ஐடி நிபுணர்களை கிராமங்களை நோக்கி ஈர்க்கும் 'அக்சயகல்பா' பண்ணைகள்

0

இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப் போற்றப்படும் பெங்களூருவின் ஐடி நிபுணர்கள் பலர் அங்கிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். நகரச் சந்தடிகளை விட்டு தப்பித்து தங்களது குழந்தைப் பருவத்தைக் கழித்த கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். விவசாயம் மற்றும் பால் பண்ணை சார்ந்த தொழிலில் ஈடுபடும் அவர்கள் இயற்கை விவசாயம் ஊரக பால் பண்ணை என மாதம் ஒன்றிற்கு 40 ஆயிரத்தில் இருந்து 1 லட்ச ரூபாய் வரையில் சம்பாதிக்கின்றனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் டாக்டர் ஜி.என்.எஸ். ரெட்டி. இவர் ஒரு கால்நடை மருத்துவர். 'அக்சயகல்பா பார்ம்ஸ் அண்ட் புட்ஸ் லிமிட்டட்' நிறுவனத்தை உருவாக்கியவர். 

பால் உற்பத்தி முறையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் கிராமப்புற தொழில் முனைவர்களை உருவாக்கும் முன்முயற்சியில் முதன் முதலாக இறங்கியுள்ள இந்திய தனியார் நிறுவனங்களில் ஒன்று அக்சயகல்பா பார்ம்ஸ் அண்டு புட்ஸ் லிமிட்டட். நுகர்வோருக்கு உயர் தரமான சத்துள்ள பாலை வழங்குவது, விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெருக்கித் தருவது, கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை தொழில்நுட்பத்தால் நிரப்புவது, கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு நடக்கும் இடப் பெயர்வை தலைகீழாக மாற்றி நகரத்தில் இருப்பவர்களைக் கிராமத்திற்கு ஈர்ப்பது எனப் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துகிறது அக்சயகல்பா.

அக்சயகல்பாவின் பின்னணிக் கதை

டாக்டர் மனிபாய் தேசாய் எனும் காந்தியவாதியின் உரைதான் ஜி.என்.எஸ். ரெட்டியிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிபாய் தேசாய், இந்தியாவின் கிராமப்புறப் பகுதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய முன்னோடி. பாரதிய அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் பவுண்டேஷனை (பிஏஐஎப்-BAIF) நிறுவியவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தேசாயின் பி.ஏ.ஐ.எப்-ல் பணியாற்றினார் ரெட்டி. அப்போது அவர், வனத்துறை, நீர்ப்பாசனம், நீர்வடிப்பகுதி மேலாண்மை ஆகியவற்றில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழி வகுத்தது.

அதன்பிறகு அவர் உருவாக்கியதுதான் அக்சயகல்பா. பி.ஏ.ஐ.எப்.-புடன் இணைந்து அக்சயகல்பா திட்டத்தை செயல்படுத்த நினைத்தார் ரெட்டி, ஒரு சில காரணங்களால் அது முடியாமல் போகவே தனியாக ஆரம்பித்தார். 2010ல் கர்நாடக மாநிலம் திப்தூரில் 25 கோடி மூலதனத்தில் அக்சயகல்பா பண்ணையை ஆரம்பித்து ஒரு தொழிலதிபராகப் பரிணமித்தார் ரெட்டி. முன்னேறாத பிரிவினரை முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்து, கிராமங்களில் வளத்தைப் பெருக்க வேண்டும் என்ற அவரின் கனவை நனவாக்க அக்சயகல்பா தொடங்கப்பட்டது.

ரெட்டி சொல்கிறார்:

மூணுக்கு மூணு பரப்பளவில் சின்ன கடை வைத்திருக்கும் ஒரு பான் வாலா, மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்யும் ஒரு விவசாயியைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறார். இந்த நிலை மாற வேண்டும்.

இந்தியப் பால் பண்ணை சந்தையின் தற்போதைய நிலை

ஒரு நல்ல செய்தி என்னவெனில், இந்தியாவின் அமைப்பாக்கப்பட்ட பால் உற்பத்தித் தொழிலானது கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (20011ல் இருந்து 15 வரை) ஆண்டுக்கு 22 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2014-15 நிதியாண்டில் உள்ள 19 சதவீத வளர்ச்சி 2017-18ல் 25 சதவீதமாக அதிகரிக்கும் (CRISIL ரிப்போர்ட்படி) என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சந்தையில் விற்பனை செய்யப்படும் பாலில் 70 சதவீதம் கலப்படப் பால் என்பதும் அருந்துவதற்கு லாயக்கற்றது (பால் கலப்படம் குறித்த தேசிய சர்வே 2011) என்பதும் வருத்தமளிக்கும் செய்தி. எனவே டாக்டர் ரெட்டி இப்படிக் கேள்வி எழுப்புகிறார்:

பால் நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பே அதில் உள்ள சத்துப் பொருள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்றால், பிறகு அதை விலை கொடுத்து வாங்கும் நுகர்வேரின் பணத்திற்கு மதிப்புத்தான் என்ன?

தரத்தைக் காட்டிலும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்கிறார் ரெட்டி. பசுக்களின் ஆரோக்கியம் பேணப்படுவது நல்ல தரமான பால் உற்பத்தியைக் கொடுக்கும் என்கிறார் அவர். சுதந்திரமாக மாடுகளை புல்வெளியில் மேய விடுவதற்குப் பதிலாக ஒரு இறுக்கமான இடத்தில் கட்டி வைத்து செயற்கையாக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தீவனத்தை போடுவது, செயற்கை ஹார்மோன்கள், ஸ்டீராய்டு ஊசி போடுதல் போன்றவற்றால் நிச்சயம் பால் உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் அந்தப் பாலை அருந்தும் நுகர்வோருக்கு தரமான பால் போய்ச் சேராமல் கெமிக்கல்கள்தான் போய்ச் சேரும் என்கிறார் ரெட்டி.

இந்தத் தீங்கு நேராமல் தடுப்பதற்கு பாலைப் பதப்படுத்தாமல் விட்டு விடலாமா? என்று கேள்வி எழுப்பும் ரெட்டி, “பெரும்பாலான விவசாயிகளிடம் வீட்டில் குளிர்பதன வசதி இருப்பதில்லை. எனவே பால் பதப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த முறையானது விட்டமின் ஏ, பி6, பி12 கால்சியம் மற்றும் அயோடின் போன்ற விட்டமின்களை அழித்து விடுகிறது” என்கிறார்.

“பால் கிட்டத்தட்ட இறந்து விடுகிறது” என்று சொல்கிறார் ரெட்டி. இந்த இடத்தில்தான் அக்சயகல்பா பண்ணையானது ஒரு வரவேற்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு முழுமையான அக்சயகல்பா பண்ணையை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்கு தோராயமாக 20லிருந்து 25 லட்ச ரூபாய் தேவை. 20லிருந்து 25 பசுக்கள் இருக்க வேண்டும். ஒரு உயர்தரமான மாட்டுக் கொட்டகை, தானியங்கி பால் கறவை வசதி, தீவனக் கொள்ளிடம், குளிர்பதன வசதி, பயோகேஸ் பிளான்ட் மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் இருக்க வேண்டும். மொத்த பண்ணையுமே தானியங்கி வசதி கொண்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அக்சயகல்பா தனது பசுக்களின் ஆரேக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

“பசுக்களை அடைத்து வைப்பதில்லை. விரும்பும் போது அவை சுதந்திரமாக மேயச் செல்கின்றன. மாட்டுக் கொட்டகங்களையும் சுத்தமாக வைத்திருப்போம். நோய் தாக்கும் அபாயத்தைத் குறைக்கிறோம். ஒவ்வொரு பசுவின் உடல் நிலை மற்றும் பால் உற்பத்தி எலக்ட்ரானிக் முறையில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது.”

”மக்காச்சோளம், கேழ்வரகு மற்றும் உள்ளூர் சோளம், தட்டைப்பயிறு, வெல்வெட் பீன்ஸ், முருங்கை போன்றவை இயற்கை முறையில் வளர்க்கப்பட்டு அதைத்தான் மாடுகளுக்கு தீவனமாகத் தருகிறோம்” என்கிறார் டாக்டர் ரெட்டி.

பால் மடியில் இருந்து பேக்கிங் வரையில் அனைத்துமே தானியங்கி முறையில்தான் இயங்குகிறது. பால் கறப்பதில் இருந்து அதைக் குளிர் சாதன வசதியில் பராமரிப்பது வரையில் மனிதக் கை படாமல் அனைத்தையும் எந்திரங்களே செய்கின்றன. இதனால் பதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீர் இயற்கை எரிவாயு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அங்கிருந்து உற்பத்தியாகும் மின்சாரம், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வரையில் பயன்படுகிறது. இதன் மூலம் அக்சயகல்பா பண்ணை அரசின் மின்சார வாரியத்தை நம்பி இருப்பதில்லை. கிராமப்புறப் பகுதிகளில் அந்த மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைப்பது சவால்தானே.

யார் யாருக்கு எப்படிப் பலனளிக்கிறது?

அக்சயகல்பாவோடு இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் என்னென்ன வழிகளில் பலன்:

• பண்ணை வைப்பவர்கள் 40 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரையில் அவர்களது பண்ணையின் அளவைப் பொருத்து சம்பாதிக்கலாம். இது நகரத்தில் வேலை பார்ப்போர் வாங்கும் சம்பளத்திற்கு இணையானது.

• பண்ணையில் உள்ள பசுக்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன. இதன் காரணமாக தேசிய சராசரிப் பால் உற்பத்தி விகிதம் பசு ஒன்று நாள் ஒன்றுக்கு 2.5 லிட்டரில் இருந்து 10 லிட்டர் வரை அதிகரிக்கிறது

• அக்சயகால்பா பாலில் எளிதில் ஜீரணமாகும் என்சைம்கள், இம்யூனோ குளோபின், அமினோ அமிலம் மற்றும் புரோட்டின்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியம், இயக்கம் மற்றும் வளர்ச்சிக்கு நல்லது. பால் தவிர பால் பொருட்களான தயிர், நெய், வெண்ணை, பன்னீர் ஆகிய பொருட்களும் விரிவான அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அடுத்து என்ன?

தற்போதைய வெற்றியுடன் மீண்டும் டாக்டர் ரெட்டி புதிய கனவு கண்டு கொண்டுதான் இருக்கிறார். கேட்டால் ஏன் நான் கனவு காணக் கூடாது என்கிறார். அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை இதுதான்:

பிற எவரையும் போலவே பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க விவசாயிகளும் தகுதி வாய்ந்தவர்கள்தான்.

அந்த நம்பிக்கை இன்று 110 பண்ணைகள், நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி என வளர்ந்துள்ளது.

அடுத்த ஆறு மாதத்தில் பண்ணைகளின் எண்ணிக்கையை 200 ஆகவும் பால் உற்பத்தியை 30 ஆயிரம் லிட்டராகவும் அதிகரிக்க விரும்புகிறார் ரெட்டி. அவரது இந்தத் துணிச்சலான யோசனை டாடா கேப்பிட்டல் மற்றும் ஒரு சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளது. முன்னாள் ஐடி துறையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுக்களையும் வெகு கவனத்துடன் ஒருங்கிணைத்துள்ளார் ரெட்டி. வட்டி இல்லா கடன் கொடுத்து, பண்ணையாளர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க அந்தக் குழுவினர் விரும்புகின்றனர். “கிராமம் மற்றும் நகரத்திற்கு இடையிலான இடைவெளியை நிரப்புவது” என்ற தனது திட்டத்தை நோக்கிய அடுத்த நகர்வு இது என்கிறார் ரெட்டி.

ஆக்கம்: ஸ்வேதா விட்டா | தமிழில்: சிவா தமிழ்ச் செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

விவசாயிகளுக்கு உதவும் 'அக்ரோமேன்

நிர்வாகப் பணியை உதரிவிட்டு இயற்கை விவசாய உணவு சந்தை பக்கம் திரும்பிய ஜிதேந்தர் சேங்வான்