2020-க்குள் ஆன்லைன் மூலம் ஃபேஷனில் 30 பில்லியன் டாலர்களை நுகர்வோர் செலவிடுவர்: பிசிஜி & ஃபேஸ்புக் அறிக்கை

0

அடுத்த மூன்றாண்டுகளில் ஆன்லைனில் ஃபேஷன் பிரிவில் வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இன்றைய 55-60 மில்லியனிலிருந்து 2020-ம் ஆண்டில் இரட்டிப்பாகி 130-135 மில்லியனாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களில் இரண்டில் ஒருவர் ’பேஷன் மற்றும் ஷாப்பிங்’ பிரிவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஃபேஸ்புக் வாயிலாக மட்டுமே இன்றைய தலைமுறையினரில் 85% பேஷனில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு தயாரிப்பு குறித்து தெரிந்துகொள்ளுதல், சக வயதினரின் தாக்கம் அல்லது சில பிரத்யேக ஆஃபர்கள் என டிஜிட்டல் தளம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டில் ஆன்லைனில் செயல்படுவோரில் 70% மக்கள் ஷாப்பிங் செய்ய ஆன்லைனையே பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபேஷன் பிரிவே அனைவரது பட்டியலிலும் முதலிடம் வகிக்கும். ஆன்லைன் ஷாப்பிங் உலகில் நுழைய விரும்புபவர்களில் மூன்று பேரில் ஒருவர் முதல் முறையாக வாங்குவதற்கு ஃபேஷன் பிரிவையே தேர்ந்தெடுக்கின்றனர் என்று BCG-ஃபேஸ்புக் தங்களது ‘ஃபேஷன் ஃபார்வர்ட் 2020’ அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடும் நுகர்வோரில் 85 சதவீதத்தினர் மொபைல் வாயிலாகவே ஷாப்பிங் செய்யவே விரும்புகின்றனர். இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மற்றும் போஸ்டன் கன்சல்டிங் க்ரூப் (BCG) ‘ஃபேஷன் ஃபார்வர்ட் 2020’ என்கிற அறிக்கை வாயிலாக சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஃபேஷன் சார்ந்த வணிகத்திற்கு மொபைல் புரட்சியை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். ஃபேஷனில் ஆர்வமுள்ள நுகர்வோர் வருங்காலத்தில் எவ்வாறு ஷாப்பிங் செய்வார்கள் என்பதையும் அது ஃபேஷன் வணிகத்திற்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கணிக்கிறது இந்த ஆய்வு அறிக்கை.

அறிக்கை வாயிலாக கண்டறியப்பட்ட சில முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. இந்தியர்கள் டிஜிட்டல் உலகில் கால்பதித்து ஆன்லைனில் பேஷன் ஷாப்பிங் செய்வதில் 87 சதவீத வளர்ச்சி காணப்படும்.

நகர்ப்புற பயனாளிகளில் 73 சதவீதத்தினரும் கிராமப்புற பயனாளிகளில் 87 சதவீதத்தினரும் இணைய பயன்பாட்டிற்கு மொபைல் சாதனத்தையே பயன்படுத்துகின்றனர். சந்தையில் ஸ்மார்ட்ஃபோன்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இணைய பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் இணையத்திற்கு மொபைலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.

2. டிஜிட்டலின் தாக்கத்தால் 2020-ல் ஃபேஷன் பிரிவில் 30 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.

இன்று இந்திய ஃபேஷன் துறை 70 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதில் 7 முதல் 9 பில்லியன் டாலர் வரை டிஜிட்டல் வாயிலாகவே பெறப்படுகிறது. இது நான்கு மடங்கு உயர்ந்து 2020-ல் 30 பில்லியன் டாலராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த ப்ராண்டட் அப்பாரல் சந்தையில் 60–70 சதவீதத்தை இந்தத் துறை உள்ளடக்கியிருக்கும்.

3. 2020-ல் இ-காமர்ஸ் நான்கு மடங்கு வளர்ச்சியடைந்து 12-14 பில்லியன் டாலரை எட்டிவிடும்.

ஒட்டுமொத்த ஃபேஷன் சந்தையில் 4-5 சதவீதத்திற்கு இ-காமர்ஸ் பங்களிக்கிறது. இது டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் ஒட்டுமொத்த விற்பனைக்கு இணையானதாகும். 2020-ல் ஆன்லைன் ஷாப்பிங் 12-14 பில்லியன் டாலராக உயர்ந்து இந்திய ஃபேஷன் சந்தையில் 11 – 12 சதவீதம் பங்களிக்கும். தற்போது 55-60 மில்லியனாக இருக்கும் நுகர்வோர் எண்ணிக்கையிலிருந்து புதிதாக ஷாப்பிங் செய்வோர் இணைவதால் 2020-ல் இருமடங்காக உயர்ந்து 130-135 மில்லியனாக இருக்கக்கூடும். இதனால் ஃபேஷன் இ-காமர்ஸ் பிரிவில் 40 சதவீத வளர்ச்சி இருக்கும். மேலும் தற்போது ஷாப்பிங் செய்வோர் அதிகம் பங்களிப்பதாலும் 25 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

4. நகர்புறங்களில் வசிப்போர் இணையம் பயன்படுத்தும் நேரத்தில் 40 சதவீதம் டிஜிட்டல் சார்ந்த மீடியாவில் செலவிடுகின்றனர். ஆனால் அப்பாரல் ப்ராண்ட் விளம்பரங்களுடன்கூடிய ஸ்டோர்களில் 10-15 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது

பயனர்களின் எண்ணிக்கை அதிவேகமாக வளரலாம் என்கிற கணிப்பை அறிக்கை வெளியிடுவதால் ப்ராண்ட்கள் டிஜிட்டல் தளத்தில் அதிகளவில் முதலீடு செய்யவேண்டும். பாரம்பரிய ஊடகங்களைக் காட்டிலும் டிஜிட்டல் தளங்களில் நுகர்வோர் அதிகம் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.

5. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது

2020-ல் அதிக பெண்கள், புறநகர் பகுதி மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஷாப்பர்கள், வயதானோர் என பலதரப்பட்ட மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வார்கள். இரண்டாம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோர் 50 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பார்கள். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரில் 35 வயதிற்கும் மேற்பட்டோர் 37 சதவீதம் பங்களிப்பார்கள்.

ஃபேஷன் இ-டெய்லர்ஸ்களுக்கு இது எதை உணர்த்துகிறது

பல இந்திய ரீடெய்லர்கள் ஏற்கெனவே ஆன்லைனில் செயல்பட்டு வந்தாலும் தங்களை மேலும் மேம்படுத்திக்கொண்டு டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான தேவை காணப்படுகிறது. உலகளவில் பல நிறுவனங்கள் டிஜிட்டல் சேனல்கள் வாயிலாக நுகர்வோரை சென்றடைந்துள்ளது. உதாரணத்திற்கு Nike நுகர்வோருடனான தொடர்பை அதிகரிக்க ஒரு ஒட்டுமொத்த டிஜிட்டல் கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளது.

மற்ற நிறுவனங்களும் ஆன்லைன் நுகர்வோரை ஈர்க்க வழக்கத்திற்கு மாறான பல வழிமுறைகளை பின்பற்றியுள்ளன.

2015-ம் ஆண்டு லெனோவோ தனது A7000 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியபோது Louis Santiago என்பவரை மையப்படுத்தி மிஷன் A7000 (Mission A7000) என்கிற ஒரு திரைப்படத்தை வெளியிட்டது. Santiago-வாக நடித்த ஹாலிவுட் ஸ்டார் Johnny Deep, படத்தின் கதாநாயகி பணத்திற்காக இவரை விட்டு பிரிந்து சென்றதும் இஸ்தான்புலில் தனித்திருந்தார். மிஷன் A7000 பார்த்தபிறகு அதன் முக்கிய கதாப்பாத்திரம் தொழில்நுட்பத்தை தவறாக பயனபடுத்தியதால் சென்சார் போர்ட் எவ்வாறு மொபைல் ஃபோனிற்கு தடை விதிக்க பரிந்துரைத்தது என்று Faking News ஒரு கதையை வெளியிட்டது. ஒரு காமிக் ஸ்ட்ரைப் ட்ரெய்லர் டிவிட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வெளியானதால் பலர் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கிற்காக புக் செய்தனர். விளைவு? ஜூலை 2015-ம் ஆண்டு லெனோவோ A7000 35,000 யூனிட்களை விற்பனை செய்ததுடன் அடுத்தகட்ட ஆன்லைன் விற்பனைகளுக்கான பதிவுகளும் குவிந்தது.

இந்திய சந்தையிலிருப்போர் டிஜிட்டல் வாயிலாக நுகர்வோருடனான தொடர்பை வலுப்படுத்த இதுபோன்ற புதுமையான முறைகளால் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தலாம். 

டிஜிட்டல் சார்ந்த தனிப்பட்ட தகவல்களை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர் தொடர்பை ஊக்குவிக்கலாம். நிறுவனங்கள் இப்படிப்பட்ட தனிப்பட்ட டேட்டாக்களை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் மூன்று முக்கிய பலன்கள்:

• வாடிக்கையாளரின் விவரங்களை அடிப்படையாகக்கொண்டு பல புதிய கூடுதல் பொருட்களை அறிமுகப்படுத்தி அவற்றை வாங்குவதற்கு ஊக்குவிக்கலாம்

• இடம், வாடிக்கையாளர் விருப்பம் மற்றும் பிற தகவல்கள் அடிப்படையில் குறிப்பிட்ட சூழலுக்கேற்ற தகவல்களை வாடிக்கையாளருக்கு அனுப்பலாம்

• வெளியேறும் நிலையிலிருக்கும் வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து அவர்களுடனான நல்லுறவை நீட்டிக்க சலுகைகளை வழங்கலாம்.

ஃபேஷன் துறையில் செயல்படுவோர் தயாரிப்புகளை டேட்டா அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். பிரிவுகளை முன்னிறுத்தி செயல்படுவதைக் காட்டிலும் தனிப்பட்ட நுகர்வோரை முன்னிறுத்திச் செயல்படத் துவங்கவேண்டும். தற்போது கிடைக்கும் டேட்டாக்களை ஆய்வு செய்வதன் மூலம் விற்பனையாளர்கள் ஸ்டோர் வகைப்படுத்துதலை மேம்படுத்த முடியும். ஸ்டோரின் வாடிக்கையாளர் குறித்த விவரங்கள், அவர்கள் விருப்பம் குறித்த தகவல்கள் மற்றும் டேட்டாவை அடிப்படையாகக் கொண்டு அவர்களது விருப்பத்தை கணிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஸ்டோரையும் தனிப்பட்ட முறையில் வகைப்படுத்தலாம். ஃபேஷனில் முன்னணியில் இருக்கும் Macy’s இப்படிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் ரீடெய்லர்ஸ் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பிரத்யேகமாகவும் வகைப்படுத்தலாம்.

ஃபேஸ்புக் நன்மைகள்

இன்று இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட 90 சதவீத இ-காமர்ஸ் பயனர்கள் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 184 மில்லியன் சந்தாதாரர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இதில் 97% மொபைல் சாதனத்தின் வாயிலாகப் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் பிசினஸில் பல தரப்பட்ட வாய்ப்புகள் உள்ளதால் ஒவ்வொருவரின் வணிகத்திற்கும் ஏற்றவாறான வாடிக்கையாளர்களை அணுகமுடியும். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீடியோ, புகைப்படம் மற்றும் பலவிதமான விளம்பரங்கள் வாயிலாக உங்களது ஃபேஷன் ப்ராண்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பிரத்யேக ஆஃபர்கள் மற்றும் அனுபவங்கள், மொபைல் சாதனத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கவனத்தை ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்த உதவும்.