பனி, அக்ரூட், குங்குமப்பூவுக்கு அப்பால் ஜம்முவின் அடையாளம் ‘ப்யூர் மார்ட்’

0

பத்தாண்டுகளுக்கு முன், ஜம்முவைத் தாண்டி வெளியே போகாத ஒரு குழந்தையின் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த கேள்விதான் பியூர் மார்ட் உருவானதற்குக் காரணம். அந்தக் குழந்தையின் பெயர் ஷகில் வர்மா. தற்போது அவர் ஜம்மு காஷ்ரில் இருந்து வெளிவரும் இயற்கைப் பொருட்களுக்கான சர்வதேச ஆன்லைன் சந்தைக்கு தலைவர். “ஜம்முவில் நான் வளர்ந்த பொழுது, அங்கு எளிதாகக் காணக் கிடைக்கும் குங்குமப் பூக்கள், மற்றும் உலர்ந்த பழங்கள் மீது வெளியூர் ஆட்கள் ஏன் அத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி ஆச்சரியப்படுவேன்” என்று தனது கடந்த காலத்தை நினைவு கூர்கிறார் ஷகில்.

முதன் முதலாக பெங்களூர் கல்லூரியில் பார்மசி படிப்பதற்காகத்தான் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். “என் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான நேரம் அதுதான்” என்கிறார் ஷகில். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களுடன் அங்கு அவருக்கு நட்பு ஏற்பட்டது. “அவர்கள் அற்புதமான நண்பர்கள். ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக வெளியே உள்ளவர்கள் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன். நானே என்னை பயங்கரவாதம், குங்குமப்பூக்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பனியோடுதான் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது” என்று எரிச்சலைடைகிறார் ஷகில். பட்டம் பெற்றதற்குப் பிறகு பெங்களூர், பூனா, சென்னை, ஹைதராபாத், மும்பை என 14 ஆண்டுகள் சுற்றித் திரிந்தார். அந்த நேரத்தில் தமது மாநிலம் பற்றிய மக்களின் பார்வை ஒரு சிறு அளவில் மாறியிருந்ததைக் கண்டார்.

தனது சொந்த ஊர் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் ஊர் என்ற பெயரை மாற்றுவது குறித்து அவருக்குள் பலவாறாக எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவரது நெருங்கிய நண்பர் ஒருவருடைய தந்தை இறந்த சம்பவம் ஷகில் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. “அவரது மரணத்திற்கு தவறான உணவுப் பழக்க வழக்கங்களும், பணிச் சுமையும்தான் காரணம்” என்று கூறும் ஷகில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிடைக்கும் பல பொருட்கள் குறிப்பாக அக்ரூட் பருப்புகளும் குங்குமப்பூவும் இதயம் தொடர்பான நோய்கள், மூச்சுப் பிரச்சனை மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகின்றன. இந்தியாவில் நேரும் இறப்புகளில் பெரும்பாலான இறப்புகளுக்கு இந்த நோய்கள்தான் காரணம்” என்கிறார். ஜம்மு காஷ்மீரில் கிடைக்கும் அக்ரூட் பருப்பையும் குங்குமப் பூவையும் நாடு முழுவதும் பரவச் செய்து இந்தியா முழுவதிலும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது ஷகிலின் விருப்பம். அதுமட்டுமல்ல பயங்கரவாத மாநிலமாக அறியப்படும் ஜம்மு காஷ்மீர் அதைத் தாண்டி உடல் நலம் காக்கும் பொருட்களையும் தரக் கூடியது என்றும் அவர் காட்ட விரும்பினார்.

இந்த எண்ணத்தை செயலாக்க தொடங்கும் போது அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது அவரது மனைவிதான். ஆனால் பெற்றோரிடம் இது பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். “எனது குடும்பம் ஒரு ஆச்சாரமான இந்தியக் குடும்பம். இது போன்ற ஒரு தொழிலைச் செய்வதற்கு நிச்சயம் எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள்” என்கிறார் ஷகில். 

“எனது சக நிறுவனர் ரஜனி வர்மாவுடன் இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்றேன். சுமார் ஒரு வருடம் இயற்கைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். வட மாநிலத்தில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களின் மகத்துவம் குறித்து புரிய வைக்க முயற்சித்தோம். ஆச்சரியம் என்னவென்றால், பெரும்பாலானவர்கள் குங்குமப் பூவின் மொட்டு எப்படி இருக்கும், அக்ரூட் பழம் எப்படி இருக்கும் என்பது கூடத் தெரியாமல் இருந்தனர்.” என்று தனது பயணத்தை விவரிக்கிறார் ஷகில். தனது பார்வையாளர்களுக்கு அவற்றைக் காண்பிப்பதற்காகவே கையோடு எடுத்துச் செல்ல ஆரம்பித்தார் ஷகில்.

எங்கள் பொருட்களை விநியோகம் செய்ய, பி2பி (Business-to-business) என்ற வர்த்தகர்களுக்கு கொண்டு சேர்க்கும் முறையைப் பின்பற்றுவது உதவாது என்று நினைத்தோம். நுகர்வோருக்கு நாங்களே நேரடியாகப் பொருட்களைக் கொண்டு செல்வது என்று முடிவு செய்தோம். அப்போதுதான் (அது 2011ம் ஆண்டு) இணைய வணிகம் வளர்ந்து கொண்டிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தோம்.

குங்குமப்பூ மற்றும் அக்ரூட் பருப்புகளுடன் "ப்யூர் மார்ட்" (Pure Mart) தொடங்கியது. ஏனெனில் அவைதான் விலை உயர்ந்த பொருட்கள். “எங்கள் விநியோக வரிசையில் இப்போது நிறையப் பொருட்கள் சேர்ந்து விட்டன. கன்னியாகுமரியில் இருந்து நாகாலாந்து வரை, அந்தமானில் இருந்து கொல்கத்தா வரை இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அத்தனை ஊர்களுக்கும் அவற்றைக் கொண்டு செல்கிறோம். அது மட்டுமல்ல கனடா, பிரிட்டன், துபாய் உட்பட வெளி நாடுகளில் இருந்தும் சுமார் 2 ஆயிரம் ஆர்டர்களைப் பெற்றிருக்கிறோம்.” என்கிறார் ஷகில்.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் விவசாயிகள்தான் அந்த இயற்கைப் பொருட்களை உற்பத்தி செய்து ப்யூர் மார்ட்டுக்கு வழங்குகின்றனர். “இயற்கை வாழ்வு, பசுமை இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் நீவ் ஹெர்பல்ஸ்(தேசிய விருது பெற்ற நிறுவனம்) உடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறோம். உங்கள் சமையலறையை இயற்கைப் பொருட்களால் நிறைக்கும் முன்னணி பலசரக்கு விற்பனையாளர்களான 24மந்த்ரா நிறுவனத்துடன் சமீபத்தில் பங்குதாரர்களாக இணைந்திருக்கிறோம்” என்கிறார் ஷகில்.

“பிராண்ட்டட் என்று பெயரெடுப்பதை விட சிறந்த தரமுடைய பொருட்களைத் தருவதுதான் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று விட்டால் போதும், ஒரு நல்ல பொருள் எப்போதுமே நல்ல பிராண்ட் ஆகவும் இருக்கும்” என்று கூறும் ஷகில், 99 சதவீத வாடிக்கையாளர்களிடம் தங்களது பொருட்கள் நல்ல வரவேற்பைப் பெறுள்ளதாக பெருமைப்படுகிறார். அந்த ஒரு சதவித அதிருப்தி கூட, பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களால் வருவதுதான் என்கிறார் ஷகில்.

விநியோகமும் பண வசூலும் தொடர்ந்து மிகப்பெரிய சவால்களாகவே இருந்து வருகின்றன. பண வசூல் பிரச்சனைக்காவது தீர்வு கண்டு விடலாம். ஆனால் விநியோக நிறுவனங்கள் செய்யும் குளறுபடிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பொருள் பற்றிய நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கிறது. ஒரே நாளில் விநியோகம் என்ற திட்டத்தை பெங்களூருவில் நாங்களே தொடங்கியிருக்கிறோம். எங்களுக்கென்று தனிக் கடையும் இங்கு இருக்கிறது. டெலிவரி உட்பட உபரி செலவு இல்லாமல் பொருட்களை இங்கு வாங்கிக் கொள்ளலாம். இன்னும் இரண்டு நகரங்களில் இதே போன்ற கடைகளைத் துவங்க இருக்கிறோம்.

ப்யூர்மார்ட்டில் புதிய திட்டங்களும் உள்ளன. இயற்கைக் பொருட்கள் கண்காட்சி உட்பட பல்வேறு சந்தை வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, மேலும் பரவலாக வாடிக்கையாளர்களைச் சென்று சேர்வது குறித்துச் சிந்திக்கிறோம். விநியோகம் மற்றும் விற்பனைக்கு எங்கள் நிறுவனத்தோடு ஒத்துப் போகும் பெருநகர விநியோக நிறுவனங்களுடன் கைகோர்ப்பது குறித்தும் திட்டமிடுகிறோம். சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகளை விரிவாக்குவது, அதன் மூலம் உட்புறத் தொழில் நுட்ப குழுவை (in-house technical team) உருவாக்குவது போன்றவவை இந்த ஆண்டின் முன்னுரிமை திட்டங்கள்.

ப்யூர்மார்ட், ஜம்மு காஷ்மீரில் உள்ள சமூகத் தொழில் நிறுவனங்களுடன் கைகோர்க்கத் திட்டமிடுகிறது. அவர்களுடைய இணையதளங்களை கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கான சந்தையாகப் பயன்படுத்த உத்தேசித்துள்ளது. “ப்யூர் மார்ட்டின் தயாரிப்புகள் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.” என்கிறார் ஷகில். 2015ல் நிறுவனத்தின் நிதி நிலையை ஒரு கோடி வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எத்தனைதான் இடையூறுகள் வந்தாலும் ஷகில் ( நிறுவனர் மட்டுமல்ல நிறுவனத்தின் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் அதிகாரியும் தான்தான் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறார்) இணை நிறுவனர் ரஜனி மற்றும் பணியாளர்கள் 5 பேரும் தங்களது தொழிலில் உற்சாகமாகவே செயல்படுகின்றனர். “இணையவழி விற்பனையில் கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு பின் மீண்டும் சொந்த ஊர் திரும்பி இருக்கிறேன். இப்போது எனது குடும்பத்தினர் கண்களில் என்னைப் பற்றிய நம்பிக்கையைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று பெருமிதப்படுகிறார் ஷகில்.

புதிதாக ஒரு பேக்கேஜிங் அறிமுகப்படுத்துவதாகட்டும், புதிய தயாரிப்பை கொண்டு வருவதாகட்டும, ஒரு புது பிரின்ட்டர் அல்லது தராசு வாங்கும் போது கூட ப்யூர் மார்ட்டின் ஒவ்வொரு கணத்தையும் உற்சாகமாக அனுபவிக்கிறோம். தனது தேவைகளைத் தானே தீர்த்துக் கொள்ளும் ப்யூர் மார்ட்டின் ஒவ்வொரு கணமும் எங்களின் நேசிப்புக்குரியது. ஒரு தொழில் செய்வதில் அதற்கே உரித்தான ருசி, சந்தோஷம், வேடிக்கை எல்லாம் இருக்கிறது.

ப்யூர் மார்ட் பொருட்களை வாங்க: PureMart