ரூ.1.5 கோடி வரை ஆண்டு சம்பளத்துடன் ஐஐடி பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!    

ஐஐடி மற்றும் பிரபல தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கு சர்வதேச பணி வாய்ப்புகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது! 

0

ஐஐடி மாணவர்களை பணியிலமர்த்தும் முறை முழுவீச்சில் நடைபெறும் வேளையில், இந்த ஆண்டு சர்வதேச பணி வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறந்த தொழில்நுட்ப வளாகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த செயல்முறை துவங்கப்பட்ட மூன்று நாட்களிலேயே 1,500 வேலை வாய்ப்புகள் குவிந்துவிட்டன. பணி வாய்ப்பு எண்ணிக்கை மற்றும் ஊதியத் தொகையின் அடிப்படையில் பணியிலமர்த்தும் நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் முன்னணி வகிக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஜாம்பவான் மைக்ரோசாப்ட், இந்த ஆண்டு ஐஐடி பட்டதாரிகளுக்கு சர்வதேச பணி வாய்ப்பிற்காக ஆண்டிற்கு 1.5 கோடி ரூபாய் வரை சம்பளம் நிர்ணயித்து மிகச்சிறப்பான வாய்ப்பை வழங்கியுள்ளதாக ’பிசினஸ் டுடே’ தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்துடன்கூடிய சர்வதேச வேலை வாய்ப்பினை வழங்குகிறது ஊபர். Rubrik, Optiver, சிங்கப்பூரைச் சேர்ந்த டைனமிக் டெக்னாலஜி மற்றும் மைக்ரான் செமிகண்டக்டர் ஏசியா, ஜப்பானிய நிறுவனங்களான Works Applications, Mercari, SMS Data Tech போன்றவை பிற நிறுவனங்களாகும்.

இதுவரை Intel, EXL, Oyo Rooms, General Electric (GE) போன்ற நிறுவனங்களே ஐஐடி பட்டதாரிகளுக்கு பணி வழங்கும் முன்னணி நிறுவனங்களாக இருந்து வந்தது. இண்டெல் நிறுவனம் மட்டுமே ஐஐடி கரக்பூரில் இருந்து 29 பேரை பணியிலமர்த்தியுள்ளது. 

EXL வழங்கிய பணி வாய்ப்பின் மொத்த எண்ணிக்கை 35. எனினும் மைக்ரோசாஃப்ட் ஐஐடி ரூர்க்கி தொழில்நுட்ப வளாகத்தில் சர்வதேச பணிகள் உட்பட 31 பணி வாய்ப்பினை வழங்கியுள்ளது.

ஐஐடி டெல்லி மற்றும் மும்பையைப் பொருத்தவரை சுமார் 500 பணிகள் வழங்கப்பட்டுள்ளது. சம்மர் இண்டெர்ன்ஷிப் சமயத்தில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட பணி வாய்ப்புகள் (PPOs) இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

ஐஐடி குவாஹத்தி மற்றும் கான்பூரிலும் இந்த ஆண்டின் வேலை வாய்ப்புகளில் சர்வதேச பணி வாய்ப்புகள் இரட்டிப்பாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பணியிலமர்த்தும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ள சராசரி சம்பளத் தொகை 13-15 லட்ச ரூபாயாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான அதிகமான உள்ளூர் சம்பள நிர்ணயிப்பு 47 லட்ச ரூபாயாகும்.

“இதுவரை 310 உறுதியான பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளது. சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார் ஐஐடி கான்பூரின் ப்ளேஸ்மெண்ட்ஸ் தலைவர் சியாம் நாயர்.

கட்டுரை : THINK CHANGE INDIA