2019 மார்ச்சில் பாதிக்கு மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்! 

0

இனி, நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தை தேடி நீண்ட தொலைவு நடக்க நேரிடலாம். ஏனெனில், புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் காரணமாக அதிகரிக்கும் செல்வீனங்களால் பெருமளவு ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஏடிஎம் தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பணமதிப்பி நீக்கத்தின் போது வரிசையில் காத்திருந்த மக்கள்
பணமதிப்பி நீக்கத்தின் போது வரிசையில் காத்திருந்த மக்கள்

உள்ளூர் ஏடிம் தொழில் நிறுவனங்களின் அமைப்பான, ஏடிஎம் தொழிலக கூட்டமைப்பு (CATMi) நவம்பர் 21 ம் தேதி, வெளியிட்ட அறிக்கையில், ஏடிஎம் சேவை அளிக்கும் நிறுவனங்கள் 2019 மார்ச் வாக்கில் நாடு முழுவதும் 1.13 லட்சம் ஏடிஎம் மையங்களை மூடும் நிலைக்கு தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது. ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மற்றும் 15,000 ஒயிட் லேபிள் ஏடிஎம் மையங்கள் இதில் அடங்கும்.

தற்போது இந்தியாவில் மொத்தம் 2,38,000 ஏடிஎம்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மென்பொருள் மற்றும் வன்பொருள்களுக்கான சமீபத்திய கட்டுப்பாடு நெறிமுறைகள், ரொக்க நிர்வாக தர நிர்ணயத்திற்கான சமீபத்திய உத்தரவுகள் மற்றும் ரொக்கம் நிரப்புவதற்கான கேசட் ஸ்வேப் முறை ஆகியவை காரணமாக இப்படி ஏடிஎம் மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏடிஎம் தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எம்.எஸ்.பி எனப்படும் ஏடிஎம் நிர்வாக சேவை அளிக்கும் நிறுவனங்கள், பிரவுன் லேபில் எடிஎம் மையங்கள், சொந்த மையங்களை கொண்ட ஒயிட் லேபில் ஏடிஎம் மையங்கள், ஆகியவற்றை உறுப்பினர்களாக கொண்ட ஏடிஎம் தொழிலக கூட்டமைப்பு, உறுப்பினர் நிறுவனங்கள் ஏற்கனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மற்றும் பிறகு ஏற்பட்ட ரொக்க புழக்க பாதிப்பால் நஷ்டத்தை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

"இந்த பாதிப்பு நிகழ்ந்தால், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கீழ் தங்கள் மானியங்களை விலக்கி கொள்ள ஏடிஎம்களை பயன்படுத்தும் பயனாளிகள் சுற்றுப்புறத்தில் உள்ள ஏடிஎம்கள் மூடப்பட்டிருப்பதை எதிர்கொள்ள நேரலாம் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்கத்தின் போது ஏடிஎம் மையங்கள் ரொக்கத்தை அளிக்காததால் நீண்ட வரிசையும் குழப்பமும் நிலவியது போன்ற சூழல் இதனால் உண்டாகலாம்.

இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏடிஎம் மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டால் கணிசமான வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூடுதல் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை நிறைவேற்ற அதிக மூலதனம் தேவை என்பதால், இந்த நிலை மேலும் மோசமாகிறது. ஏடிஎம் சேவை அளிக்கும் நிறுவனங்களிடம் இதற்கான நிதி வசதி இல்லை என்பதால் கூடுதல் செலவுகளை பகிர்ந்து கொள்ள வங்கிகள் முன்வராவிட்டால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படலாம். 

குறைந்த இடைமாற்று கட்டணங்கள் மற்றும் அதிகரிக்கும் செலவுகள் காரணமாக, ஏடிஎம் சேவை அளிப்பதற்கான வருவாய் உயரவில்லை என கூட்டமைப்பு தெரிவிக்கிறது. புதிய ரொக்க முறை மற்றும் கேசெட் ஸ்வேப் நெறிமுறைகளை நிறைவேற்ற மட்டும் ரூ.3500 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட போது, இது போன்ற நெறிமுறைகளை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்த நெறிமுறைகள் 15,000 ஒயிட் லேபில் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் நிலையை ஏற்படுத்தும். இந்த மையங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குவதால் கூடுதல் செலவை ஏற்க முடியாமல் உள்ளன. இந்த மையங்களின் வருவாய் வழியான இடைமாற்று கட்டணம் அதிகரிக்காமலே இருக்கிறது.

இந்தியாவில் ஏடிஎம் துறை மிகுந்த சிக்கலில் உள்ளது. இந்த முதலீடுகளுக்காக வங்கிகள் ஈடு அளிக்க முன்வராவிட்டால், ஒப்பந்தங்கள் ஒப்படைக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் அதிக ஏடிஎம்கள் மூடப்படலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் பல்லா | தமிழில்:சைபர்சிம்மன்