'பஞ்ச்' தந்திரம்: 'பில்லா 2' அஜித் தன்னம்பிக்கை வசனமும் நிச்சய வெற்றியும்!  

0

"என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்,  ஒவ்வொரு நிமிஷமும்,                                   ஏன்... ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கியது!"

'பில்லா 2' படத்தின் தெறிப்பு 'பஞ்ச்' டயலாக் இது என்று உங்களில் பலருக்கும் சொல்லத் தேவையில்லை. இந்த வசனத்தை எழுதியது யார்? எந்தக் கதாபாத்திரத்துக்காக எழுதப்பட்டது? கதைப்படி எந்தக் காட்சிக்காக பயன்படுத்தப்பட்டது? இந்தப் பின்னணி பற்றிய ஆராய்ச்சிக்கு எல்லாம் போக வேண்டாம். அப்புறம்?

ஒரு வெற்றிகரமான தொழில்முனைவரின் வாழ்க்கையில் தன்னையறியாமல் தனக்குத் தானே மட்டுமின்றி, மட்டும் அல்ல; தன்னை ஏளனமாகப் பார்த்தவர்களைப் பார்த்தும் சொல்லாமல் சொன்ன வசனம் இது.

தொழில்முனைவர் ஆகி ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்றும் உறுதிபூண்டவர்களும் சொல்லத் துடிக்கக் கூடிய மந்திரச்சொல்லும் இதுதான்.

எப்படி?

தற்போது சந்தையில் பின்னியெடுத்து முன்னணியில் இருக்கும் மைக்ரோசாப்ட் தொடங்கி ஃபேஸ்புக் வரையிலான பல நிறுவனங்களும் பலரால் தொடங்கப்பட்டு இப்போது இந்த நிலைக்கு வந்தவை அல்ல. தனி மனிதர்களில் அதி தீவிர முயற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பின் பலனால் உயரத்தை எட்டியவை. தன்னைத் தானே செதுக்கிக்கொண்டதன் விளைவுதான் பலரையும் வெற்றிகரமான தொழிலதிபர்களாக வலம் வரச் செய்திருக்கிறது.

அதற்காக தொழில்முனைவு விருப்பம் உள்ள அனைவருமே மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களைத்தான் பார்க்க வேண்டியது இல்லை. நம்மைச் சுற்றியும் நமக்கு மிக அருகிலும்கூட முன்னுதாரண மைந்தர்கள் இருக்கலாம்.

திண்டுக்கல்லில் வளர்ந்த சந்தோஷ், 'தி இந்து' செய்தித்தாள் வாங்குவதற்காக தினமும் நான்கு கிலோமீட்டர் தூரம் நடப்பார். ஆங்கில நாளிதழ் வாசிப்பது வெட்டி வேலை என்று சொல்லும் பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், தனது பாக்கெட் மணியில் பேப்பர் வாங்குவார். தன்னைத் தானே செதுக்க நினைத்தார். அதற்காக கடுமையாக உழைத்தார்.

செய்தித்தாள்கள் மூலம் அடிப்படை ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொண்ட இவர், இப்போது தனது 27 வயதில் மேராஇங்கிலீஷ் வலைதளம் மூலம் ஒரு தொழில்முறை பயிற்சியாளராகவும், தொழில்முனைவராகவும் உருவெடுத்துள்ளார். தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. அங்கு நல்ல சம்பளத்தில் பணிபுரிந்த அவர், தனிக்காட்டு ராஜாவாக பயணிக்க விரும்பி, அந்த வேலையை விட்டுவிட்டு இன்று தொழில்முனைவராக கம்பீரமாக நிற்கிறார்.

அவர் கதையை கூறும் திண்டுக்கல் தொடங்கி கூகுள், சென்னை வரை இட்டுச் சென்ற தமிழரின் 'ஆங்கில'ப் பயணம் கூட 'பில்லா 2' அஜித் வசனத்தின் ஆழத்துக்கும், அது தரும் உந்துதலுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

முறையான படிப்பு, கடின உழைப்பு, கைவிடாத அதிர்ஷ்டம், வலுவான அனுபவம், பக்காவான புத்திசாலித்தனம் முதலான குணாதிசயங்கள் ஒன்றிணைந்தால் மட்டும் ஒருவரால் பெரிய தொழிலதிபர் ஆகிவிட முடியுமா?

முறையாக படித்து அனுபவம் பெற்றால்தான் பெரிய தொழிலதிபர் ஆக முடியும் என்பது கச்சிதமான உண்மை அல்ல என்பது திருபாய் அம்பானி முதல் நம்ம ஊர் 'அருண் ஐஸ்கிரீம் என்.ஜி.சந்திரமோகன் வரை எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

படிப்பு என்பது உறுதுணைதான். இதுபோன்ற உறுதுணைகளைத் தாண்டிய தீப்பொறி தேவை என்பதை உணர முடிகிறது.

இப்போது மறுபடியும் அந்த பஞ்ச் வசனத்தை உச்சரித்துப் பார்ப்போம்....

"என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும்,                                   ஏன்... ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கியது!"

இந்த அணுகுமுறையைப் பின்பற்று ஒருவர் தானாக அதன் சாதக - பாதக விளைவுகளையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதும் இந்த வசனம் சொல்லும் மறைமுக பொருள்.

ஆம், ஒரு தொழில்முனைவராக உருவெடுப்பவர், "எப்போது எங்கு எது நடந்தாலும் அதற்கு நான் மட்டுமேதான் பொறுப்பு" என்பதை உணர்ந்து செயல்படும் தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தனித்துச் செய்தாலும், தன் குழுக்களுடன் இயங்கினாலும் முடிவெடுப்பதில் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.

அதாவது, தன் தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்; ரிஸ்க் என்று பட்டாலும் துணிந்து செய்யத் தயங்கக் கூடாது; தோல்வி வந்துவிட்டது என்று துவளாமல், அதில் இருந்துப் படிப்பினைகளைக் கற்று, பின்னர் பின்னியெடுக்க வேண்டும்; சவால்களை எதிர்கொண்டு பாதகங்களைச் சாதகமாக்க வேண்டும்.

பணம் இல்லை என்றால் என்ன செய்வது? என்ற மொக்கையான கேள்விகள் சிலருக்கு எழலாம். ஆம், வறுமை சிலரை வீழ்த்தி விடுகிறது. ஆனால், தன்னம்பிக்கையும் விடாமுயற்சி கொண்டோர் வறுமையை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டுகின்றனர். மிக இளம் வயதிலேயே இதைத் தன் வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கார்ப்பரேட்360 நிறுவனத்தை உருவாக்கி நடத்திவரும் வருண் சந்திரன்.

தனது உணவுத் தேவைக்கே கஷ்டப்பட்டவர், உலக அரங்கில் கால்பதிக்கும் நிறுவனத்தை உருவாக்கும் அளவுக்கு உயர்வது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமல்ல. ஆனால், அது சாத்தியம் என்பதை வருண் மெய்ப்பித்துக் காட்டிவிட்டார். படிப்பை பாதியில் விட்ட விவசாயி மகன், ஒரு டெக் மில்லினியரான வெற்றி கதை கூட, தன்னைத் தானே செதுக்கிக்கொள்ளும் தொழில்முனைவர்களுக்கு மிகச் சிறந்த உதாரணம்.

இவ்வளவு ஏன்?

"என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும்,                                    ஏன்... ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கியது!"

இப்படி பில்லா 2 படத்தில் சொன்னாரே... அந்த அஜித் எனும் நடிகனில் தொழில் வாழ்க்கை வளர்ச்சிக்கும் இந்தப் பஞ்ச் கச்சிதமாகப் பொருந்தும் என்பதை 'தல' ரசிகர்களிடம் கேட்டறியலாம்!

'பஞ்ச்' தந்திரம் படரும்...