மரபியலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள உதவும் சென்னை ஸ்டார்ட் அப்

0

அப்துர் ரப், சலீம் முகமது ஆகிய நிறுவனர்களால் 2011-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது ’எக்ஸ்கோட்’ (Xcode) என்கிற ஸ்டார்ட் அப். இது சுகாதாரப் பிரிவில் டிஎன்ஏ சார்ந்த மருத்துவ அறிக்கைகள் பகுதியில் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

”பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை கண்டறிடவதிலும் சிகிச்சையிலும் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மரபியலுக்கு ஏற்றவாறான தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய வாழ்க்கைமுறையை (உணவு, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள்) பின்பற்ற பெரிதும் உதவுகிறது. 

இந்தப் பிரிவில்தான் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்பான எக்ஸ்கோட் (Xcode) செயல்படுகிறது. இந்த ஸ்டார்ட் அப் மருத்துவர், ஆரோக்கிய தொழில்முறை வல்லுநர்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு மரபியல் தகவல்களை வழங்கி உதவுகிறது.

2003-ம் ஆண்டு ‘மனித ஜீனோம் திட்டம்’ முடிவடைந்து மரபியலில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஏஞ்ஜெலினா ஜோலி போன்ற பிரபலங்கள் தங்களது மருத்துவ பராமரிப்பில் மரபியலை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தப் பிரிவு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. மனித ஜீனோம் திட்டம் வெளியான சமயம் டாக்டர் சலீம் முகமது (எக்ஸ்கோட் நிறுவனர் மற்றும் சிஇஓ) உயிரித்தகவலியல் (bioinformatics) பிரிவிலும் டாக்டர் அப்துர் ரப் (எக்ஸ்கோட் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ) பயோமெடிக்கல் உயிரியல் மருத்துவ அறிவியல் (biomedical science) பிரிவிலும் பிஎச்டி படித்துக்கொண்டிருந்தனர்.

இருவரும் கல்லூரி நாட்கள் முதலே நண்பர்களாக இருந்தனர். இருவருக்கும் மரபியல் மீதிருந்த ஆர்வம் காரணமாக மரபியல் சார்ந்த தகவல்களை தனிநபருக்கு வழங்கி அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நோக்கத்துடன் எக்ஸ்கோட் உருவாக்கினர்.

டிஎன்ஏ தகவல்கள்

ஒவ்வொரு தனிபருக்கும் சரிபார்க்கப்பட்ட டிஎன்ஏ தகவல் கிடைக்கப்படவேண்டும் என்கிற அடிப்படையில் 2011-ம் ஆண்டு நிறுவப்பட்டது எக்ஸ்கோட்.

எக்ஸ்கோட் நிறுவனத்திற்கு முன்பு அப்துர் சிங்கப்பூர் செல் டயக்னாஸ்டிக்ஸ் சிஇஓ-வாகவும், சிங்கப்பூர் க்ரெடோ பயோமெடிக்கல் ரிசர்ச் பிரிவின் துணை தலைவராகவும், சிங்கப்பூர் ஏஸ்டார் இன் வைட்ரோ டயாக்னாஸ்டிக்ஸ் தலைவராகவும் இருந்தார்.

சலீம் பிரபல உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ஜீன் எக்ஸ்பிரஷன் டெக்னாலஜி, மோன்சாண்டோவில் உயிரித் தகவலியல் பிரிவின் ப்ளாட்ஃபார்ம் லீட் ஆக பணியாற்றினார். இங்கு வெப் டெவலப்பராகவும் இருந்தார்.

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கப்பட்ட எக்ஸ்கோட் ஆர் நாராயணன், ஹர்ஷல் ஷா, கல்கத்தா ஏஞ்சல்ஸ், அபூர்வா உதேஷி, ரவுண்ட்கிளாஸ் போன்ற முக்கிய முதலீட்டாளர்களின் ஆதரவுடனும் ஊக்கத்துடனும் வளர்ச்சியடைந்தது.

தனிப்பட்ட தகவல்

மரபியல், தகவலியல், கம்ப்யூட்டிங் ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் குறிப்பிட்ட செயற்களம் சார்ந்த அறிவு போன்றவற்றைக் கொண்டு எக்ஸ்கோட் விரிவான தனிநபர் தீர்வுகளை மருத்துவ மற்றும் மருத்துவமல்லாத பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஜீனோடைப்பிங் என்கிற நுட்பம் வாயிலாக உமிழ்நீர் ஆய்வின் உதவியுடனான மரபணு மாற்றங்களைக் கொண்டு மரபணு சோதனைகள் செய்யப்படுகிறது. 

எக்ஸ்கோட் தனிநபரின் மரபுசார் வடிவம் மற்றும் அதன் தொடர்பு குறித்த தகவல்களை மரபியல் அறிக்கையில் வழங்குகிறது. எக்ஸ்கோட் தொடர்பு சார்ந்த தகவல்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அறிவியல் வெளியீடுகளிலிருந்து சேகரித்து தொகுக்கிறது.

எக்ஸ்கோட் தீர்வு நோக்கி செயல்படுவதால் தனிநபருக்கு தொடர்புடைய மரபணு தகவல்களை வழங்கி அவர்களது முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அதன் ப்ராடக்டுகளை வடிவமைக்கிறது. 

பயனர்கள் அவர்களது வாழ்வின் பல்வேறு அம்சங்களை அவர்களது மரபணுக்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள உதவும் விதத்தில் பல வகையான ப்ராடக்டுகளை வழங்குகிறது. 

சுயமாக மரபணு சோதனைகளை வழங்குவுதுடன் உலகின் முக்கிய நிறுவனங்களிடமிருந்து செயலாக்கப்படாத தரவுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு மருத்துவ அறிக்கைகளை வழங்குகிறது.

தனிப்பட்ட உணவுப்பழக்கம், உடலுறுதி, ஒவ்வாமை, சரும பராமரிப்பு, சிகிச்சையின் பலனை அதிகரிக்கும் மருத்துவ பராமரிப்பு (precision medicine), குறிப்பிட்ட நோய் வருவதற்கான வாய்ப்பு (heath predisposition) ஆகியவை தற்போதைய ப்ராடக்டுகளாகும். மலட்டுத்தன்மை, உறுப்புமாற்றம், புற்றுநோய், கருவிகள் எதையும் செலுத்தாமல் குழந்தை பிறப்பதற்கு முன் மேற்கொள்ளப்படும் சோதனைகள் (ஹார்மோன் சார்ந்த சிகிச்சை, ஆண் மலட்டுத்தன்மை, பரம்பரை புற்றுநோய், பச்சிளம் குழந்தைக்கு செய்யப்படும் ஸ்கிரீனிங், கருச்சிதைவு) மற்றும் மூதாதையர் தொடர்பான தகவல்கள் போன்ற பகுதிகளில் விரிவடையவும் திட்டமிட்டுவருகிறது.

”கடந்த 18 மாதங்களில் எக்ஸ்கோட் அபார வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர் தொகுப்பு நூறு சதவீதம் உயர்ந்துள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கையும் பல்லாயிரமாக அதிகரித்துள்ளது. ப்ராடக்ட் பிரிவுகளும் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் புதிய பார்ட்னர்களுடன் சந்தையின் அளவும் விரிவடைந்துள்ளது,” என்றார் டாக்டர் சலீம்.

எதிர்கால திட்டம்

மதிப்பு கூட்டப்பட்ட ப்ராடக்ட் பிரிவுகளை அதிகப்படுத்தி உலகளவில் தலைச்சிறந்த மரபியல் நிறுவனமாக விளங்கவேண்டும் என்பதே எக்ஸ்கோட் நிறுவனத்தின் நோக்கமாகும்.

இந்தியாவில் மரபியலுக்கான வாய்ப்பு குறித்து டாக்டர் சலீம் குறிப்பிடுகையில்,

 “மரபியலுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. தனிநபர்கள் மற்றும் மருத்துவர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் அதிகமானோர் இந்தச் சேவைகளை பெற்றுக்கொள்கின்றனர். மருத்துவ ரீதியிலும் தனிநபர் மரபியல் பிரிவுகளிலும் சர்வதேச சந்தையைப் போன்று இந்தியச் சந்தை முதிர்ச்சியடையவில்லை."

”மருந்துகள் உருவாக்குவதில் பில்லியன் கணக்கில் செலவிடப்படுகிறது. இதன் பலன் வெறும் 40 சதவீதம் மட்டுமே. இந்த முதலீட்டை மரபியல் ஆய்விற்கு செலவிட்டால் அதிக பலன் கிடைக்கும். உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இந்தியா சுமார் 20 சதவீதம் பங்களிக்கிறது. ஆனால் உலகம் முழுவதுமுள்ள மரபியல் தரவுத்தளத்தில் இந்தியர்களின் டிஎன்ஏ வரிசைமுறை 0.2 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது. விழிப்புணர்வு இல்லாததும் எளிதாக அணுகமுடியாததுமே இதற்குக் காரணமாகும். 

நோய் தடுப்புமுறைகளுக்கான தேவை இருப்பதால் மரபணு பரிசோதனைக்கான சந்தை வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. மருந்து சார்ந்த மரபியல் வேறுபாடுகளின் ஆய்வு (pharmacogenetics) மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த மரபியல் வேறுபாடுகளின் ஆய்வு (nutrigenetics) ஆகியவை தொடர்பான சந்தை வளர்ந்து வருகிறது,” என்றார்.

உலகளவில் மரபியல் சந்தைக்கான மதிப்பு 2017-ம் ஆண்டில் 14.71 பில்லியன் டாலராக இருந்தது. இந்த மதிப்பு 10.2 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 2022-ம் ஆண்டில் 23.88 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்ச் அண்ட் மார்கெட்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. உலகளவிலான மரபியல் சந்தையில் நோய் கண்டறியும் பகுதி அதிகம் பங்களிக்கும்.

மரபியல் குறித்த விழிப்புணர்வும் மரபணு அடிப்படையில் குறிப்பிட்ட நோய் வருவதற்கான வாய்ப்புகள் (genetic predisposition) குறித்த ஆய்வுகளும் அதிகரித்திருப்பதால் நோய் தடுப்பு மற்றும் கண்டறியும் முறையில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். எக்ஸ்கோட் இந்தப் பகுதியில் முன்னணியில் திகழும் நம்பிக்கையுடன் செயல்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : வல்லப் ராவ்