காதல் புற அழகை மட்டும் பார்த்து வருவதல்ல என்பதை நிரூபித்துள்ள காதலர்!

0

பெங்களுருவைச் சேர்ந்த ஜெயபிரகாஷுக்கு சுனிதா மீது இளம்வயதில் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரின் காதல் சுனிதாவால் மறுக்கப்பட்டாலும் ஒரு நாள் தன்னை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார் ஜெயபிரகாஷ். 

ஆனால் இதனிடையே ஒரு பயங்கர சம்பவம் ஏற்பட்டு, மருத்துவமனை கட்டிலில் தலையில் முடியின்றி, உடல் முழுதும் காயங்களோடும், சிதைந்த முகத்தோடும் படுத்துக் கிடந்தார் சுனிதா. அதோடு அவரின் வாழ்க்கையும் முடிந்துவிட்டதாகவே அனைவரும் எண்ணினார்கள்.

இன்று ஒரு சினிமா கதையைப் போல சுனிதா இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஜெயபிரகாஷ், சுனிதா ஜோடியைப் பார்த்து பாராட்டாதவர்களே இருக்கமுடியாத அளவு இவர்கள் பிரபலமாகி உள்ளனர். ஜெயபிரகாஷ் தன் காதல் கதையை பேஸ்புக்கில் பகிர்ந்த போது அது வைரலாக, 1 லட்சத்து 88 ஆயிரம் லைக்குகளுடன் 44 ஆயிரம் முறை ஷேர் ஆகியுள்ளது.

ஜெயபிரகாஷ் பதிவில்,

“2004. நான் 17 வயதாக இருந்தபோது என் கிளாஸ்ரூமை தாண்டி ஒரு பெண் நடந்து சென்றாள். அவளை பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அவளை போன்று வேறு எவரையும் நான் அதுவரை பார்த்ததில்லை. சில நாட்களில் நாங்கள் நண்பர்கள் ஆனோம். ஒவ்வொரு முறை அவர் வேறு நண்பர்களுடன் இருக்கும்போதும் என் மனம் வாடிவிடும். அதனால் அவரிடம் சில நாட்கள் பேசாமலும் இருந்துள்ளேன். தேர்வுக்கு பின்னர், என் நோட்டில் அவர் தன்னிடம் பேசும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அது நடக்கவே இல்லை. நான் கல்லூரியில் சேர்ந்து விட்டேன், ஆனால் அவளைப் போன்று வேறு யாரையும் பார்க்கவேயில்லை. சுனிதா பெங்களுருவுக்கு குடி பெயர்ந்து விட்டார். 

விதியின் விளையாட்டை யாரும் தடுக்கமுடியாது என்பார்கள். அப்படித்தான் நான் சுனிதாவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. சுனிதாவுக்கு ஒரு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அவளின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டது. ஆனால் ஜெயபிரகாஷின் காதல் மட்டும் அப்படியே இருந்தது. 

விபத்தில் அடிப்பட்டு இருந்த அவளை பார்க்க சென்றபோது, சுனிதா தலைமுடி இல்லாமல், முகம் சிதைந்து, மூக்கு, வாய், பற்கள் என்று எதுவும் இல்லாமல், ஒரு 90 வயதானவர் நடப்பதை போல நடந்தார். நான் உடைந்து போனேன். ஆனால் அந்த நொடியிலும் அவளை நான் காதலித்தேன். அன்று இரவு அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

‘என்னால் மட்டுமே உன்னை பார்த்துக் கொள்ளமுடியும். நான் உன்னை விரும்புகிறேன், உன்னை மணக்க விரும்புகிறேன் , என்று.

அதற்கு அவள் எனக்கு கால் செய்தாள், மீண்டும் அவளிடம் என் அன்பை வெளிப்படுத்தினேன். அவள் சிரித்தாள், ஆனால் முடியாது என்று சொல்லவில்லை. முதலில் என் அம்மா அதிர்ச்சியானார், ஆனால் என் அப்பா எனக்கு ஆதரவு தந்தார். பின் இருவரும் ஒப்புக்கொண்டனர். குடும்பம் ஏற்றுக்கொண்டாலும், சமூகத்தில் பலரால் இதை நம்பமுடியவில்லை.

’பலர் என்னை குழந்தைகள் பெற்றுக்கொள்ளாதே என்றனர். அவளை போல் குழந்தைகள் இருந்துவிடும் என்றெல்லாம் சொன்னார்கள். மக்கள் அவளை பரிதாபத்தோடு பார்த்தனர், ஆனால் நான் காதலித்த பெண்ணை மணந்து கொண்டேன். அதுதான் நிஜம். இப்போது என் வாழ்க்கை நன்றாகவே உள்ளது. இரண்டு குழந்தைகளுடன் இன்பமாக நாட்களை கழிக்கிறோம். 

இன்று நான் என் இளம்வயது காதலியை மணந்துள்ளேன். காதல் முகத்தின் அழகு அல்லது வெளிப்புற தோற்றத்தை பார்த்து வருவதல்ல. இது இரு மனங்களுக்கிடையேயான பந்தம். எனக்கு தெரிந்ததெல்லாம நான் அவளை அளவுக்கு அதிகமாக காதலிக்கிறேன், எப்போழும் அது தொடரும்,” என்று முடித்துள்ளார்.