4-ம் வகுப்புத் தேர்வில் 98% மதிப்பெண் எடுத்த 96 வயது கேரள பாட்டி!

0

கார்த்தியானியம்மா கிருஷ்ணப்பிள்ளா என்ற 96 வயதாகும் பாட்டி, கேரள கல்வியறிவு தேர்வில் நான்காம் வகுப்பில் 98 சதவீதம் எடுத்து முதல் இடத்தை பிடித்து தேர்வாகியுள்ளார். கேரள அரசு நடத்தும் ‘அக்‌ஷரலக்‌ஷம்’ என்ற திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற கல்வியறிவு தேர்வில் 100க்கு 98 மார்க்குகள் எடுத்துள்ளார் இந்த சூப்பர் பாட்டி.

”நான் என் பேரக்குழந்தைகள் அபர்னா மற்றும் அஞ்சனாவின் உதவியோடு, பாடங்களை நன்கு புரிந்து கொண்டு படித்து தேர்வு எழுதினேன். இப்போது என்னால் படிக்க, எழுத மற்றும் கணக்கு போடவும் தெரியும்,” 

என்று டிஎன்ஏ பேட்டியில் கூறியுள்ளார்  கார்த்தியானியம்மா.

பட உதவி: DNA
பட உதவி: DNA

கேரள அரசு தனது மாநில மக்கள் நூறு சதவீதம் பேரும் கல்வியறிவு கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கோடு, ‘அக்‌ஷரலக்‌ஷம்’ என்ற திட்டத்தை அறிவித்து அதில் படிப்பறிவில்லாத முதியோர்களும் சேர்ந்து கல்வியறிவை பெற ஊக்குவித்து வருகிறது. அதன் கீழ் தான் கேரளாவில் உள்ள செப்பாடு என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது கார்த்தியானியம்மா சேர்ந்தார்.

அத்திட்டத்தில் சேர்ந்து தேர்வாகியுள்ள வயதில் மூத்தவர் என்ற பெருமையையும் அவர் கொண்டுள்ளார். மேலும் 10-வது வரை படித்து தேர்வாக வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளார் இந்த சீனியர் சிட்டிசன். 

”ஆங்கிலம் கற்பதே என் அடுத்த இலக்கு. என் பேரக்குழந்தைகள் ஆங்கிலவழி பள்ளியில் படிக்கின்றனர். எனக்கும் இங்கிலீஷ் கத்துக்கவேணும்,” என்கிறார் உத்வேகத்துடன் கார்த்தியானியம்மா. 

தனது 51 வயது மகள் அம்மிணியம்மாவின் உந்துதலால் தான் இந்த திட்டத்தில் சேர்ந்ததாக கூறும் கார்த்தியானியம்மா, தன் மகள் 10ம் வகுப்பு பாதியில் பள்ளியில் இருந்து நின்றுவிட்டதை அடுத்து 2016ல் கேரள அரசின் கல்வித்திட்டம் மூலம் 10ம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் செய்ததை நினைவுக்கூர்ந்தார். 

”எங்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்லவில்லை. என் மகள் 10ம் வகுப்பை அண்மையில் முடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அதையே நானும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு படிக்க உற்சாகம் தந்தது,” என்கிறார் கார்த்தியானியம்மா. 

பாட்டிக்கு வகுப்பு எடுத்த சதி என்ற ஆசிரியர், அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். கார்த்தியானியம்மாவின் ஞாபகச்சக்தி மற்றும் கற்பதில் உள்ள ஆர்வமே அவரை இந்த அளவு கொண்டு சென்றுள்ளது என்று கூறியுள்ளார்.

96 வயதில் கல்வியறிவு திட்டம் மூலம் தேர்வாகியுள்ள கார்த்தியம்மாவை, கேரள அமைச்சர் கேஜே அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

கட்டுரை: Think Change India | கட்டுரையாளர்: இந்துஜா ரகுனாதன்