தண்ணீரில் மூழ்குபவரை பாதுகாக்கும் ட்ரோன் உருவாக்கிய நிறுவனம்! 

0

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சைஃப் ஆட்டோமேஷன் (Saif Automation) நிறுவனத்தை உயிர் காக்கும் ஸ்டார்ட் அப் என்றே அழைக்கலாம். தற்போது ஆந்திரப் பிரதேசம் புதுமை சங்கத்தால் இன்குபேட் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் ஒரு ட்ரோனின் முன்வடிவத்தை உருவாக்கியுள்ளது. இந்த ட்ரோன் கடல் அல்லது நீர் நிலைகளில் ஆபத்தான சூழல்களில் பயன்படும். குறைந்தபட்சம் ட்ரோன் பயன்படுத்தப்படும் பகுதிகளில் ஆட்கள் நீரில் மூழ்கும் சம்பவங்களைக் குறைக்கவேண்டும் என்பதே இந்நிறுவனம் நோக்கம்.

சைஃப் ஆட்டோமேஷன் துவக்கம் 

2017-ம் ஆண்டு 40 வயது அலியாஸ்கர் கல்கட்டாவாலா ஜெர்மனி சீஜென் பல்கலைக்கழகத்தில் மெக்காட்ரானிக்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு தனது அப்பாவுடனும் சகோதரருடனும் இணைந்து கொல்கத்தாவில் கடல்சார் தொழிலுக்கு சேவையளிக்கும் வணிகத்தில் ஈடுபடத் துவங்கினார்.

”2008-ம் ஆண்டு EAC Marine Pvt Ltd என்கிற பெயரில் விசாகப்பட்டினத்தில் ஒரு கிளையைத் திறந்தோம். இந்திய கடலோர பாதுகாப்பு, இந்திய கடற்படை போன்ற பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் பணிபுரியத் துவங்கினோம். வெவ்வேறு சிவிலியன் கப்பல்களை பழுதுபார்த்தல் மற்றும் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபடத் துவங்கினோம்,” என்றார் அலியாஸ்கர்.

விசாகப்பட்டினத்தின் கடலோரப் பகுதி மிகவும் கடினமாக இருப்பதால் தினமும் பலர் மூழ்கிவிடும் சம்பவங்களை அவர் செய்தித்தாள்களில் கண்டார். ”கடல் சார் துறையில் தேவையான அனுபவம் எங்களிடம் இருந்தது. எனவே மக்களை மீட்கும் திட்டம் குறித்து சிந்தித்தோம்” என்றார்.

அலியாஸ்கர் தனது அப்பா அஹமத் எஸ் அபெல்லி மற்றும் சகோதரர் தஹேர் அஹமத் ஆகியோருடன் இணைந்து சைஃப் ஆட்டோக்மேஷன் நிறுவி ’கடல் நீர் ட்ரோன்’ உருவாக்கும் திட்டம் குறித்து சிந்தித்தனர். அலியாஸ்கர் கூறுகையில், 

“1961-ம் ஆண்டு என் அப்பா கல்கத்தாவில் கடல் மற்றும் ஸ்டீல் ஆலை துறைக்கு சேவையளிக்கும் என்ஜினியரிங் அப்ளையன்சஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரியத் துவங்கினார். இந்நிறுவனம் டூல்கள், ஹார்டுவேர், ஹைட்ராலிக்ஸ், நியூமேடிக் பொருட்கள் போன்றவற்றை க்ளையண்ட்டுகளுக்கு விநியோகம் செய்தது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங், மெர்கேட்டர் லைன்ஸ், எஸ்ஸார் ஷிப்பிங், ONGC போன்ற க்ளையண்டுகளுடன் கடல்சார் துறையில் முக்கிய கவனம் செலுத்தினோம். சிக்கல்களை சிறப்பாகப் புரிந்துகொள்ள எங்களது குழந்தைப் பருவத்தில் இருந்து இந்த கப்பல்களைப் பார்வையிட்டோம்.

தஹேர் முதல் நாளில் இருந்தே அப்பாவுடன் பணியாற்றி வரும் நிலையில் அலியாஸ்கார் ஆரம்பத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 2001-2004 வரை அதன் தொலை தொடர்பு மற்றும் ஒளிபரப்பு பிரிவில் ஸ்ட்ராடெஜிக் பிசினஸ் யூனிட்டில் பணியாற்றினார். முதுகலைப் படிப்பிற்கு ஜெர்மனி சென்று 2007-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். ஸ்டார்ட் அப்பின் மார்கெட்டிங் பிரிவை தஹேர் கவனித்துக்கொள்கிறார். அலியாஸ்கர் ரோபோடிக்ஸ் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஸ்டார்ட் அப் துவங்கப்பட்டது. அலியாஸ்கர் சொந்த முயற்சியில் ஈடுபட அவரது 90 வயது அப்பா உந்துதலளித்துள்ளார். அவர் கூறுகையில், 

“ஏற்கெனவே காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (NRDC) எங்களது காப்புரிமை விண்ணப்பத்திற்கு ஸ்பான்சர் செய்கிறது,” என்றார். 

NRDC அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிறுவனமாகும்.

சவால்கள் மற்றும் செயல்முறை

”2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தண்ணீர் ட்ரோன் வடிவமைக்க தீர்மானித்தோம். பவர் கணக்கீடு, வடிவம் மற்றும் அளவு கணக்கீடு, எடை மற்றும் மிதவை அளவுறுக்கள், காற்றியக்கவியல், அழுத்த சோதனை, பிற சிக்கலான பொறியியல் கணக்கீடுகள் உள்ளிட்ட பொறியியல் சார்ந்த சிக்கல்கள் இருந்தது. நாங்கள் ஐஐடி இண்டெர்ன்களை பணியிலமர்த்தினோம். இது ஓரளவிற்கு பிரச்சனைக்கு தீர்வளித்தது. பராமரிப்பு எளிதாக இருக்கவேண்டிய பிரச்சனை இருந்தது. கப்பல் பழுதுபார்க்கும் துறையில் பல நண்பர்கள் இருந்ததால் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வுகாண உதவினர்,” என்றார் அலியாஸ்கர்.

இந்த ஆண்டு மே மாதம் முன்வடிவம் தயாரானது. இந்த ட்ரோன் பிரத்யேக ரிமோட் வாயிலாக இயக்கப்படுகிறது. 

“இந்த ட்ரோன் இணையத்தையோ அல்லது டவர் சிக்னலையோ சார்ந்து செயல்படுவதில்லை. குறிப்பாக புயல், நிலநடுக்கம் போன்ற சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனைகள் இருப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக அமையும். இது ரேடியோ அதிர்வலையைக் கொண்டு இயங்குகிறது. ட்ரோன் தண்ணீரில் தூக்கியெறியப்பட்டதும் 7 knots (நொடிக்கு 14 மீட்டர்) வேகத்தில் செல்லும். மனிதர்களால் இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது,” என்றார். 

ஒரு நபர் மூழ்குவதை குழு உறுப்பினர் கண்டால் அவர் உடனடியாக ட்ரோனை கடலில் வீசலாம். கைகளில் இருக்கும் ரிமோட்டை இயக்கி மூழ்கிக்கொண்டிருக்கும் நபரின் திசை நோக்கி ட்ரோனை நகர்த்தி அவரை பாதுகாப்பாக கப்பலிடம் கொண்டு சேர்க்கமுடியும்.

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு, உயிர் காத்தல், கண்காணிப்பு, வெள்ளம் பாதித்த இடங்களில் மருந்துகள் விநியோகித்தல் போன்ற வெவ்வேறு பயன்பாடுகளுக்காக 12 ட்ரோன் மாதிரிகளை இந்த ஸ்டார்ட் அப் வடிவமைத்துள்ளது.

சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனத்தில் தற்போது ட்ரோன் வடிவமைப்பில் ஆறு நபர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது. வடிவமைப்பு, எலக்ட்ரானிக்ஸ், டெஸ்டிங் போன்ற பணிகளை ஸ்டார்ட் அப்பே மேற்கொள்ளும் நிலையில் ட்ரோனின் உடற்பகுதியை உற்பத்தி செய்யும் பணி மூன்றாம் பார்ட்டியிடமிருந்து அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது.

ட்ரோனின் சிறப்பம்சங்கள்

• ஆளில்லாமல் ரிமோட்டால் கட்டுப்படுத்தக்கூடியது

• ரிமோட்டின் தொடர்பு எல்லை 3 கிலோமீட்டர் என்றபோதும் இது 10 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்படலாம்

• முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் தேவைப்படும்

• சுமார் 12 கிலோ எடை கொண்டது

• நீடித்திருக்கும் பேட்டரி கொண்டது. மிதமான லோடில் 45 நிமிடங்களும் ஜிபிஎஸ் ட்ராக்கிங்கிற்கு எட்டு மணி நேரமும் நீடிக்கும்

• ஹெச்டி கேமிரா, ரோபோடிக் ப்ரோப் அல்லது கருவிகளுடன் இணைத்துக்கொள்ளலாம்

சந்தை மற்றும் வருங்கால திட்டம்

இந்த ஸ்டார்ட் அப் கடற்கரை அதிகாரிகள், நீர்நிலை அதிகாரிகள், நகராட்சிகள், அணை அதிகாரிகள் போன்றோரை சாத்தியக்கூறுகள் நிறைந்த க்ளையண்டுகளாக பார்க்கிறது. 

“இந்தியாவில் 176 ஏரிகள், 34-க்கும் அதிகமான மலைக்கண்மாய்கள், 3,200 அணைகள் மற்றும் ஓடங்கள், 17-க்கும் அதிகமான முக்கிய ஆறுகள் மற்றும் நதிகள், 7,500-க்கும் அதிகமான கரையோர எல்லைகள் போன்றவை உள்ளன. எனவே வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது,” என்றார் அலியாஸ்கர்.

ட்ரோனின் விலையை நிர்ணயிப்பது குறித்து சைஃப் ஆட்டோமேஷன் ஆராய்ந்து வருகிறது. அவர் கூறுகையில், “ஏற்றுமதி சந்தை மட்டுமல்லாது எங்களது பாதுகாப்பு ஏஜென்சிக்களிலும் சேவையளிக்க முடியும்,” என்றார்.

இந்த மாத இறுதியில் இந்நிறுவனம் அதன் முதல் யூனிட்டை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 500 யூனிட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் 2,000-க்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : சமீர் ரஞ்சன் | தமிழில் : ஸ்ரீவித்யா