பாம்புகளின் ரட்சகன்..!

0

வெற்றியாளராக பல வழிகளில் ஒருவர் உருவாகலாம். விளையாட்டு வீரராக, சிறந்த வியாபாரியாக, கல்வியில் சாதித்தவராக என்று பல வழிகளில் சாதிக்கலாம். ஆனால், பாம்புகளை பிடித்து அதில் வெற்றிபெற்ற ஒரே நபர் வாவா சுரேஷ்தான்.

இன்று இந்தப் பெயரே பலரிடம் பிரபலம். பாம்பு பிடிப்பதை தொழில் ஆக்கிய பெரிய பணக்காரர் ஆகிவிடவில்லை. ஆனால், பாம்பைக் கண்டால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் மக்கள், இன்று பாம்பை பார்த்த உடன் அவர்களின் நினைவுக்கு வருபவர் சுரேஷ்தான். உடனே அவருக்குத்தான் போன் போடுகிறார்கள். அந்த அளவுக்கு பிரபலம். அதுதான் அவரின் வெற்றி.

பொது மக்கள் மட்டுமல்ல போலீஸ், வனத்துறை என்று அரசு தரப்பும் கூட பாம்பு பிடிக்க சுரேஷைத்தான் நாடுகிறார்கள். அவருக்காக பேனர் வைத்து வாழ்த்துகிறார்கள். அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போது கோயில்களில் வேண்டுதல்கள் நடத்துகிறார்கள்.

உச்ச கட்டமாக சினிமா ரசிகர்கள் போல் சுரேசுக்கு ரசிகர் மன்றம் கூட தொடங்கி விட்டார்கள். அந்த அளவுக்கு கேரள மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் சுரேஷ்.

திருவனந்தபுறம் அருகே ஸ்ரீகாரியம் தான் சுரேஷின் சொந்த ஊர். தனது 12 வது வயதில் ஒரு நாள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு பாம்பை பார்த்தவர் அதனை பிடித்து ஒரு குப்பியில் அடைத்து பள்ளிக்கே கொண்டு சென்றிருக்கிறார். சக மாணவர்கள் மத்தியில் அன்று அவர் தான் ஹீரோ.

அனால், அதனை வீட்டுக்கு கொண்டு போனபோது வீட்டில் ஒரே களேபரம். ஆனாலும், பெற்றோரின் எதிர்ப்புக்களை எல்லாம் மீறி பாம்பு பிடிப்பதை தனது பொழுது போக்காகவே மாற்றிக் கொண்டிருக்கிறார் சுரேஷ்.

தற்போது, 27 ஆண்டுகள் பாம்புகளுடனான பயணத்தில் திரும்பி பார்த்தால் அவருக்கே ஆச்சரியம் பொங்குகிறது. 42 ஆயிரம் பாம்புகளை இதுவரை பிடித்திருப்பதாக ஒரு கணக்கு வைத்திருக்கிறார். அதில் 30 ஆயிரம் பாம்புகள் கருநாகம் என்று அவர் சொன்ன போது ஒருநிமிடம் மயிர் கூச்செரியத்தான் செய்தது.

அதோடு எண்ணிக்கை நிற்கவில்லை. 300 முறையாவது பாம்புகளிடம் கடிபட்டிருக்கிறார். மூன்று முறை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலை கூட உருவானதாம். ஆனாலும் அவரது பாம்பு பிடிக்கும் ஆர்வத்துக்கு ஒரு பங்கமும் வரவில்லை.

'இப்படி மரணத்தை நேருக்கு நேர் பார்த்த பிறகும் இந்த பணியை ஏன் தொடர்கிறீர்கள்..?' என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார். "பாம்புகளை பாதுகாக்கத்தான்.."! என்கிறார். மனிதர்கள் அவற்றை அடித்துக் கொன்றுவிடாமல், அவர்களிடமிருந்து பாம்புகளை பத்திரமாக மீட்பதற்குத்தான் என்கிறார். அதன் மூலம் மனிதர்களையும், இயற்கையையும் பாதுகாக்கிறோம் என்கிற மன திருப்திதான் இந்தப் பணியை தொடர்ந்து செய்ய தூண்டுகிறது என்கிறார் சுரேஷ்.

அறிவியல் ரீதியில் பாம்புகளை அவர் பிடிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளை சிலர் முன் வைக்கிறார்கள். அவர்கள் சொல்வது போல் ஸ்டிக் போன்ற உபகரணங்கள் மூலம் பாம்புகளை பிடித்தால் அவற்றின் உடல்களில் காயங்கள் ஏற்ப்படும் அதனால்தான் 15 அடி கரு நாகமாக இருந்தால் கூட ஆயுதங்களை தொடுவதில்லை. தனது 'கை' மீதுதான் முழு நம்பிக்கையும் வைத்துள்ளார். மக்கள் வசிப்பிடத்தில் பாம்பு என்று அழைப்பு வந்ததும் செல்லும் சுரேஷ், பாம்பை பிடித்த உடன் பையில் போட்டு சென்று விட மாட்டார்.

அந்த இடத்தில் வேடிக்கை பார்க்கக் கூடும் மக்களிடம் அந்த பாம்பை பற்றி ஒரு பாடமே நடத்துவார். சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பாம்பின் மீதான பயத்தை போக்குவதுதான் அதன் நோக்கமாம். பாம்பு பயம் போய்விட்டாலே அவற்றை அடித்து கொல்லவோ, கல்லால் எரிந்து துரத்தவோ எத்தனிக்க மாட்டார்கள் என்பதே சுரேஷின் வாதம்.

பாம்புகளை நாம் துன்புறுத்தாத வரை அவை நம்மை கடிப்பதில்லை. பாம்பு கடிபட்டால் கடிபட்ட இடத்துக்கு மேலே துணியால் லேசான கட்டு போட வேண்டும். ஆனால் கயிறு மூலம் ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு இறுக்கமாக கட்டு போடக்கூடாது. முடிந்தால் கடிபட்ட இடத்தை சிறிய கத்தி, பிளேடால் கீறி விஷ ரத்தத்தை லேசாக வெளியேற்றலாம். பாம்பு கடி பட்டவர்கள் நடக்கவோ, உட்காரவோ கூடாது. கடி பட்ட உடல் பகுதியை இதயத்துக்கு மேலெ தூக்கி வைக்கக்கூடாது என்பன சுரேஷின் முதல் உதவி அட்வைஸ்.

கேரளா முழுதும் பயணித்து பாம்புகளை பிடிக்கிறார் சுரேஷ். தனக்கென ஒரு ஃபேஸ்புக் பக்கமும் வைத்திருக்கிறார். ஆனாலும் வருமானத்துக்கு பெரிய அளவில் வழி இல்லை என்பதுதான் உண்மை.

அவ்வப்போது தேடி வரும் விருதுகளும், பாம்புகள் தொடர்பான செமினார்களும் மட்டுமே பிழைப்புக்கு வழி செய்கிறதாம். பாம்புகளின் விஷத்தை எடுத்து விற்பனை செய்கிறார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட போது பாம்பு பிடிப்பதையே கைவிட்டிருக்கிறார். ஆனால், பொதுமக்கள் மீண்டும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதன் மூலம் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.

தன் மீது நம்பிக்கை வைத்து அழைக்கும் நபர்களின் குரலுக்கு மதிப்பும், அவர்களின் உயிருக்கு பாதுகாப்பும் வழங்குகிறோம் என்கிற ஆத்ம திருப்திதான் சுரேஷின் இந்த லட்சிய பயணத்தை தொடரச் செய்கிறது..!

மலையாளத்தில்: அல்போன்சா| தமிழில்: ஜெனிட்டா