நுண்கடனின் உதவியால் சிறு தொழில் முனைவோர் ஆன யசோதா, லஷ்மி மற்றும் ப்ரேமா

இன்டிட்ரேட் (Inditrade) போன்ற நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நுண்கடன் உதவி, கிராமப்புற மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

12

தமிழ்நாட்டின் பெரியவூர் பகுதியைச் சேர்ந்தவர் யசோதா. கணவரின் வருமானத்தை மட்டுமே கொண்டு வீட்டு செலவுகளை நிர்வகிக்க முடியாததால் குடும்பத்தையும் குழந்தைகளையும் பரமாரித்தவாறே சம்பாதிக்க விரும்பினார். அவரது குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய மளிகைக் கடையை திறக்க விரும்பினார். அவரது சுற்றுவட்டாரத்திலிருந்த பலர் அவருக்கு பரிச்சயமானவர்கள். இதனால் அப்பகுதி மக்களின் தேவையை அறிந்து விற்பனைப்பொருளை அவரால் திட்டமிட முடியும். அதே நேரம் வீட்டுப் பொறுப்பையும் கவனித்துக் கொள்ளமுடியும். அவருக்குத் தேவையானதெல்லாம் நிதியுதவி மட்டுமே. அப்போதுதான் இன்டிட்ரேட் (Inditrade) குறித்து கேள்விப்பட்டு கடன் உதவிக்காக இந்நிறுவனத்தை அணுகினார்.

அவருக்கு 30,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டதால் இன்று யசோதா சராசரியாக நாள் ஒன்றிற்கு 1,500 முதல் 2,000 வரை வியாபாரம் செய்கிறார். இதன் மூலம் தினசரி 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறார். கடையை நிர்வகிக்க அவரது கணவரும் குழந்தைகளும் உதவுகின்றனர். குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்கவேண்டும் என்கிற யசோதாவின் கனவு நனவாகியுள்ளது.

ஆலப்புழாவின் சுவையான ஊறுகாய் முதல் ஹைதராபாத்தின் லாக் வளையல்கள் வரை நம்மில் பலர் இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த சிறு வணிகங்களிடமிருந்து பெறப்படும் பொருட்களையே பயன்படுத்துகிறோம். மைக்ரோஃபைனான்சிங் நிறுவனங்கள் வாயிலாக கிடைக்கப்படும் கடன் உதவிதான் எண்ணற்ற பெண்கள் தொழில் துவங்க உதவுகிறது.

சிறியளவில் செயல்படும் லட்சியம் நிறைந்த பெண் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இன்டிட்ரேட் கேப்பிடல் தனது மைக்ரோஃபைனான்ஸ் சேவையை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. தற்சமயம் மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வருங்காலத்தில் சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது.

இன்டிட்ரேட் (இதற்கு முன்பு JRG) வேளாண் பொருட்களுக்கு நிதிவழங்கும் நிறுவனம். 1994-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமாகும். சில ஆண்டுகள் கழித்து இந்நிறுவனம் கடன் வழங்கும் வணிகம் (NBFC), பொருட்களின் வர்த்தகம், காப்பீட்டு ப்ரோக்கிங், மைக்ரோஃபைனான்சிங் ஆகியவற்றில் ஈடுபட்டது. இன்டிட்ரேட் மைக்ரோ ஃபைனான்சிங் தலைமையகம் மும்பையில் உள்ளது. 50 பேர் கொண்ட குழுவாக செயல்படுகின்றனர்.

இன்டிட்ரேட் (JRG) க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் குழு தலைவர் சுதீப் பாந்தியோபாத்யாய் கூறுகையில்,

பெண்கள் அதிக ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இந்த இரண்டு பண்புகளும் மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக மைக்ரோஃபைனான்ஸ் போன்ற பிரிவுகளில் இவை அவசியமானதாகும்.

சிறு வணிகங்களே இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமாக அமைகிறது

கிட்டத்தட்ட 41 சதவீத இந்தியர்கள் முறைசாரா கடன்களையே நம்பியுள்ளனர். 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியின் நிலவரப்படி கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 30.5 மில்லியன் என்றும் MFI-ன் மொத்த கடன் தொகுப்பு 40,138 கோடி ரூபாய் என ’தி ஹிந்து’ தெரிவிக்கிறது. 2019-ம் ஆண்டில் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து தேவை 13,861 மில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்படுவதாக ஒரு ஆய்வு 2015-ல் தெரிவித்தது.

இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களில் கிட்டத்தட்ட 3.01 மில்லியன் அளவிலான பெண்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் 10 சதவீதத்தை குறிக்கிறது. 2011-ம் ஆண்டில் இந்தியப் பெண்களில் 26 சதவீதம் பேர் வங்கிக் கணக்கை பயன்படுத்தினர். 2014-ம் ஆண்டில் இது 43 சதவீதமாக உயர்ந்தது (Global Findex Report 2015).

சுதீப் விவரிக்கையில், 

நாட்டின் ஒழுங்குப்படுத்தப்படாத துறையில் கடனுக்கான தேவை கடன் வழங்கப்படுதலைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. மைக்ரோஃபைனான்சிங் நிறுவனங்கள் பெருகினாலும் கடந்த இருபதாண்டுகளில் பூர்த்திசெய்யப்படாத தேவைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த தேவையை பூர்த்திசெய்யவும் சந்தையை ஒழுங்குபடுத்தி வலுப்படுத்தவும் விரும்புகிறது இன்டிட்ரேட்.

பல்வேறு வெற்றிக்கதைகள்

லஷ்மியும் அவரது கணவர் ஹனுமந்துவும் மஹராஷ்டிராவின் ஷோலாப்பூர் அருகிலுள்ள கார்குல் என்ற பகுதியில் ஒரு சிறிய டிபன் சென்டரை வெற்றிகரமாக நடத்துகின்றனர். தற்போது செயல்படும் வளாகத்தினுள் ஒரு சிறிய ஸ்வீட் ஸ்டாலை அமைத்து விரிவடைய விரும்பினர். அந்த சமயத்தில்தான் அவர்களது உறவினர்கள் வாயிலாக இன்டிட்ரேட் குறித்து தெரிந்துகொண்டனர். 30,000 ரூபாய் கடன் வழங்கக் கோரி அந்நிறுவனத்தை அணுகினர். 500 ரூபாயாக இருந்த லஷ்மி மற்றும் ஹனுமந்துவின் வருவாய் தற்போது இரட்டிப்பாகி 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. வருங்காலத்தில் சாட் ஸ்டால் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ப்ரேமாவின் கணவர் உயிரிழந்தார். ப்ரேமாவின் கணவரின் வருமானத்தை மட்டுமே குடும்பம் நம்பியிருந்த நிலையில் அவரது உயிரிழப்பால் ப்ரேமாவின் வாழ்க்கையே இருண்டு போனது. வேறு வழியின்றி குடும்பத்தை ஆதரிக்க தமிழ்நாட்டில் அவரது கிராமத்திற்கு அருகே உள்ள கேசவபுரம் என்கிற பகுதியில் தினக்கூலியாக பணிபுரியத் துவங்கினார். இருந்தும் நிலையான வருமானமின்றி குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டார்.

அவரது கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் இன்டிட்ரேட் நிறுவனத்திடமிருந்து மைக்ரோஃபைனான்ஸ் கடன் பெற தீர்மானத்தினர். ப்ரேமா அவர்களுடன் இணைந்துகொண்டார். தற்போது 30,000 ரூபாய் கடன் பெற்று வீட்டிலிருந்தே புடவை வியாபாரம் செய்து ஒரு வாரத்திற்கு சுமார் 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இன்று ப்ரேமா தனது வியாபாரத்தில் வளர்ச்சியடைய முடியும் என்றும் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரமுடியும் என்றும் திடமாக நம்புகிறார். இல்லத்தரசியாக இருந்து ஒரு தொழில்முனைவோராக மாறிய பயணத்தை நினைத்து பெருமை கொள்கிறார்.

வலைதள முகவரி: Inditrade

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்