது கிராமத்தை வறட்சியில் இருந்து மீட்ட கார் ஓட்டுனர்!

0

மற்றவர்களுக்கு உதவுவதே மகிழ்ச்சியின் ரகசியம் என்பது பல ஆண்டுகளாகவே சிந்தனையாளர்களின் நம்பிக்கையாகும்.

சுபாஷ் காதமிற்கு (நாதா) வாழ்க்கையே மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. அவரது அப்பா இறந்தபோது அவருக்கு நான்கு வயது. குடும்பத்தின் பசியைப் போக்க அவரது அம்மா சிறு வேலைகளைச் செய்துவந்தார்.

பத்தாம் வகுப்பு முடித்தபிறகு 18 வயதில் நாதா தனது குடும்பத்தைப் பராமரிக்க பணி தேடி மும்பைக்கு மாற்றலானார். அங்கு கார் ஓட்டுநராக பணிபுரியத் துவங்கினார். சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற விருப்பம் இருந்தபோதிலும் அம்மாவிற்கு உதவ வேண்டியிருந்ததால் அந்த சமயத்தில் அவரால் ஏதும் செய்ய இயலவில்லை.

அப்போது அவரது நண்பர் ஒருவர் 2007-ம் ஆண்டு மும்பையில் ஆர்ட் ஆஃப் லிவிங் ஃபவுண்டேஷன் நடத்திய ஹேப்பினஸ் ப்ரோக்ராமிற்கு அவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் யூத் லீடர்ஷிப் ட்ரெயினிங் ப்ரோக்ராமிற்கு (YLTP) சென்றார். இது அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. இந்தப் பாடதிட்டம் கிராமப்புற இளைஞர்களுக்கு மென்திறன்கள் பயிற்றுவிப்பதையும் அவர்களை மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைவரும் தங்களையும் தங்களது குடும்பங்களையும் பராமரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். அப்படியானால் தங்களையே பராமரித்துக்கொள்ள முடியாதவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களின் நிலை என்ன? போராடுபவர்களுக்கு யாரேனும் உதவ முன்வரவேண்டும்,” என்று அவர் நியூஸ்18.காம்-க்கு தெரிவித்தார்.

நாதா தனது சகோதரியின் திருமணத்திற்குத் தேவையான தொகையை சேமித்தபிறகு மஹாராஷ்டிராவில் உள்ள தனது ஜெய்கான் கிராமத்திற்குத் திரும்பினார். அவர் ஆரம்பத்தில் கிராமத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக பணிபுரியத் துவங்கினார். புனே அரசாங்க அதிகாரிகள் இவரது சமூக பணிகளைக் கண்டு கிராமத்தில் 77 கழிவறைகளைக் கட்ட அவருக்கு உதவினர்.

உள்ளூர் தலைவர்கள் அவரது பணியை ஆதரிக்காததால் நாதா உள்ளூர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார். 32 வயதே ஆன நாதா பஞ்சாயத்து தலைவரானார் என ’பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

நாதா உடனடியாக கிராமத்தின் முக்கிய பிரச்சனையான தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுகாணும் பணியில் ஈடுபடத் துவங்கினார். ’தண்ணீரை நிறுத்துவோம், தண்ணீர் சேமிப்போம்’ என்கிற பிரச்சாரத்தைத் துவங்கி கிராமவாசிகளுக்கு தண்ணீரை சேமிக்கும் திறன்களைக் கற்றுக்கொடுத்தார்.

ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் தொட்டிகளையே சார்ந்திருந்த ஜெய்கான் இன்று தொட்டிகளின்றி காணப்படுகிறது. இங்கு 27 கிணறுகள், 20 ஸ்டோன் சிசிடி அணைகள் உள்ளன. அத்துடன் 4 லட்சம் லிட்டர் வரையிலான தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு 1,75,000 க்யூபிக் மீட்டர் வரை சேமிக்கப்படுகிறது.

”நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காக தங்களது வாழ்க்கையையே தியாகம் செய்தனர். இன்றைய காலகட்டத்தில் யாரும் உயிர் தியாகம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களது திறன்களையும் பணத்தையும் செலவிட்டு உங்களது கிராமத்தையும் நாட்டையும் மேம்படுத்தலாம். இதற்காக உங்களது நாள் ஒன்றில் ஒரு மணி நேரத்தையும், ஒரு மாதத்தில் ஒரு வாரத்தையும், ஒரு ஆண்டில் ஒரு மாதத்தையும் அர்ப்பணித்தால் இது சாத்தியமாவதைக் காணலாம்,” என்றார்.

நாதாவைப் பொருத்தவரை இது வெறும் துவக்கம் மட்டுமே. இவர் ஜெய்கான் பகுதியை முன்னுதாரண கிராமமாக மாற்ற விரும்புகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA