ஏர் இந்தியா உலக சாதனை- பதினான்கரை மணி நேரத்தில் 15,300 கிமீ பறந்து அசத்தல்!

0

ஏர் இந்தியா விமானம், புது டெல்லியில் இருந்து கிளம்பி, உலக உருண்டையை சுமார் பதினான்கரை மணி நேரம் சுற்றிப் பயணித்து அமெரிக்கா சான் ப்ரான்சிஸ்கோவை அடைந்து, இடையில் நிறுத்தம் இல்லாமல் நீண்ட தூரம் பயணித்த உலகின் முதல் விமானம் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளது. அரிதான நிகழ்வாக, ஏர் இந்தியா போயிங் 777-200 விமானம், அக்டோபர் 16 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அதே தினம் கலிபோர்னியா நேரப்படி காலை 6 மணிக்கு தரை இறங்கியது. 

இந்த விமானம் பசிபிக் பெருங்கடல் மீது பறந்து, 15,300 கிலோ மீட்டர் நீண்டதூர வழித்தடத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. அட்லாண்டிக் கடல் வழி சென்றால் 13,900 கிமி தூரம் மட்டுமே என்பதால் இந்த வழிதடத்தை ஏர் இந்தியா தேர்ந்தெடுத்தது. இதுவரை நீண்ட வழித்தடமாக, 14,210 கிமி தூரம், துபாபில் இருந்து ஆக்லாண்ட் வரை பயணித்து எமிரெட்ஸ் காரியர் முதல் இடத்தில் இருந்தது. 

ஏர் இந்தியா விமானம், அட்லாண்டிக் வழியை விட தற்போது அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியாவின் சீனியர் மேலாளர் இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்,

“பூமி மேற்கில் இருந்து கிழக்கை நோக்கி சுற்றுகிறது, காற்றும் அதே திசையில் அடிக்கிறது. அதனால் மேற்கை நோக்கி பறப்பது என்பது காற்றின் எதிர்திசையில் போவதாகும். அதனால் விமானத்தின் வேகம் குறைகிறது. ஆனால் கிழக்கு நோக்கி சென்றால் சுலபமாக இடத்தை குறைந்த நேரத்தில் அடைந்துவிட முடியும்,” என்றார்.

இந்த விமானம், சான் ப்ரான்சிஸ்கோவில் இருந்து டெல்லி திரும்பி வர எப்பொழுதும் போல் அட்லாண்டிக் வழியில் வரும் என்றும் தெரிவித்தார். 

சிங்கப்பூர், நியூ யார்கிற்கு நேரடி விமான சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என்று தெரிகிறது. அதுவரை ஏர் இந்தியா, பசிபிக் பெருங்கடல் வழியாக பயணித்து உலகின் அதிக தூரம் கடக்கும் நிறுத்தம் இல்லாத விமானம் என்ற பெருமையை தக்கவைத்துக்கொள்ளும். 

கட்டுரை: Think Change India