குஜராத்தின் முழு சோலார் கிராமம்: உலகின் முதல் கூட்டுறவு சங்க முயற்சி! 

0

குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள துண்டி கிராமத்தில் பசுமாடுகளும் எருமை மாடுகளும் மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். கோடைக் காலம் தாங்கமுடியாத வெப்பத்தை கொண்டுவரும் நிலையிலும் சுட்டெரிக்கும் சூரியனின் வருகையை இந்த கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். மின்சாரம், தண்ணீர், வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் துண்டி சூரியமின் உற்பத்திக்கான ஒரு முன்னுதாரண கிராமமாகவே விளங்குகிறது. 

இரண்டாண்டுகளுக்கும் முன்பு உலகின் முதல் சூரியஒளி மின் உற்பத்திக்கான கூட்டுறவு சங்கம் (DSUUSM) அறிமுகப்படுத்தப்பட்டபோது கிராமத்தின் விவசாயிகள் பயிர்களை மட்டுமே அறுவடை செய்து வந்தனர். இன்று சூரிய ஒளி மின் உற்பத்தியையும் மேற்கொண்டு வருவதாக, ’தி ஹிந்து’ தெரிவிக்கிறது.

இந்த விவசாயிகள் தங்கள் நிலங்களின் நீர்பாசனத்திற்கு சூரியஒளி பம்புகளையே பயன்படுத்துகின்றனர். பயன்பாட்டிற்குப் பிறகு மிஞ்சியிருப்பதை மாநில மின்சார வாரியத்திற்கே விற்கின்றனர். இது விவசாயத்துடன் ஒரு கூடுதல் வருவாயாக மாறியுள்ளது. விவசாயிகள் தங்களது போர்வெல்லில் இருந்து கிடைக்கும் உபரி பாசனநீரை விற்பனை செய்துவிடுகின்றனர்.

வழக்கமாக தண்ணீர் விற்பனை செய்யும் டீசல் பம்ப் உரிமையாளர்களில் பலர் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். நாங்கள் 250 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறோம். இது இவர்களது விலையைக் காட்டிலும் பாதியளவே ஆகும். இந்தப் பகுதியில் தண்ணீர் வாங்கும் 450 பேரில் 50% பேர் இந்த மலிவான விலையில் வாங்கி பயனடைகின்றனர் என்று சூரியஒளி மின்னுற்பத்தி செய்யும் தொழில்முனைவோர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

சில விவசாயிகள் எஞ்சிய மின்சாரத்தை ஒரு யூனிட் 7 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 50-60 கிலோவாட் சூரியஒளி மின்சாரத்தை விற்பனை செய்கின்றனர். சூரியஒளி மின்சார அமைப்பை நிறுவுவதற்காக வாங்கிய கடனை பெரும்பாலான விவசாயிகள் திருப்பி செலுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மின்சாரம் மற்றும் தண்ணீர் விற்பனை செய்வதன் வாயிலாக மட்டுமே 30,000 முதல் 1,30,000 ரூபாய் வரை ஈட்டுவதாக தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,800-2,000 ரூபாய் வரை ஈட்டப்படுவதாக ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச தண்ணீர் நிர்வாகக் கழகத்தின் ஆதரவின் கீழ் இந்தக் கூட்டுறவு சங்கமானது 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சூரியஒளி தொழில்நுட்பம் நிறுவப்பட்டதால் இந்த விவசாயிகள் தண்ணீர் பம்புகள் மற்றும் மின்சார விநியோக அமைப்புடன் (grid) சுயசார்புடன் இருக்க உதவுகிறது. இந்த விவசாயிகள் சூரியஒளி மின்னுற்பத்தி செய்யும் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். இதன் மூலம் அவர்களது வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதுடன் அவர்களது கிராமத்தின் பொருளாதார நிலையையும் மேம்பட்டுள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA