உத்வேக 'வெள்ளி'த்திரை | தி ஜங்கிள் புக் - பல வியப்புகளும் சில நெருடல்களும்!

0

குழந்தைகளுக்கான குழந்தைகள் படங்களும், பெரியவர்களுக்கான குழந்தைகள் படமும், இருவருக்குமான குழந்தைகள் படமும் தமிழில் மட்டுமல்ல; இந்திய சினிமாவிலும் இன்னும் அரிதாகவே இருக்கிறது. உலக அளவில் அதிகம் பணம் ஈட்டும் இலக்கியம், சினிமாவை சற்றே வணிக ரீதியில் உற்றுப் பார்த்தால், அவை எல்லாம் குழந்தைகள் தொடர்புடையதாக இருக்கும். ஆனால், அந்தச் சந்தையின் வல்லமையை இங்கிருப்பவர்கள் அடையாளம் காண முற்படாதது கவலைக்குரியது.

ஆனால், தற்போது நம் வீட்டருகே உள்ள தியேட்டர்களிலும், டிவிடிகளிலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படங்களைக் காணும் வாய்ப்பு மிகுந்திருப்பது மட்டுமே ஒரே ஆறுதல். அந்த வகையில், இப்போது நம் சுட்டிகளுக்கும் சுட்டி மனம் கொண்ட பெரியவர்களும் கண்டு வியந்து ரசிக்கத்தக்க வகையில் வெளியாகியிருக்கும் படைப்பு 'தி ஜங்கிள் புக்'. அதுவும், கதையும் கதைக்களமும் கதாபாத்திரங்களின் தன்மையும் இந்தியர்களுக்கு நெருக்கமானது என்பதால், இது நம்ம சினிமா என்று உரிமையுடன் மகிழலாம்.

ருட்யாட் கிப்ளிங் எழுதிய கதைகளை அடிப்படையாக வைத்து வால்ட் டிஸ்னியால் 1973-ல் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படம் 'தி ஜங்கிள் புக்'. சினிமா தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உச்சம் கண்டுள்ள நிலையில், இப்போது நிழலில் நிஜ அனுபவத்தைத் தரும் வகையில் அதே படம் 3டி-யில் புது அனுபவத்தை தரும் வகையில் டிஸ்னி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மோக்லி எனும் சின்னஞ்சிறுவனை கருஞ்சிறுத்தை ஒன்று காப்பாற்றி ஓநாய் கூட்டத்திடம் ஒப்படைக்கிறது. ஓநாய் கூட்டத் தலைவனும், அவனது மனைவியும் தங்கள் குழந்தையாகவே மோக்லியை வளர்க்கின்றனர். அதுவும் ஓர் ஓநாய் போலவே வளர்க்கப்படுகிறான். தங்கள் காட்டில் மனிதர்கள் இருக்கக் கூடாது என்றும், மோக்லியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஷேர்கான் எனும் புலி எச்சரிக்கிறது. இனி காட்டில் இருந்தால் பாதுகாப்பு இல்லை. எனவே, மனிதர்கள் வாழும் இடத்துக்கே அனுப்பிவிடலாம் என்று ஓநாய்களால் முடிவெடுக்கப்பட்டு கருஞ்சிறுத்தையுடன் அனுப்பிவைக்கப்படுகிறான் மோக்லி. அந்தப் பயணம், புலியின் துரத்தல், கருஞ்சிறுத்தை - மோக்லியின் தற்காலிக பிரிவு, கரடியின் வரவு எனச் செல்லும் கதை - திரைக்கதையில், மோக்லியை புலி கொல்லத் துடிப்பது ஏன்? மோக்லியை பாதுகாத்த ஓநாய்களுக்கு என்ன நேர்ந்தது? வலிமை வாய்ந்த புலியை குட்டிப் பையன் மோக்லி எப்படி எதிர்கொண்டான்..? இதுபோன்ற கேள்விகளுக்கான எளிதான பதிலை 'த்ரில்' அனுபவத்துடனும் நகைச்சுவை முலாம் பூசப்பட்ட உணர்வுபூர்வமாகவும் சொல்லும் அபார படம்தான் 'தி ஜங்கிள் புக்'.

*

இந்த 2016-ல் தொழில்நுட்பம் மூலம் எந்தக் கற்பனையையும் திரையில் சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கு கச்சிதமான உதாரணமாக உருவெடுத்துள்ளது 'தி ஜங்கிள் புக்'. இந்தப் படத்தில் நடித்தவர்கள் என்று பார்க்கும்போது, மோக்லியாக நடித்திருக்கும் நீல் சேத்தி எனும் ஒரே ஒரு சிறுவன் மட்டுமே. (அவன் அப்பாவுக்கு சின்ன ரோல்தான் என்பதால் அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம்). மோக்லி கதாபாத்திரத்தைத் தவிர மற்ற எல்லாமே கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான் என்பது நம்பமுடியாத உண்மை.

காடுகளும் காடுகள் சார்ந்த இடங்கள், உயிர்கள், தாவரங்கள் என அனைத்தையுமே நிஜத்தை நேரில் பார்க்கும் உணர்வைத் தரும் அளவுக்கு கிராஃபிக்ஸ்சின் பங்களிப்பு வியக்கத்தக்கது.

சின்னஞ்சிறு மகா கலைஞன் நீல் சேத்தியின் நடிப்பாற்றல் வியப்பின் உச்சம். கதை நிகழும் களத்தில், சக கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பை வெளிப்படுத்துவது என்பது கலைஞர்களுக்கு கொஞ்சம் எளிதானது. ஆனால், அவை எல்லாம் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு தனியாக நடிப்பது என்பது மிக மிக கடினமானது. அந்தக் கடினமான கலையை நீல் சேத்தி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பது கவனிக்க வேண்டிய அம்சம்.

எனக்கு இன்னொரு வியப்பு, இந்தப் படத்தின் இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ (Jon Favreau). அயர்ன் மேன், அயர்ன் மேன் 2 படங்களை இயக்கிய இவர், 'தி ஜங்கிள் புக்' படத்துக்கு முன் கதையை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்த சின்ன பட்ஜெட் படம் 'செஃப்' (Chef). இது ஒரு ரோடு மூவி வகையறா என்றும் சொல்லலாம். உணவும் உணர்வும் நிரம்பிய எளிய மகத்துவ படைப்பு என்று செஃப் படத்தை வருணிப்பேன். அயர்ன் மேன் எடுத்தவரால் செஃப் எடுக்க முடிந்ததா? என்று வியப்பு மேலிட்ட எனக்கு, இப்போது செஃப் படைத்தவரால் 'தி ஜங்கிள் புக்' கொடுக்க முடிந்ததா? என்ற வியப்பு இன்னும் அடங்கவில்லை.

ஆனால், ஒன்றை மட்டும் உணர முடிந்தது. 'தி ஜங்கிள் புக்' படத்தில் இடம்பெற்றுள்ள சாகசங்களைக் கடந்து, மிருகங்களின் வழியாக மனிதத்தை உணரச் செய்யும் அளவுக்கு உணர்வுபூர்வ அனுபவத்தை பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பக்குவமாக ஏற்படுத்தியதன் பின்னணியில் அறிவார்ந்த தன்மையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இதயத்தால் இதமாக அணுகும் போக்கை முன்னுக்குக் கொண்டுவந்த இயக்குநர் ஜான் ஃபேவ்ரூவின் வியத்தகு அணுகுமுறையை அறிய முடிகிறது.

*

காடுகளும் விலங்குகளும் நம்மை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்ட சூழலில், அவற்றுடன் நேரில் வலம் வரும் அற்புதமான அனுபத்தைத் தருகிறது 'தி ஜங்கிள் புக்'. அதனுடன் திகைப்பூட்டும் திரைக்கதையும் வியப்பூட்டும் காட்சிகளும் கிடைக்கும்போது இதைவிட ஒரு கொண்டாட்டமான எல்லாருக்குமான குழந்தைகள் சினிமாவில் வேறென்ன வேண்டும்?

கோடை விடுமுறையில் ஒரு குதூகல சுற்றுலா பயணம் தரும் அனுபவத்தை திரையரங்கத்துக்குள் இரண்டு மணி நேரத்தில் கிடைப்பது நிச்சயம். படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அதைப் பற்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசி மகிழலாம். பெரியவர்கள் தாங்கள் சின்ன வயதில் படித்த ஜங்கிள் புக் கதைகள், அப்போது வந்த அனிமேஷன் படம், தூர்தர்ஷனில் வாரம் ஒருநாளுக்காக காத்திருத்து பார்த்த தருணங்களைப் பகிரலாம். பிள்ளைகளிடம் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது என்று கேளுங்கள். ஏன் என்று கேட்கத் தவறாதீர்கள். அவர்கள் சொல்லும் பதில்கள், உளவியல் ரீதியில் அவர்களைப் புரிந்துகொள்ள அதற்கேற்றபடி அணுகுவதற்கு துணைபுரியும்.

அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி, சோகம், கோபம், இரக்கம், வீரம், வஞ்சம் என மனிதர்களிடம் உள்ள அத்தனை உணர்வுகளையும் ஒற்றைச் சிறுவனையும் விலங்குகளையும் கொண்டு புரிந்துகொள்ளக் கூடிய நல்ல அனுபவத்தைத் தரும் இப்படத்தைத் திரையரங்குகளில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம். அது, இப்போதுள்ள பிள்ளைகள் பின்னாளில் அடுத்தத் தலைமுறைக்கு சிலாகித்துச் சொல்லக் கூடிய அற்புத சரித்திர அனுபவமாகவும் மாறக்கூடும்.

*

'இந்தப் படத்தை 3டி-யில் பார்க்கும்போது பார்வையாளர்கள் மீது மிருகங்கள் பாய்வதைப் போல மிகவும் பயமுறுத்துவதாக இருப்பதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது' என்று இந்திய தணிக்கை வாரியத்தின் தலைவர் பஹ்லாஜ் நிஹ்லானி சொல்லியிருப்பது நெருடலுக்குரியது.

இந்தியாவில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும் பெற்றோர் வழிகாட்டுதலுடன் தான் சிறுவர்கள் இப்படத்தைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் அன்றாட வாழ்வில் மிகக் கொடுமையான வன்முறைகளை மிகச் சாதாரணமாகக் கடந்துபோகக் கூடிய மனநிலையில் நம் குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் ஓர் இளம் தம்பதியை ஒரு கும்பல் வெட்டியை கொடூரக் காட்சிகளை நம் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. அதை கூட பெரியவர்கள் மட்டுமன்றி நம் குழந்தைகளும் 'ஹாயா'க கடந்து சென்றனர். 'இதைவிட செமத்தியான சீன் எல்லாம் நாங்க டெய்லி தமிழ் சினிமா மூலமா டிவிலயும் தியேட்டர்லயும் பார்க்கிறோமே!' என்று அவர்கள் மைண்ட் வாய்ஸ் சொல்வதை கேட்ச் பண்ண முடிகிறது.

பெரும்பாலும் ரவுடிகளை ப்ரொட்டாகனிஸ்டாக காட்டி ரத்தத்தைத் தெறிக்கவிடும் படங்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட நம் சிறுவர்களுக்கு, விலங்குகளின் தாவுவது அச்சுறுத்தும் என்பது கேலிக்குரியது மட்டுமல்ல; விவாதத்துக்குரியது.

நம் குழந்தைகள் வன்முறை முதலான அச்சுறுத்தல்களை விடவும் மோசனமானவற்றை எளிதில் கடந்துபோகும் பக்குவத்தைப் பெற்றிருப்பது தெளிவு. அதற்கு உதாரணமாக, பிரான்ஸில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அம்மா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மிக முக்கியமான பதிவு இது:

"பாடசாலையில் எனது பையனை, இனவாதம் (Racism) என்றால் என்ன? அது எந்தெந்த வழிகளில் ஒருவர்மீது செலுத்தப்படுகிறது? அதை எப்படி கடந்து போவது? என்று எழுத சொல்லியிருக்கிறார்கள். 

அவன் எழுதியிருந்ததை பார்த்தபோது மிக ஆச்சரியமாக இருந்தது; அதிலும் ஒருவர் தன்னை நிறரீதியாக கிண்டல் செய்யும்போது, தான் ''நன்றி'' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவதாய் குறிப்பிட்டிருந்தான். அதற்கு ஆசிரியர் மிகவும் பாராட்டியதாகவும் சொன்னான்.

இதே என்னை யாராவது நிறரீதியாக பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? என நினைத்துப் பார்க்கிறேன்... நாலு வார்த்தையில்லை, நாற்பது வார்த்தை பேசி, அந்த நபரின் நாலு தலைமுறையையும் இழுத்து தெருவில விட்டிருப்பேன்.

‪#‎பிள்ளைகள்‬ வளர்ந்துவிட்டார்கள், நான் இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கேனே மொமென்ட்."

ஒரு விதத்தில் இப்படத்துக்கு பெற்றோர் வழிகாட்டுதல் தேவைதான் என்பதை 'தி ஜங்கிள் புக்' படத்தில் வரும் சில அம்சங்களைப் பார்த்துச் சொல்ல விரும்புகிறேன். சில படங்களைப் பொறுத்தவரை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக கதையை அப்படியே எழுத்துவடிவில் சொன்னாலும் கூட, பார்க்கும்போது கிடைக்கும் மகத்தான அனுபவம் குறைந்துவிடாது. அப்படி ஒரு படம்தான் இதுவும் என்பதால் இந்தக் குறிப்பிட்ட ஸ்பாய்லரை வேறு வழியின்றி சொல்ல வேண்டிய நிலை எனக்கு.

அந்தச் சின்னஞ்சிறு மோக்லிக்கு பழிவாங்கல் புத்தி பெருகும் காட்சிகளும் அதன் விளைவுகளும் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் விளக்கி வழிகாட்டுதல் தரலாம். தன் வன்முறையைப் பாதையின் தப்பை உணர்ந்து, மீண்டும் மனிதம் நாடும் மோக்லியின் நிலையை விளக்கலாம். ஆனால், தன் அன்பான அணுகுமுறையைப் புரிந்துகொள்ளாத ஷேர்கானை வேறு வழியில்லாமல் வீழ்த்திட முடிவு செய்து மோக்லி களமிறங்கியதன் பின்னணியில் ரெளத்திரம் பழக வேண்டியதன் அவசியத்தை விளக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, கடைசியில் ஷேர்கான் வீழ்த்தப்பட்டதா? சாகடிக்கப்பட்டதா? என்பதை விளக்குங்கள். படத்தில் அது ஓபன் எண்ட் ஆக இருக்கும். சற்றே விவரம் அறிந்த பிள்ளைகளை விட்டுவிடுங்கள், சின்னஞ்சிறியவர்களாக இருந்தால், 'அந்தப் புலி கொல்லப்படவில்லை. ஜஸ்ட் வீழ்த்தப்பட்டது. அது அந்தக் காட்டுக்குள்தான் ஒடுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறது' என்று சொல்லிவைக்கலாம். இப்படியாக, நாம் பெற்றோர் வழிகாட்டுதல் என்ற அனுமதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னொரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். மனிதர்கள் போலவே வலம் வரும் விலங்குகளைக் காண தியேட்டருக்கு 'தி ஜங்கிள் புக்' பார்க்கப் போகிறோம். ஆனால், நம் சின்னஞ்சிறு மனிதர்களை விலங்குகள் போல மேய்க்கும் பெற்றோர்களைக் காணும்போது பற்றி எரிகிறது.

ம்... கடைசியாக ஒரு கற்பனை.

விலங்குகளால் ஆன ஒரு காட்டுக்கு ராஜாவாக ஒரு மனிதன் எப்படி ஆகிறான்? என்ற ஒன்லைனை யோசித்து, 'தி ஜங்கிள் புக்' கதைகளை வடித்த கிப்ளிங், இப்போது இருந்திருந்து அனுபவம் பெற்றிருந்தால் என்ன செய்திருப்பார்?

'காட்டில் இருந்து தவறி நாட்டுக்குள் வரும் ஷேர்கான், இங்கு நடக்கும் அமர்க்களங்களைப் பார்த்து நொந்து போய், இந்த மனிதர்களை ஒழுங்குபடுத்துவதற்காக, ஒரு புலி எப்படி நாட்டுக்கு ராஜாவாகிறது?' என்று 'தி கன்ட்ரி புக்' எழுதுவாரோ?

உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...

முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை |'ஆரண்ய காண்டம்' எனும் பெருமித சினிமாவும் தமிழக தேர்தலும்!

விடையற்ற ஒற்றை பதிலுடன் '101 கேள்விகள்'

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்