ஒரே மரத்தில் 300 வகை மாம்பழங்களை வளர்க்கும் ‘மேங்கோ மேன்’

1

கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட வகை மாம்பழத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்ட தகவல் செய்தித்தாள்களிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டபோது, அனைவரின் ஒட்டுமொத்த கவனமும் 78 வயதான ஹாஜி கலிமுல்லா கான் பக்கம் திருப்பியது. 

உத்திரப்பிரதேசத்தின் மலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த இவர் வெவ்வேறு வகையான மாம்பழங்களை வளர்த்து அதன் சுவையை சோதனை செய்து பார்க்கிறார். இதில் ஒவ்வொரு தனித்துவமான வகைக்கும் ஒரு பிரபலத்தின் பெயரைச் சூட்டுகிறார். இவர் ஒரே மரத்தில் 300 வகை மாம்பழங்களை வளர்க்கிறார். நம்பமுடியவில்லை அல்லவா? ஆம். இது உண்மைதான். 

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் மாம்பழ உற்பத்தி செய்யும் கலையில் முன்னோடியாக உள்ளார். அவர் கூறுகையில்,

"எங்கள் குடும்பம் கடந்த 300 ஆண்டுகளாகவே மாம்பழ உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ராஜ்வாடாவைச் சேர்ந்த எங்களது முன்னோர்கள் அழகான கலப்பின வகைகளைக் கொண்ட மிகப்பெரிய மாம்பழத் தோட்டத்தை வளர்த்து வந்தனர். என்னுடைய 17-வது வயதில் நான் மாமரத்தைப் பயிரிட்டேன். இதில் ஏழு வகை இருந்தது. இவை அனைத்துமே வெவ்வேறு சுவையும் மணமும் கொண்டிருந்தது."

அப்போது முதல் புதிய வகைகளை அறிமுகப்படுத்துவது சாத்தியம் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு ஆண்டும் புதிய கலப்பினங்களை வளர்க்க முயற்சித்து வந்ததாக என்டிடிவி-க்கு தெரிவித்தார்.

கலிமுல்லாவிற்கு எட்டு குழந்தைகள். இவர் ஒரு மாம்பழ வகைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் ‘நமோ ஆம்’ என பெயரிட்டபோதுதான் அது தலைப்புச் செய்தியாக மாறியது. கொல்கத்தாவின் husn-e-aara வகை மற்றும் லக்னோவின் dusseri வகை ஆகியவற்றின் கலப்பின வகையை மோடியின் சொந்த ஊரில் வளர்க்க திட்டமிட்டார். 

இதற்கு முன்பு முன்னாள் நடிகை நர்கீஸ் தத், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர், முகல்-இ-அசாம் திரைப்படத்தின் பிரபல கதாபாத்திரமான அனார்கலி ஆகிய பெயர்களை மாம்பழ வகைகளுக்கு வைத்துள்ளார்.

நமக்குப் பிறகும் நமோ மாம்பழம், நரேந்திர மோடியையும் அவரது வெற்றியையும் மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி வரும். ஒருமுறை அவரை சந்திக்க விரும்புகிறோம். அவர் ஒரு முறை இங்கு வந்து நமோ மாம்பழத்தைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என ’ஜீ நியூஸ்’ இடம் கலிமுல்லா தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட வகை கொய்யாவை மட்டுமே அவர் வளர்க்கிறார். இந்த வகை பழுத்ததும் ஆப்பிள் போன்று சிகப்பாக மாறிவிடும். கலிமுல்லா பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

கட்டுரை : THINK CHANGE INDIA