’கவுரவக் கொலைகளை தடுக்க அனைத்து கட்சிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’- மத்திய சமூகநிதி இணை அமைச்சர் 

0

கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க வழங்கப்பட்டுவரும் ரூ. 2.50 லட்சம் உதவித் தொகையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சமூகநிதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த உதவித் தொகை தமது அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சமூக நீதியை பேணிக்காக்க மாநில அரசுகள் கலப்புத் திருமணம் அதிகம் நடைபெறும் மாவட்டத்தை கண்டறிந்து அந்த மாவட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவருக்கு நிலம் அல்லது வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமது அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறும் கவுரவக் கொலைகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் கலைத்து இந்த கொடூர சம்பவங்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடஒதுக்கீடு அவசியம் என்று கூறிய அமைச்சர் 2011 – ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 16.6 சதவீதம் இடஒதுக்கீடு ஷெட்யுல்டு வகுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதே போல் ஷெட்யுல்டு பழங்குடியினருக்கு 8.4 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 52 சதவீதமும் ஆக மொத்தம் 77 சதவீதம் இட ஒதுக்கீடு இந்த சமுதாயத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆனால் தற்போது இந்த சமுதாயத்தினருக்கு வெறும் 49.5 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தினரும், மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்தினரும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் தொகை அடிப்படையில் உயர் வகுப்பு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கருத்து என்றார்.

தமது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகள் தமிழ்நாட்டில் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை 2015 – 2016 – ம் ஆண்டில் ரூ. 460 கோடி சுமார் 7.50 மாணவ மாணவியருக்கு ரூ 460 கோடி வழங்கியதாக அவர் கூறினார்.

கிரிக்கெட், கால்பந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் இடஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திய அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, இடஒதுக்கீடு அமுல் படுத்தப்பட்டாலின்றி இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகாது என்று கூறினார்.

சாதி, மதம், மொழி அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதி மன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை அமைச்சர் வரவேற்றார்.

நாடுமுழுவதும் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைப் பட்டியலிட்ட அமைச்சர் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,766 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.