வீட்டை பூட்டாமல் வெளியே செல்லும் சென்னை பெண்மணி!

நம்பிக்கை அதானே வாழ்க்கை!

1

இன்று உலகில் சுதந்திரமாக நடமாடுவதே சிரமமாக இருக்கும் வேளையில், எந்தவித பயமுமின்றி, யாரைப் பற்றியும் அச்சப்படாமல் தன் வீட்டைப் பூட்டாமல் திறந்துபோட்டுச் செல்லும் ஒரு பெண் சென்னையில் வசிக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது. ஆம் கடந்த பத்து ஆண்டுகளாக தான் வெளியே செல்லும் போது வீட்டை பூட்டாமல் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆர்த்தி மஹாதேவன்.  

அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்தித் தொகுப்பில் இந்த ஆச்சர்ய தகவல் வெளிவந்தது. சென்னையில் அடுக்குமாடி குடியிறுப்பில் வசிக்கும் ஆர்த்தி என்ற அந்த பெண்மணி, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் நல்லவர்களே என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தன் வீட்டை பூட்டாமல் செல்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது. 

”நான் என் வீட்டையும் பூட்டுவதில்லை, உள்ளே இருக்கும் பொருட்களையும் பீரோவில் வைத்து பூட்டுவதில்லை,”

என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் ஆர்த்தி. அவர் தன்னார் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அக்டோபர் மாதம் நடைப்பெறும், ‘தான் உத்சவ்’ அதாவது பிறருக்கு கொடுத்து மகிழ் என்ற விழாவின் முக்கிய பங்கேற்பாளராகவும் இருக்கிறார். 

”நான் இந்த பழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன் துவங்கினேன். நான் பணிக்கு செல்லும் போது என் குழந்தைகளை பராமறிப்பாளரை நம்பி விட்டுச்செல்லும் போது, எனது பொருட்களை மட்டும் எதற்கு பூட்டிச்செல்கிறேன் என்று யோசித்தேன். அப்போது தான் நாம் செய்வது அபத்தம் என்று உணர்ந்தேன்,” என்கிறார் ஆர்த்தி.

‘சுதந்திரமாக வாழ்’ என்று முடிவெடுத்து, அன்று முதல் வெளியே செல்லும்போது அவர் தன் வீட்டை பூட்டுவதில்லை. வீட்டில் அவரும், குழந்தைகளும் இருக்கையில் மட்டும் உள்ளே பூட்டிக்கொள்கிறார். அதுவும் கூட தனியுரிமைக்காக அதை செய்கிறார். 

அவரிடம் கொஞ்சம் நகைகளும், வெள்ளி பூஜை சாமான்கள் மட்டுமே இருக்கிறது என்றும் அது தனக்கு முக்கியமானவை அல்ல என்கிறார். இந்த உலகைவிட்டு பிரியும் எவரும் எந்த சொத்தையும் எடுத்துச் செல்லப்போவதில்லை என்ற அடிப்படையில் வாழ்கிறார்.

தனது குழந்தைகளுக்கும் வீட்டை பூட்டாமல் செல்ல பழக்கப்படுத்தியுள்ளார் ஆர்த்தி. ஆனால் கடந்த 10 வருடங்களில் தன் வீட்டில் இருந்து எதுவுமே திருட்டு போகவில்லை என்றும் சொல்கிறார். 

பணிக்கு செல்லும்போது ஆர்த்தியின் வீட்டினுள், அங்கிருக்கும் வாட்ச்மேன், தோட்டக்காரர், பணிப்பெண் என எவர் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து தங்களுக்கு தேவைப்படும் பொருளை கடனாக எடுத்துச்சென்று திரும்ப வைத்துவிடுகின்றனர். 

“எங்கள் தோட்டக்காரர், சைக்கிள் பம்ப் ஒன்றை என் வீட்டினுள் இருந்து எடுத்துச்சென்று, பயன்படுத்திய பின் திரும்ப வைத்துவிட்டு போனார். அப்போது தான் எனக்கு அந்த விஷயம் கூட தெரிந்தது. பலர் என் வீட்டில் இருந்து குடை, அரிசி, பருப்பு என்று தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துச்செல்வார்கள்.” 

ஆரம்ப நாட்களில் ஆர்த்தி வீட்டில் வேலை செய்பவர், அக்கம்பக்கத்தினர் பலரும் இந்த செயலை ஆச்சர்யத்துடனும், சந்தேகத்துடனும் நோக்கினர். ஆனால் பின்னர் அவருடைய உண்மையான நோக்கமும், மக்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, அன்பின் காரணமாக செய்யும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

“மக்கள் தங்களுடைய விலைமதிப்பான பொருட்களை வீட்டுவேலை செய்பவர் மீதுள்ள அவநம்பிக்கை, அவர்களின் பொருளாதார நிலையின் காரணமாகவே வீட்டினுள் பூட்டி வைக்கின்றனர். அதேப் போல் நாம் நம்மை விட மூன்று மடங்கு வசதியுள்ள பணக்காரர் வீட்டிற்குள் செல்லும்போது அவர்கள் அவ்வாறு தங்கள் பொருட்களை பூட்டிவைத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசிக்கவேண்டும். பிறர் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினால், அவர்களும் நம் மீது நம்பிக்கைக் கொள்ள துவங்குவார்கள்,” என்கிறார். 

சமூகம் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று அனைவரையும் அடங்கிய இடம் என்றாலும் இது போன்ற நல்லுள்ளம் கொண்ட மனிதர்களால் தவறிழைப்பவர்களும் திருந்த ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும் என்று நம்புவோம்.